Published:Updated:

`விவசாயிகளிடமிருந்து எதுவும் பறிக்கப்படவில்லை; புதிய விதிகளைச் சேர்த்திருக்கிறோம்!’ - பிரதமர் மோடி

பிரதமர் மோடி
பிரதமர் மோடி ( LSTV )

`விவசாயிகள் யாரும் தங்களின் விளைபொருள்களைச் சந்தைக்கு வெளியில் விற்கக் கட்டாயப்படுத்தப்படவில்லை. அது முற்றிலும் விவசாயிகளின் விருப்பம்’ என்று மக்களவையில் பிரதமர் மோடி தெரிவித்தார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்றுவருகிறது. மக்களவையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதங்களுக்கு, பிரதமர் மோடி பதிலளித்தார்.

மக்களவையில் பிரதமர் மோடி
மக்களவையில் பிரதமர் மோடி
LSTV

``ஜனாதிபதியின் உரை இந்தியாவின் சங்கல்ப் சக்தியை வெளிப்படுத்தியது. ஜனாதிபதியின் வார்த்தைகள் இந்திய மக்களின் நம்பிக்கை உணர்வை அதிகரித்திருக்கின்றன. இந்த உரை தொடர்பான விவாதத்தில் ஏராளமான பெண் உறுப்பினர்கள் பங்கேற்றிருக்கிறார்கள். இது மிகச்சிறந்த அறிகுறி. அவையில் உயரிய கருத்துகளைப் பகிர்ந்துகொண்ட பெண் உறுப்பினர்களுக்கு எனது வாழ்த்துகள்.

சுயசார்பு இந்தியா திட்டத்தை இந்தியா இன்னும் தீவிரமாகப் பின்பற்ற வேண்டும். கொரோனாவுக்கு பிந்தைய உலகம் மிகவும் மாறுபட்டிருக்கிறது. சுயசார்பு இந்தியா திட்டத்தை வலுப்படுத்துவதில் ஈடுபட்டிருக்கிறோம். கொரோனா பேரிடரை இந்தியா கையாண்டதும், உலக நாடுகளுக்கு உதவியதும் ஒரு திருப்புமுனை. நம் நாடு சுதந்திரம் அடைந்து 75-வது ஆண்டை நெருங்கிக்கொண்டிருக்கிறோம். இது ஒவ்வோர் இந்தியனுக்கும் பெருமை சேர்க்கும் செயல். நாம் முன்னேறிச் செல்ல ஒரு சந்தர்ப்பம்.

ஜனநாயகம் என்பது நம் ரத்தத்தில், நம் சுவாசத்தில் இருக்கிறது. அது நமக்குள் பிணைக்கப்பட்டிருக்கிறது - பிரதமர் மோடி.

நாம் உலகின் எந்த மூலையிலும் இருக்கலாம். எந்தச் சமூகத்தைச் சார்ந்தவராகவும் இருக்கலாம். ஆனால், இந்தியாவை 100-வது ஆண்டு சுதந்திரத்தை நோக்கி அழைத்துச் செல்ல வேண்டும் என்ற தீர்மானத்தை எடுக்க வேண்டும். கொரோனாவின் அனைத்துத் தடைகளுக்கு எதிராகவும் இந்தியர்கள் அனைவரும் போராடினர். போராடிய இந்தியர்கள் அனைவருக்கும் நன்றி. உலகம் இந்தியாவிடமிருந்து ஓர் உத்வேகத்தைப் பெறுகிறது. இந்தியா உலகின் ஒரு முக்கியமான சக்தி.

இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் `உள்ளூர் பொருள்களை வாங்குவதற்குக் குரல் கொடுப்போம்’ (Vocal for Local) நடந்துவருகிறது. மக்கள் உள்ளூர் உற்பத்திப் பொருள்களைத் தேடுகிறார்கள். அப்படியென்றால், இந்த சுயமரியாதை உணர்வு சுயசார்பு இந்தியா திட்டத்தில் வேலை செய்கிறது. மணீஷ் திவாரி, இந்தியா நோய்த்தொற்றிலிருந்து காப்பாற்றப்பட்டதாகக் கூறினார். உலகம் முழுவதையும் அச்சுறுத்திய நோய்த்தொற்றில் இந்தியா தப்பித்தது என்றால், அது கடவுளின் ஆசீர்வாதம் என்று கூறுவேன். ஏனென்றால், முன்களப் பணியாளர்களாக மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவு ஊழியர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் போன்றவர்கள் கடவுளாக வந்தார்கள்.

இந்தப் பெருந்தொற்றுக் காலத்திலும் விவசாயத்துறையில் சீர்திருத்தங்களைக் கொண்டுவர மூன்று சட்டங்களை அறிமுகப்படுத்தினோம். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் உட்பட பல எதிர்க்கட்சிக்காரர்கள், அந்தச் சட்டங்களின் நோக்கம் மற்றும் உள்ளடக்கம் குறித்து விவாதித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். இந்த கொரோனா பேரிடர் காலத்தில் ஆதார் அட்டை, ஜன்தன் வங்கிக் கணக்கு போன்றவை ஏழைகள் பலருக்கும் உதவின. இந்த ஆதார் அட்டையைத் தடுக்கத்தான், சிலர் உச்ச நீதிமன்றம் சென்றிருந்தார்கள். கடைசி பிரிட்டிஷ் தளபதி இந்தியா பல நாடுகளாக உடையும், இது ஒரு நாடாக இருக்காது என்று கூறியிருந்தார். அவரின் கூற்றை இந்தியர்கள் உடைத்தனர்.

விவசாயிகளுடன் பேசத் தயார்; மன்மோகன் சிங் ரெஃபரென்ஸ்! - பிரதமர் மோடி உரையின் முக்கிய அம்சங்கள்

வேளாண் சட்டங்கள் பிறப்பிக்கப்பட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன. இந்தச் சட்டங்களை அமல்படுத்திய பின்னர் இதுவரை எந்தச் சந்தையும் மூடப்படவில்லை. நாட்டில் எங்கும் குறைந்தபட்ச ஆதார விலை முடிவுக்கு வரவில்லை. இந்த உண்மையை நாம் மறைக்கிறோம். இதற்கு எந்த அர்த்தமும் இல்லை. இந்த அவையும் இந்த அரசும் வேளாண் சட்டங்கள் குறித்துக் கருத்து கூறும் விவசாயிகளை மதிக்கிறோம். அரசின் மூத்த அமைச்சர்கள் விவசாயிகளுடன் தொடர்ந்து பேசுவதற்கு அதுவே காரணம். விவசாயிகள் மீது எங்களுக்கு மிகுந்த மரியாதை உண்டு.

விவசாயிகளிடமிருந்து எதுவும் பறிக்கப்படவில்லை. புதிய விதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. அவை விருப்பமானது மட்டுமே தவிர, கட்டாயமானதில்லை - பிரதமர் மோடி

வரதட்சணைக் கொடுமை, முத்தலாக், குழந்தைத் திருமணம் போன்றவற்றுக்கு எதிரான சட்டங்கள் யாரும் கேட்டுக் கொண்டுவரப்பட்டவை இல்லை. இந்தியா முன்னேற அந்த சட்டங்கள் தேவை என்பதால் கொண்டுவரப்பட்டன. வேளாண் சட்டங்களும் அப்படியானதுதான். அப்படியிருக்கும்போது இந்த சட்டங்கள் மீது இந்த விசித்திரமான விவாதம் ஏன்? விவசாயிகள் யாரும் தங்களின் விளைபொருள்களைச் சந்தைக்கு வெளியில் விற்கக் கட்டாயப்படுத்தப்படவில்லை. அது முற்றிலும் விவசாயிகளின் விருப்பம்" என்று மக்களவையில் மோடி பேசினார்.

அடுத்த கட்டுரைக்கு