புதிய குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 18-ல் நடந்தது. இந்தத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில், ஒடிசாவின் பழங்குடி இனத்தைச் சேர்ந்த திரெளபதி முர்மு வெற்றிபெற்று கடந்த ஜூலை 25-ல் பதவியேற்றார். இந்த நிலையில், குடியரசு துணைத் தலைவர் வெங்கைய நாயுடுவின் பதவிக்காலம் ஆகஸ்ட் 10-ல் முடிவுக்கு வருகிறது. இதையடுத்து நடைபெற்ற குடியரசு துணைத் தலைவர் தேர்தலில், தே.ஜ கூட்டணி வேட்பாளர் ஜக்தீப் தன்கர் வெற்றிபெற்றார்.

மாநிலங்களவையில் வெங்கைய நாயுடுவுக்கு வழியனுப்பும் விழா இன்று நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் பிரதமர் மோடி, ``குடியரசு துணைத் தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான வெங்கைய நாயுடுவுக்கு நன்றி கூற நாம் அனைவரும் இன்று கூடியிருக்கிறோம். இந்த அவையின் உணர்ச்சிகரமான தருணம் இது. இந்த அவையில் பல்வேறு வரலாற்று தருணங்கள் உங்கள் முன்னிலையில் நடந்துள்ளன.
நீங்கள் அரசியலிருந்து ஓய்வுபெற்றிருக்கிறீர்கள். ஆனால் பொது வாழ்விலிருந்து ஓய்வு பெற்றிருக்கவில்லை என்று எப்போதும் கூறிவருகிறீர்கள்... உங்களின் பதவிக்காலம் முடிவுக்கு வரலாம். ஆனால் உங்கள் அனுபவங்கள் இந்த தேசத்தை இன்னும் பல ஆண்டுகளுக்கு வழிநடத்தும். குடியரசுத் துணைத் தலைவராக வெங்கைய நாயுடு சிறப்பாகச் செயல்பட்டார்.

இளைஞர்களுடன் வெங்கைய நாயுடுவுக்கு நல்ல புரிதல் இருக்கிறது. கடும் உழைப்பு மற்றும் விடா முயற்சி மூலம் அனைத்துப் பொறுப்புகளையும் சிறப்பாகக் கையாண்டவர். நல்ல திட்டங்களை மேம்படுத்துவதற்காகச் சிறப்பு ஆலோசனைகளை வழங்கியவர். நான் பல ஆண்டுகளாக வெங்கைய நாயுடுவுடன் நெருக்கமாகப் பணியாற்றியிருக்கிறேன். அவர் பல்வேறு பொறுப்புகளை ஏற்று, அவை ஒவ்வொன்றையும் மிகுந்த அர்ப்பணிப்புடன் நிறைவேற்றியதையும் நான் பார்த்திருக்கிறேன்" என்றார்.