Election bannerElection banner
Published:Updated:

``நான் பிரதமராவது பெரிய விஷயம் கிடையாது!’’ - சரத்குமார் நம்பிக்கை!

சரத்குமார்
சரத்குமார்

``எதையுமே நடக்கும் என்று பாசிட்டிவாகத்தான் பார்க்க வேண்டும். அறிவு, ஆற்றல், திறமை உள்ளவன்தான் இந்த சரத்குமார். கடந்த காலத்தில் தேவேகவுடா, ஐ.கே.குஜ்ரால் எல்லாம் பிரதமர் ஆகவில்லையா!’’ என்று கேட்கிறார் ச.ம.க தலைவர் சரத்குமார்.

தி.மு.க., அ.தி.மு.க கூட்டணிக் கட்சிகளுக்கிடையேயான தொகுதிப் பங்கீடுப் பேச்சுவார்த்தைகள் சூடுபிடிக்க ஆரம்பித்திருக்கின்றன. `பேச்சுவார்த்தையை சீக்கிரம் ஆரம்பியுங்கள்!' என்று வெளிப்படையாகவே கேட்டுப்பார்த்து ஓய்ந்துவிட்டது தே.மு.தி.க.

`அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி’த் தலைவர் சரத்குமார் 'அ.தி.மு.க-வில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை...' என்று தனது ஆதங்கத்தை வெளிக்காட்டியதோடு, சசிகலாவையும் நேரில் சந்தித்து அ.தி.மு.க தலைமைக்கு `ஷாக்' கொடுத்துப் பார்த்தார். ஆனாலும் பாசிட்டிவாக எந்தவொரு சிக்னலும் வராததையடுத்து, கூட்டணியிலிருந்து வெளியேறி `இந்திய ஜனநாயகக் கட்சி'யோடு கைகோத்து 3-வது அணியை உருவாக்கும் முயற்சியில் இறங்கிவிட்டார்.

சில நாள்களுக்கு முன்புவரை அ.தி.மு.க கூட்டணியில் இருந்த ச.ம.க தலைவர் நடிகர் சரத்குமாரிடம் எடுத்த பேட்டி இது...

ஜெயலலிதா
ஜெயலலிதா

``கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலிலும்கூட 'தனித்துப் போட்டி' என்று அறிவித்த ச.ம.க., பின்னர் திடீரென முடிவை மாற்றி அ.தி.மு.க கூட்டணியில் போட்டியிட்டது... ஏன் இந்தக் குழப்பம்?’’

``கடந்த 10 ஆண்டுகாலமாக நாங்கள் அ.தி.மு.க கூட்டணியில்தான் இருந்துவந்தோம். 2016 தேர்தல் நெருக்கத்திலும் அன்றைய அ.தி.மு.க கூட்டணிப் பேச்சுவார்த்தையை உரிய நேரத்தில் ஆரம்பிக்கவில்லை. எனவே, தனித்துப் போட்டி என்ற முடிவுக்கு தள்ளப்பட்டோம். ஆனால், அதன் பிறகு திடீரென ஜெயலலிதா எங்களை நேரில் அழைத்துப் பேசிவிட்டார். எனவே, ஏதோவொரு காரணத்தால் ஏற்பட்டுவிட்ட சின்னதொரு தடங்கல்தான் இது என்ற புரிதலோடு எங்கள் முடிவை மாற்றிக்கொண்டு, அ.தி.மு.க கூட்டணியிலேயே போட்டியிட்டோம்!’’

`` `பிரதமர் ஆகும் லட்சியம் இருக்கிறது’ என்று ஏற்கெனவே கூறியிருந்தீர்களே... இப்போதும் அந்த ஆசை இருக்கிறதா?’’

``ஆசை இருப்பவன்தான் மனிதன். லட்சியம் என்ற ஒன்று இருந்தால்தானே அதை நோக்கிப் பயணிக்கமுடியும்... `ஆஸ்கர் விருது வாங்க எனக்கு ஆசை' என்று நான் சொன்னபோதுகூட எல்லோரும் சிரித்தார்கள். ஆனால், அதன்பிறகு ஏ.ஆர்.ரஹ்மான், ரசூல் பூக்குட்டி போன்றோர் ஆஸ்கர் வாங்கவில்லையா... இப்போதும்கூட `பொன்னியின் செல்வன்' படத்தில் நடித்துவருகிறேன். அதிலுள்ள யாரேனும் ஒருவருக்கு ஆஸ்கர் கிடைக்க வாய்ப்பு இருக்கிறதுதானே? `எவரெஸ்ட்டில் ஏற வேண்டும்' என்ற லட்சியம் இருந்தால்தானே, கஞ்சன் ஜங்காவிலாவது ஏற முடியும். ஆக, எதையுமே நடக்கும் என்று பாசிட்டிவாகத்தான் பார்க்க வேண்டும். அறிவு, ஆற்றல், திறமை உள்ளவன்தான் இந்த சரத்குமார். கடந்த காலத்தில் தேவேகவுடா, ஐ.கே.குஜ்ரால் எல்லாம் பிரதமர் ஆகவில்லையா! எனவே, பாரதப் பிரதமராவது இந்தக் காலகட்டத்தில் பெரிய விஷயம் ஒன்றும் கிடையாது!’’

ராதிகா - சரத்குமார்
ராதிகா - சரத்குமார்

``ச.ம.க முதன்மை துணைப் பொதுச்செயலாளராக ராதிகா சரத்குமாருக்கு பதவி கொடுக்கப்பட்டிருக்கிறதே?’’

``நான் தி.மு.க-வில் இணைவதற்கு முன்பே, அந்தக் கட்சிக்காக மிகப்பெரிய அளவில் பிரசாரம் செய்துவந்தவர் ராதிகா. இத்தனைக்கும் தி.மு.க-வில் அவருக்கென்று எந்தப் பதவியும் வழங்கப்படவில்லை. ஆனாலும்கூட அரசியல் மீதான ஆர்வத்தில் இந்தப் பணியை அவர் செய்துவந்திருக்கிறார். இந்தத் தகுதிகளின் அடிப்படையில்தான் அவருக்கும் கட்சியில் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே அரசியல் களம்கண்டவர், மக்களைச் சந்தித்தவர், அவருடைய தந்தை தி.க பாரம்பரியத்திலிருந்து வந்தவர். ஆக, இப்படி அரசியல் அனுபவம் வாய்ந்த ஒருவரை ச.ம.க பயன்படுத்திக்கொள்ளவில்லை என்றால், அதுதான் தவறு!''

``முழு நேர அரசியலில் ஈடுபடுவதற்காகவே சீரியல் நடிப்பிலிருந்து விலகுகிறேன் என ராதிகா சரத்குமார் பேட்டியளித்திருக்கிறாரே?’’

``கொரோனா ஊரடங்கு என்ற நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்போது சீரியல் படப்பிடிப்புகள் ஆரம்பித்திருக்கின்றன. எனவே, தொடர்ந்து ஓய்வின்றி வாரம் முழுவதும் நடித்துக் கொடுக்க வேண்டியிருக்கிறது. இதற்கிடையே ராடன் நிறுவனப் பணிகளையும் கவனிக்க வேண்டும். குடும்பத்தினரோடு நேரம் செலவழிக்க வேண்டும். நடிப்புத்துறையிலேயே சினிமா உள்ளிட்ட பல்வேறு தளங்களிலும் அவரது பணி இருக்க வேண்டும். அரசியலிலும் ச.ம.க மகளிரணிச் செயலாளர் என்ற நிலையிலிருந்து முதன்மை துணைப் பொதுச்செயலாளர் என்ற கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது. எனவே, அரசியலிலும் எனக்குத் துணையாக கூடுதல் நேரம் பணியாற்ற வேண்டும். இப்படிப் பல்வேறு காரணங்கள் இருந்ததால், தற்போதைக்கு சீரியல் நடிப்பிலிருந்து கொஞ்சம் விலகியிருக்கலாம் என்ற முடிவை எடுத்திருக்கிறார். அவ்வளவுதான்!’’

மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

``தி.மு.க தலைவர் இன்று வேல் பெறுவார்; நாளை காவடி தூக்குவார் ஆனாலும், மக்கள் தி.மு.க-வை நம்ப மாட்டார்கள் என்று பேசியிருக்கிறீர்களே?’’

``கோயிலுக்குப் போக மாட்டோம்; சாமி கும்பிட மாட்டோம். நாங்களெல்லாம் தி.க-விலிருந்து வந்தவர்கள் என்றவர்கள், தி.மு.க-வினர். பொட்டு வைத்திருப்பவர்களைக்கூட ஒரு மாதிரியாகப் பார்க்கும் காலகட்டமெல்லாம் தி.மு.க-வில் இருந்தது. ஆனால், இன்றைக்கு தி.மு.க தலைவரே கையில் வேல் ஏந்தி நிற்கிறார். ஏன்... பூரணகும்ப மரியாதை கொடுத்தபோது, `சாமி உள்ளிட்ட மூட நம்பிக்கை எனக்குக் கிடையாது' என்று சொல்லி தொடவே மறுத்துவிட்டவர் கமல்ஹாசன். அவரைப்போல் உறுதியாக இல்லாமல், தேர்தலுக்காக கொள்கையிலிருந்து ஏன் இப்படி மாறிவிட்டீர்கள் என்றுதான் கேட்கிறேன்!’’

``தி.மு.க தலைவர் வேல் ஏந்தியதைப் பற்றி கேள்வி கேட்கிற சரத்குமார், அ.தி.மு.க-விலுள்ள தலைவர்களின் கடவுள் பக்தி குறித்துக் கேள்வி கேட்பதில்லையே?’’

``அ.தி.மு.க-வில் யாரும் `கடவுள் இல்லை... சாமி பக்தி கூடாது’ என்றெல்லாம் சொல்லவில்லையே?’’

யாக பூஜையில் ராஜேந்திர பாலாஜி
யாக பூஜையில் ராஜேந்திர பாலாஜி

``தி.மு.க-வின் கொள்கையும்கூட, 'ஒன்றே குலம்; ஒருவனே தேவன்'தானே?’’

``அப்படி முதலில் சொன்னார்கள். ஆனால், அதன் பிறகு `யாரும் சாமியே கும்பிடக் கூடாது’ என்றுதானே சொல்லிவந்தார்கள். நான் தி.மு.க-வில் இருந்தபோது, `ஏன் பொட்டு வைத்துக்கொண்டு வருகிறீர்கள்?’ என்றெல்லாம் என்னிடம் கேட்டவர்கள்... இன்றைக்கு இப்படி மாறிவிட்டார்களே..! காஞ்சியில் நான் பெரியவரைப் பார்த்துவிட்டு வந்ததைக்கூட, அன்றைக்குக் கேள்வி கேட்ட கட்சி தி.மு.க. ஆக, தேர்தல் என்று வந்துவிட்டால் தி.மு.க என்ன வேண்டுமானாலும் செய்யும் என்பதைத்தான் நான் சொல்லியிருக்கிறேன்!’’

மகாராஷ்டிரா: 28 மாவட்டங்களில் அதிகரித்த கொரோனா பரவல்! - பள்ளித் தேர்வுகள் ரத்தா?

``தேவேந்திர குல வேளாளர் பெயர் மாற்றக் கோரிக்கை, வன்னியர்களுக்கான உள் இட ஒதுக்கீடு உள்ளிட்ட விஷயங்களை எப்படிப் பார்க்கிறீர்கள்?’’

``சமத்துவ மக்கள் கட்சி என்ற பெயரை வைத்துக்கொண்டு சாதி பற்றிப் பேசவோ அல்லது கருத்து சொல்லவோ நான் தயாராக இல்லை. ஏனெனில், இது ரொம்பவும் சென்சிட்டிவான விஷயம். சாதியப் பிரச்னை என்பது மிகப்பெரிய சப்ஜெக்ட். இட ஒதுக்கீடு, உள் இட ஒதுக்கீடு என எல்லாவற்றையும் அலசி ஆராய்ந்துதான் நாம் இதைப் பற்றிப் பேச வேண்டியிருக்கும்.

மருத்துவர் ராமதாஸ்
மருத்துவர் ராமதாஸ்

டாக்டர் ராமதாஸ் இப்போது உள் இட ஒதுக்கீடு கேட்கிறார் என்றால், பின்னர் மற்ற சாதியினரும் இதேபோல் உள் இட ஒதுக்கீடு கேட்கலாம். நல்ல கல்வி, வேலைவாய்ப்பு, ஊதியம் என அனைத்துவகையிலும் எல்லோரும் உயர்நிலையை அடைய வேண்டும் என்று நினைக்கிற எனக்கு, சாதி அடையாளக் குறுக்கீடு என்பது மிகப்பெரிய பிரச்னை. ஆனாலும் தொன்றுதொட்டு தங்களுக்கு இருந்துவரும் உரிமைகளைக் காத்துக்கொள்ள வேண்டும்; இனத்தைக் காத்துக்கொள்ள வேண்டும் என்ற நிலைமைக்கு தமிழ்நாடு தள்ளப்பட்டுவிட்டதோ என்று சிந்திக்க வைத்திருக்கிறது!’’

`தி.மு.க கூட்டணியில் மக்கள் நீதி மய்யம்?' - விளக்கும் கமீலா நாசர்

``அ.தி.மு.க அமைச்சரவையிலேயேகூட குறிப்பிட்ட சமூகங்களைத் தவிர பிற சமூகத்தினருக்கு உரிய பிரதிநிதித்துவம் இல்லையே?’’

``சாதி என்பது அவரவர் உள்ளத்தின் அடித்தளத்தில் இருந்தால் போதும்; அதுவே வெறியாக மாறிவிடக்கூடாது. ஆனால், எல்லாத் தரப்பினருக்குமே `நம்மாளு வரவேண்டும்' என்ற எண்ணங்கள் இருக்கும். நான் தி.மு.க-வில் இருந்தபோதுகூட, `சரத்குமாரை அமைச்சராக்க வேண்டும்!' என்று சங்கத்திலிருந்து போஸ்டர் ஒட்டியிருந்தார்கள். இது பெரிய சர்ச்சையானதும் கருணாநிதிதான் முற்றுப்புள்ளி வைத்தார். எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று நினைப்பவன்தான் நான். எனவே, இது போன்ற விஷயங்களில் நான் கருத்து சொல்ல விரும்புவதில்லை!’’

சரத்குமார்
சரத்குமார்

``ஆலங்குளம் தொகுதியில் சரத்குமார் போட்டியிடவிருப்பதாக செய்திகள் வெளிவருகின்றனவே?’’

``தென்காசியின் நான் நின்றபோதே, `ஆலங்குளம் தொகுதியிலும் நீங்கள் நிற்க வேண்டும்' என்று சொன்னார்கள். இப்போதும் எங்கள் கட்சித் தொண்டர்கள் சங்ககிரி, வடசென்னை என ஆங்காங்கே பல தொகுதிகளிலும் என்னை நிற்கச் சொல்லிக் கேட்கிறார்கள். ஆனால், எந்தத் தொகுதியில் நிற்பது என்று தற்சமயம்வரை நான் எந்த முடிவும் எடுக்கவில்லை. மார்ச் 3-ல் ச.ம.க பொதுக்குழுவில்தான் அனைத்து முடிவுகளும் எடுக்கப்படும்!’’

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு