Published:Updated:

ஜம்மு காஷ்மீர்: தேர்தல், சிறப்பு அந்தஸ்து? காஷ்மீர் தலைவர்களுடன் ஆலோசனை; மோடியின் திட்டமென்ன?

மோடி
மோடி

சிறப்பு அந்தஸ்து ரத்து செய்ப்பட்டு, 22 மாதங்களுக்குப் பிறகு ஜம்மு காஷ்மீர் அரசியல் தலைவர்களுடன் முதன்முறையாக பிரதமர் மோடி டெல்லியில் இன்று ஆலோசனை நடத்துகிறார். சிறப்பு அந்தஸ்து மீண்டும் வழங்கப்படுமா?

ஜம்மு காஷ்மீருக்கு, பிரிவு 370-ன் கீழ் வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ய வேண்டும் என்பது பா.ஜ.க-வின் நீண்டகாலக் கோரிக்கை. அது, பல தேர்தல்களில் பா.ஜ.க-வின் முக்கிய வாக்குறுதியாகவும் இருந்துவந்தது. இந்தநிலையில், மத்தியில் இரண்டாவது முறையாக மோடி தலைமையில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பிறகு 2019-ம் ஆண்டு, ஆகஸ்ட் 5-ம் தேதியன்று ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து அதிரடியாக ரத்துசெய்யப்பட்டது. பிரிவு 370 மற்றும் 35 ஏ ஆகியவை விலக்கிக்கொள்ளப்பட்டன. மோடி அரசின் அந்த நடவடிக்கைக்கு வலதுசாரிகளைத் தவிர, இந்தியா முழுவதும் கடுமையான எதிர்ப்பு குரல்கள் எழுந்தன.

ஜம்மு காஷ்மீர்
ஜம்மு காஷ்மீர்

அதிரடியான அந்த நடவடிக்கையையொட்டி, முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெஹ்பூபா முப்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான முகமது யூசுப் தாரிகாமி உட்பட ஏராளமான தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். ஜம்மு காஷ்மீர் முழுவதும் ஊரடங்கு போடப்பட்டு, ராணுவம் மற்றும் பாதுகாப்புப் படைகள் குவிக்கப்பட்டன. இன்டர்நெட் உட்பட தொலைத் தொடர்புகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டன. ஜம்மு காஷ்மீரில் என்ன நடக்கிறது என்பது வெளியுலகுக்குத் தெரியவில்லை.

ஜம்மு காஷ்மீர் இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது. ஜம்மு - காஷ்மீர் ஒரு யூனியன் பிரதேசமாகவும், லடாக் ஒரு யூனியன் பிரதேசமாகவும் மாற்றப்பட்டன. சில மாதங்களுக்குப் பிறகு, வீட்டுக்காவலில் இருந்த பரூக் அப்துல்லா உள்ளிட்ட தலைவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். தீவிரவாதம், ஊரடங்கு, பாதுகாப்புப்படைகளின் அத்துமீறல்கள் போன்றவற்றால் பாதிக்கப்பட்டிருந்த பள்ளத்தாக்குப் பிரதேசமான ஜம்மு காஷ்மீர், 2019-ம் ஆண்டு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு மிக மோசமான விளைவுகளைச் சந்தித்துவருகிறது. பிரதேச மக்களின் முக்கிய வாழ்வாதாரமாக விளங்கும் விவசாயம், தோட்டக்கலை, சுற்றுலா உள்ளிட்ட துறைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

ஜம்மு காஷ்மீர்
ஜம்மு காஷ்மீர்

சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு ஜம்மு காஷ்மீரில் அமைதி நிலவுவதாக மத்திய ஆட்சியாளர்கள் கூறுகிறார்கள். ஆனால், இங்கு நிலவும் அமைதி, துப்பாக்கிமுனையில் அச்சுறுத்தி மக்களின் குரல்களை ஒடுக்குவதன் மூலமாக ஏற்பட்டுள்ள அமைதி என்று அங்குள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கூறுகிறார்கள். மத்திய அரசின் நடவடிக்கைகளை எதிர்த்துவரும் காஷ்மீர் தலைவர்கள், கடந்த 22 மாதங்களாக அறிவிக்கப்படாத எமர்ஜென்சியில் ஜம்மு காஷ்மீர் இருப்பதாகவும் குற்றம்சாட்டுகிறார்கள்.

2019-ம் ஆண்டு, ஆகஸ்ட் 5-ம் தேதி மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கை ஜம்மு காஷ்மீரில் சமூகரீதியாகவும், பொருளாதாரரீதியாகவும், அரசியல்ரீதியாகவும் பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. படகு உரிமையாளர்கள், படகோட்டிகள், விடுதிகள், வாடகை கார் ஓட்டுநர்கள், வியாபாரிகள் எனச் சுற்றுலா துறையைச் சார்ந்த ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வறுமையில் தள்ளப்பட்டுள்ளதாகச் செய்திகள் வந்தன. சிறப்பு அந்தஸ்து ரத்துசெய்யப்பட்ட பிறகு அமல்படுத்த ஊரடங்கு காரணமாக ரூ.40,000 கோடி அளவுக்குப் பொருளாதார இழப்பு ஏற்பட்டிருப்பதாக ஜம்மு காஷ்மீர் வர்த்தக சபை கூறியிருக்கிறது. இந்தியாவின் மற்ற பகுதிகளைக் காட்டிலும், ஜம்மு காஷ்மீரில் வேலையின்மை விகிதம் இரண்டு மடங்கு அதிகமாக இருப்பதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. நிறைய இளைஞர்கள் தீவிரவாத அமைப்புகளில் சேர்ந்துவருவதாகவும் செய்திகள் வருகின்றன.

ஜம்மு காஷ்மீர்
ஜம்மு காஷ்மீர்

இத்தகைய மோசமான சூழலில், அங்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு கிடையாது. இது அங்குள்ள சிக்கல்களையும் பிரச்னைகளையும் மேலும் மோசமான சூழலுக்குக் கொண்டுசெல்லும் நிலையில்தான், பிரதமர் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. ஜம்மு காஷ்மீர் பிரதேசத்தின் முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கிறார்கள்.

தேசிய மாநாடு கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான பரூக் அப்துல்லா தலைமையில் கடந்த ஆண்டு குப்கார் கூட்டணி ஏற்படுத்தப்பட்டது. முன்னாள் முதல்வர் மெஹ்பூபா முப்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட ஐந்து கட்சிகள் அந்தக் கூட்டணியில் இடம்பெற்றுள்ளன.

ஜம்மு காஷ்மீர் நிலைமைகள் குறித்து விவாதிப்பதற்காக பிரதமர் மோடி தலைமையில் ஜூன் 24-ம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடக்கவிருப்பதாக சமீபத்தில் செய்திகள் வந்தன. அந்தக் கூட்டத்தில் பங்கேற்குமாறு முக்கியக் கட்சிகளின் தலைவர்களுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்தது.

அதைத் தொடர்ந்து, கூட்டத்தில் பங்கேற்பது தொடர்பாக குப்கார் கூட்டணித் தலைவர்கள் கடந்த 22-ம் தேதி ஸ்ரீநகரிலுள்ள பரூக் அப்துல்லா வீட்டில் ஆலோசனை நடத்தினர். முன்னாள் முதல்வர் மெஹ்பூபா முப்தி, சி.பி.எம் மாநிலச்செயலாளர் முகமது யூசுப் தாரிகாமி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்ற அந்தக் கூட்டத்தில், மோடி தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பது என்று முடிவுசெய்யப்பட்டது.

ஜம்மு காஷ்மீர்
ஜம்மு காஷ்மீர்

பிரதமர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தையொட்டி டெல்லி அரசியல் வட்டாரம் இன்று பரபரப்புடன் காணப்படுகிறது. பரூக் அப்துல்லா, முகமது யூசுப் தாரிகாமி உள்ளிட்ட தலைவர்கள் ஸ்ரீநகரிலிருந்து டெல்லி வந்தனர். துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹாவும் டெல்லி வந்தார். கூட்டத்துக்கு முன்பாக பிரதமர் மோடியுடன் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை நடத்தினார்.

செந்தில்பாலாஜி விளக்கம் சரியா? 
'அணிலாடும் மின்கம்பம்; மின்வெட்டுக்கு காரணமா?- விளக்கும் பொறியாளர்

காங்கிரஸ் கட்சியின் ஜம்மு காஷ்மீர் மாநிலத் தலைவரான குலாம் நபி ஆசாத், ``2019 நடவடிக்கைக்குப் பிறகு ஏற்பட்ட நிகழ்வுகளால் ஜம்மு காஷ்மீர் மக்கள் அதிர்ச்சியடைந்தனர். மாநிலத்தின் பிரச்னைகளை மத்திய அரசிடம் தெரிவிப்போம்” என்று கூறினார். ``2019, ஆகஸ்ட் 5-ம் தேதிக்கு முன்பிருந்த நிலையை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்பதுதான் எங்களின் முக்கியக் கோரிக்கை” என்று கூறிய முகமது யூசுப் தாரிகாமி, ``பிரிவு 370 மற்றும் 35 ஏ ரத்து நடவடிக்கை கைவிடப்பட வேண்டும். ஜம்மு காஷ்மீருக்கான சிறப்ப அந்தஸ்து மீண்டும் வழங்கப்பட வேண்டும். இதை நாங்கள் பிரதமர் தலைமையிலான கூட்டத்தில் வலியுறுத்துவோம்” என்று கூறினார்.

ஜம்மு காஷ்மீர்
ஜம்மு காஷ்மீர்

பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பிறகு ஜம்மு காஷ்மீர் இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது. இப்போது, ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படுவது, பிறகு அங்கு தேர்தல் நடத்துவது குறித்து பிரதமர் தலைமையிலான இன்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது. மீண்டும் மாநில அந்தஸ்து, சட்டமன்றத் தேர்தல் ஆகிய இரண்டையும் அரசியல் கட்சிகள் ஏற்றுக்கொள்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. அத்துடன், பிரிவு 370 மற்றும் 35 ஏ ஆகியவை மீண்டும் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை காஷ்மீர் தலைவர்கள் வலுவாக முன்வைப்பார்கள். அதற்கு மத்திய அரசின் பதில் என்னவாக இருக்கும் என்பது தெரியவில்லை.

கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற ஜம்மு காஷ்மீர் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலில் கணிசமான இடங்களை பா.ஜ.க பிடித்தது. எனவே, சட்டமன்றத் தேர்தலை நடத்தி அங்கு ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என்பது பா.ஜ.க-வின் கணக்கு. ஜம்மு காஷ்மீர் அரசியல் தலைவர்கள் முக்கியமாக வலியுறுத்தும், மீண்டும் சிறப்பு அந்தஸ்து தொடர்பான கோரிக்கைக்கு பா.ஜ.க அரசின் பதில் என்னவாக இருக்கும் என்பது இன்று தெரிய வாய்ப்புள்ளது.

அடுத்த கட்டுரைக்கு