Published:Updated:

விவசாயிகளுடன் பேசத் தயார்; மன்மோகன் சிங் ரெஃபரென்ஸ்! - பிரதமர் மோடி உரையின் முக்கிய அம்சங்கள்

பிரதமர் மோடி
News
பிரதமர் மோடி ( RSTV )

`இந்தச் சட்டத்தால் ஏற்படப்போகும் அனைத்துப் பலன்களையும் நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள். தீமைகள் முழுவதையும் நான் எடுத்துக்கொள்கிறேன். வயதானவர்கள் அங்கு குளிரில் அமர்ந்திருக்கிறார்கள். அது சரியானது அல்ல’ - பிரதமர் மோடி.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்றுவருகிறது. இதில், ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் கடந்த மூன்று நாள்களாக நடைபெற்றது.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி
RSTV

தொடர்ந்து நடைபெற்ற இந்த விவாதத்தில் 25 கட்சிகளைச் சேர்ந்த 50 உறுப்பினர்கள் கலந்துகொண்டு பேசினர். இதைத் தொடர்ந்து, ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதங்களுக்கு பிரதமர் மோடி பதிலளித்தார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

``பசுமைப் புரட்சி நடந்த நேரத்தை நாம் நினைவுகூர வேண்டும். அப்போது, நாடு முழுவதும் எதிர்ப்பலை எழுந்தது. லால்பகதூர் சாஸ்திரி பிரதமராக இருந்தபோது, வேளாண்துறை அமைச்சராக யாரும் பொறுப்பேற்கத் தயாராக இல்லை. திட்டக்குழுவே அந்தச் சீர்திருத்தங்களை எதிர்த்து. அமெரிக்காவின் தூண்டுதலால் இது செய்யப்படுகிறது என எதிர்க்கட்சிகள் கடுமையாகக் குற்றம் சாட்டின. `அமெரிக்க ஏஜென்ட்டுகள்' என்று காங்கிரஸ் தலைவர்களுக்குக் கண்டனங்கள் எழுந்தன.

அந்தச் சமயத்தில் ஆயிரக்கணக்கான போராட்டங்கள் நடந்தன. இருந்தபோதிலும், சாஸ்திரி தொடர்ந்து முன்னோக்கி நகர்ந்தார். இன்று நம்மிடம் பெருமளவிலான உபரி உற்பத்தி இருக்கிறது. மக்கள்தொகை அதிகரித்துக்கொண்டே போகிறது; விவசாய நிலங்கள் சுருங்கிக்கொண்டு போகின்றன. விவசாயத்தை நம்பியிருப்பவர்களுக்கு நாம் ஏதாவது செய்ய வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

முந்தைய அரசாங்கம் விவசாயச் சீர்திருத்தங்கள் குறித்துப் பேசியது. அந்த சீர்திருத்தங்களை அனைவரும் ஒப்புக்கொண்டனர். இப்போது பலரும் முன்பு கூறியதிலிருந்து பின்வாங்கி, யூ-டர்ன் அடிக்கிறார்கள். அவர்கள் கூறிய கருத்துகளையே மறந்துவிடுகிறார்கள்; அரசியல் செய்கிறார்கள்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறியதை நான் வாசிக்கிறேன், `1930-ம் ஆண்டிலிருந்து நமது விவசாயிகள் தங்களின் பொருள்களை அதிக விலைக்கு விற்க விடாமல் தடுக்கப்படுகிறார்கள். இந்தத் தடைகள் அனைத்தையும் அகற்றுவதும், வேளாண் விளைபொருள்களுக்கு இந்திய அளவில் ஒரு பொதுவான பெரும் சந்தையை உருவாக்குவதும் எங்கள் நோக்கம்’ என்று பேசியிருக்கிறார்.

ஒருகாலத்தில் நீங்கள் ஏற்றுக்கொண்டதை நாங்கள் இப்போது செய்கிறோம். அதற்காக நீங்கள் பெருமைப்பட வேண்டும். கொரோனா ஊரடங்கில்கூட நல்ல விளைச்சலை விவசாயிகள் நமக்குக் கொடுத்திருக்கிறார்கள். போராட்டம் நடத்திவரும் விவசாயிகளுடன் நாம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அவர்கள் விரும்பும் மாற்றங்களை நாம் செயல்படுத்த வேண்டும். நாம் எப்போதுமே நிலையாகவே இருக்க முடியாது; மாற்றம் என்பது வந்துகொண்டேதான் இருக்கும். இந்தச் சட்டத்தால் ஏற்படப்போகும் அனைத்துப் பலன்களையும் நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள். தீமைகள் முழுவதையும் நான் எடுத்துக்கொள்கிறேன். வயதானவர்கள் அங்கு குளிரில் அமர்ந்திருக்கிறார்கள். அது சரியானது அல்ல.

சந்தைகளை மேம்படுத்தவிருக்கிறோம். பிரதான் மந்திரி கிராம சதக் யோஜனா திட்டம், சாலை இணைப்புகள் மூலம் விவசாயிகள் தொலைதூரத்துக்குத் தங்களின் பொருள்களை எடுத்துச் செல்ல உதவுகிறது. கிசான் சிறப்பு ரயில்கள் போன்றவை சிறு விவசாயிகளின் வாழ்க்கையை மேம்படுத்த உதவும். இது காலத்தின் தேவை. சவால்களை எதிர்கொள்ளும்போது, நாம் தீர்வின் ஒரு பகுதியாக இருக்க வேண்டுமா அல்லது பிரச்னையின் ஒரு பகுதியாக இருக்க வேண்டுமா என்பதைத் தீர்மானிக்க வேண்டும்.

`குறைந்தபட்ச ஆதரவு விலை இதற்கு முன்பு இருந்தது... இப்போது இருக்கிறது... எதிர்காலத்திலும் இருக்கும். ஏழைகளுக்கான மலிவு விலை ரேஷன் பொருள்கள் விநியோகம் தொடரும்’ - பிரதமர் மோடி.

விவசாயிகளில் 68 சதவிகிதம் பேர் சிறு, குறு விவசாயிகள் என முன்னாள் பிரதமர் சௌத்ரி சரண் சிங் கூறியிருந்தார். 12 கோடிக்கும் அதிகமான விவசாயிகளிடம் இரண்டு ஏக்கருக்குக் குறைவான நிலமே இருக்கிறது. அந்த 12 கோடி விவசாயிகளின் மீது எங்களுக்கு அக்கறை இல்லையா? வங்கிக் கணக்குகூட இல்லாத விவசாயிகளுக்கு எப்படிக் கடன் கிடைக்கும்... கடன் தள்ளுபடி எப்படிக் கிடைக்கும்... இதற்கு நாம் ஒரு தீர்வுகாண வேண்டாமா? 2014-ம் ஆண்டு முதல் விவசாயிகளை மேம்படுத்தும் நோக்கத்தில் பல்வேறு மாற்றங்களைச் செய்துவருகிறோம். எங்கள் கொள்கைகள் மற்றும் திட்டங்களை சிறு விவசாயிகளை மையமாகக்கொண்டே செயல்படுத்திவருகிறோம்.

கொரோனா என்ற கண்ணுக்குத் தெரியாத எதிரியோடு நாம் போராடிக்கொண்டிருந்தோம். இந்தியா எப்படி கொரோனாவை எதிர்கொள்ளும் என்று உலகநாடுகள் எதிர்பார்த்தன. கடவுளின் அருளால் நாங்கள் அந்த அசாதாரண சூழலை நன்றாக நிர்வகித்தோம். இந்தப் போரை வென்ற பெருமை தனிநபருக்கோ, அரசாங்கத்துக்கோ கிடையாது. ஒட்டுமொத்த இந்திய மக்களுக்கும் உண்டு. இந்தியா அதைச் செய்து காட்டியது.

`இந்தியாவில் போலியோ, பெரியம்மை போன்ற நோய்கள் பெரும் அச்சுறுத்தலாக இருந்த காலங்கள் உண்டு. இப்போது, இந்தியா உலக நாடுகளுக்குத் தடுப்பூசி தயாரித்துக்கொண்டிருக்கிறது. இது நம்முடைய தன்னம்பிக்கையை அதிகரிக்கும்’ - பிரதமர் மோடி.

நாம் சமூக வலைதளங்களில் பார்த்திருப்போம். ஒரு வயதான பெண்மணி, தனது குடிசையின் வெளியே ஒரு விளக்குடன் இந்தியாவின் நலனுக்காக வேண்டுகிறார். அவரைக் கேலி செய்கிறார்கள். பள்ளிக்கே செல்லாத ஒருவர் விளக்கேற்றுகிறார். இந்தியாவுக்குச் சேவை செய்யலாம் என்று நினைத்து அதை அவர் செய்கிறார். அவர் நம்பிக்கையை நாம் கேலி செய்யலாமா?

அனைவரும் விவசாயிகளின் போராட்டங்களைப் பற்றிப் பேசுகிறோம். ஆனால், அவர்களின் போராட்டங்களின் பின்னணி குறித்து நாம் பேசுவதில்லை. இந்தியாவில் தேசியவாதம் என்பது நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கூறியது போல், `சத்தியம், சிவம், சுந்தரம்' ஆகியவற்றை அடிப்படையாகக்கொண்டது. பல ஆண்டுகளாக நாம் அவரின் கருத்தியலை மறந்துவிட்டு, இப்போது தேடிக்கொண்டிருக்கிறோம்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி
RSTV2

இந்தியா உலகின் மாபெரும் ஜனநாயகம் என்பதை மட்டுமல்ல, அது ஜனநாயகத்தின் தாய் என்பதையும் நாம் நமது இளைய தலைமுறையினரிடம் சொல்லத் தவறிவிட்டோம். சீக்கியர்கள் ஒவ்வொருவராலும் இந்த நாடு பெருமைகொள்கிறது. அவர்கள் இந்த நாட்டுக்காகப் பல்வேறு தியாகங்களைச் செய்திருக்கிறார்கள். என் வாழ்வின் முக்கியமான நாள்களை பஞ்சாபில் கழித்தது என் அதிர்ஷ்டம். தொடர்ந்து நமது வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், விவசாயச் சங்க பிரதிநிதிகளுடன் பேசிவருகிறார். இந்த வாய்ப்பின் மூலம், மீண்டும் அவர்களைப் பேச்சுவார்த்தைக்கு அழைக்கிறேன். பிரச்னைகளைத் தீர்க்க, ஒருவர் ஒருபடி மேலே செல்ல வேண்டும்’’ என்று பேசினார்.