Published:Updated:

`ஆளுநர் எடுத்த அஸ்திரம்; பொங்கும் சிவசேனா, என்.சி.பி!' - மகாராஷ்டிராவில் புதிய திருப்பம்

கவர்னர் பி.எஸ். கோஷ்யரி
கவர்னர் பி.எஸ். கோஷ்யரி

``என்னால் அரசாங்கத்தை அமைக்க முடியாது' என்று ஒரு கட்சி சொல்வதற்கும், 'ஆம், என்னால் முடியும், ஆனால் எனக்கு அதிக நேரம் தேவை' என்று சொல்வதற்கும் ஒரு பெரிய வித்தியாசம் உள்ளது"

ஒரே கொள்கை , ஒரே சித்தாந்தங்களைக் கொண்ட கட்சிகளான பா.ஜ.க-வும் சிவசேனாவும் இரண்டாவது முறையாக பகையாளிகளாக மாறியுள்ளன. இதன்விளைவு மாநிலத்தில் 15 நாள்களுக்கு மேலாக அரசியல் சாசனப்படி ஆட்சி அமைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இருகட்சிகளுக்கும் இடையே டீல் பேசப்பட்டது, பின்னர் அதை இல்லை என மறுத்தது, பிடிவாதம், சர்ச்சை கருத்துகள், கூட்டணி மாற்றம் எனக்க் கடந்த 15 நாளும் மொத்த மகாராஷ்டிர அரசியலும் அரங்கம் நிறைந்த காட்சியாகவே பரபரத்துக் கொண்டிருந்தது.

பா.ஜ.க - சிவசேனா
பா.ஜ.க - சிவசேனா

தங்களுக்கு முதல்வர் பதவி வேண்டும் எனப் பிடிவாதம் பிடித்த சிவசேனா ஒருகட்டத்தில் பா.ஜ.க கூட்டணியை முறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியுடனும் காங்கிரஸுடனும் கூட்டணிக்கு ரெடியானதாகப் பேசப்பட்டது. அதற்கேற்றாற்போலவே மத்திய அமைச்சரவையிலிருந்து சிவசேனா வெளியேறியது. மத்திய கனரக தொழில் துறையில் அமைச்சராக இருந்த சிவசேனாவின் அரவிந்த் சாவந்த், தன் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் ஆளுநர் அழைப்பை ஏற்று சிவசேனா கவர்னர் பி.எஸ்.கோஷ்யரியைச் சந்தித்து தங்களை ஆட்சியமைக்க அழைக்குமாறு கடிதம் கொடுத்தது.

`பா.ஜ.க-வைக் கண்டுகொள்ளாத சிவசேனா; பிளான் பி!' - மகாராஷ்ட்ரா முதல்வர் பட்னாவிஸ் ராஜினாமா

இன்னும் இரண்டு நாள்களில், ஆட்சியமைக்கப் போதுமான பெரும்பான்மையை நிரூபிக்கக் கால அவகாசம் தேவை எனவும் ஆளுநரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், இதை ஏற்க மறுத்தார் ஆளுநர். மேலும், பா.ஜ.க, சிவசேனாவுக்கு அடுத்தபடியாக அதிக இடங்களில் வெற்றி பெற்ற தேசியவாத காங்கிரஸை ஆட்சியமைக்க அழைப்பு விடுத்தார். `இன்றைய தேதி முடிவதற்குள் என்.சி.பி, தங்களின் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்' என கவர்னர் மாளிகை தரப்பில் கெடு விதித்தாகக் கூறப்படுகிறது.

பா.ஜ.க - சிவசேனா
பா.ஜ.க - சிவசேனா

இந்தச் சூழ்நிலையில் தற்போது மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. எந்தவொரு கட்சியும் அல்லது கூட்டணியும் மாநிலத்தில் நிலையான அரசாங்கத்தை வழங்குவதற்கான நிலையில் இல்லாததால் ஜனாதிபதியின் ஆட்சி அமல்படுத்தப்பட வேண்டும் என்று ஆளுநர் கோஷ்யரி மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பியதன் அடிப்படையில் ஜனாதிபதி ஆட்சி அமலாகியுள்ளது. ``அரசியல் சாசனப்படி அரசாங்கம் அமைக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டேன். ஆனால், அந்த முயற்சிகள் வெற்றிபெறவில்லை. மாநிலத்தில் நிலையான அரசாங்கத்தை உருவாக்க முடியாது என்று ஒரு நிலைமை ஏற்பட்டுள்ளது" எனக் கூறி ஆளுநர் பரிந்துரைத்திருக்கிறார்.

`அலர்ட்’ சிவசேனா; தாக்கரேவின் நைட் விசிட்! - இறுதிக்கட்டத்தில் மகாராஷ்டிரா அரசியல் களம்

இதனால் கொதிப்படைந்துள்ள சிவசேனாவும் தேசியவாத காங்கிரஸும் ஆளுநரின் நடவடிக்கையை விமர்சித்துள்ளன. ஆளுநருக்கு எதிராக சிவசேனா நீதிமன்றப் படியேறி உள்ள நிலையில் என்.சி.பியோ, ``இரவு 8:30 மணி வரை நேரம் இருப்பதாகக் கூறிவிட்டு தற்போது ஜனாதிபதி ஆட்சி அமல் என்கிறார்கள்" எனப் புலம்பி வருகிறது. ``ஜனாதிபதியின் ஆட்சி என்பது கடைசி முயற்சியாக இருக்க வேண்டும். `என்னால் அரசாங்கத்தை அமைக்க முடியாது' என்று ஒரு கட்சி சொல்வதற்கும், 'ஆம், என்னால் முடியும், ஆனால் எனக்கு அதிக நேரம் தேவை' என்று சொல்வதற்கும் ஒரு பெரிய வித்தியாசம் உள்ளது" என்று காங்கிரஸ் எம்.பி.யும் மூத்த வழக்கறிஞருமான அபிஷேக் மனு சிங்வியும் இந்தச் செயலைக் கண்டித்துள்ளார்.

உள்துறை அமைச்சகம்
உள்துறை அமைச்சகம்

ஆனால் விமர்சனங்களை மறுத்துள்ள உள்துறை அமைச்சகமோ, ``காலை 11:30 மணிக்கு என்.சி.பி தலைவர்கள் ஆளுநரைச் சந்தித்தபோது பெரும்பான்மையை நிரூபிக்க இன்னும் மூன்று நாள்கள் அவகாசம் கோரினர். அதனாலேயே, ஜனாதிபதி ஆட்சியைப் பரிந்துரைக்க ஆளுநர் கோஷ்யரி முடிவு செய்தார். இன்று பிற்பகல் ஆளுநரிடமிருந்து அறிக்கை பெறப்பட்டது. அதன்பின்னரே மத்திய அமைச்சரவை கூடி, அதைக் கருத்தில் கொண்டு, ஜனாதிபதியின் ஆட்சியைப் பரிந்துரைத்தது.

ஜனாதிபதி ஆட்சியை ஆளுநர் பரிந்துரைத்ததன் அடிப்படை என்னவென்றால் அவரது மதிப்பீட்டில் எந்தவொரு கட்சியும் அல்லது கூட்டணியும் அரசாங்கத்தை அமைப்பதற்கான பெரும்பான்மையைக் கொண்டிருக்கவில்லை என்பதே. அரசியலமைப்பின் விதிகளின்படி மாநில நிர்வாகத்தைச் செயல்படுத்த முடியாது என்பதை ஆளுநர் உணர்ந்ததாலே இந்தப் பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது. மாற்று வழி என்பது இல்லை. அதனால் ஆளுநர் அரசியலமைப்பின் 356வது பிரிவின் கீழ் அறிக்கையை அனுப்பினார். எந்தவொரு கட்சியும் தனது பெரும்பான்மையை நிரூபிக்கும்போது ஜனாதிபதியின் ஆட்சி திரும்பப்பெற்றுக்கொள்ளப்படும்" எனக் கூறப்பட்டுள்ளது.

ஆட்டம்காட்டும் சிவசேனா; ஆடிப்போன பி.ஜே.பி!- மகாராஷ்டிராவில் பலிக்காத அமித் ஷா வியூகம்
அடுத்த கட்டுரைக்கு