Published:Updated:

``இந்த உத்வேகம் சிலரிடமே இருக்கும் ராகுல்" - ராஜினாமாவுக்கு பிரியங்கா ரியாக்‌ஷன்!

மலையரசு

அவர் விலகுவதைப் பார்க்கும்போது வருத்தமாக இருக்கிறது. மகத்தான உழைப்பை ராகுல் கொடுத்தார்....

பிரியங்கா - ராகுல்
பிரியங்கா - ராகுல் ( twitter )

நாடாளுமன்றத் தேர்தல் தோல்வியை அடுத்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பிலிருந்து விலகுகிறேன் என ராகுல் காந்தி ராஜினாமா கடிதம் கொடுத்தார். ஆனால், அதைக் காங்கிரஸ் காரியகமிட்டி ஏற்றுக்கொள்ளவில்லை. காங்கிரஸ் முக்கிய பிரமுகர் அவரைச் சந்தித்து சமாதானம் செய்தும் பயனில்லை. அவர் தன் முடிவில் உறுதியாக இருக்கிறார். நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ``ராஜினாமா கடிதத்தை ஏற்கெனவே வழங்கிவிட்டதால், நீண்ட நாள் தலைவர் பொறுப்பில் நீடிக்க முடியாது. காங்கிரஸ் காரிய கமிட்டி கூடி, புதிய தலைவரைத் தேர்வு செய்ய வேண்டும். புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் நடைமுறைகளிலும் நான் பங்கேற்க மாட்டேன்” என்று உறுதிப்படக் கூறினார்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

தொடர்ந்து இதுதொடர்பாக விரிவான விளக்க அறிக்கை ஒன்றையும் வெளியிட்டார். அதில், ``காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தது எனக்குக் கிடைத்த பெருமை. நான் இந்த நாட்டுக்குக் கடமைப்பட்டுள்ளேன். ஒரு காங்கிரஸ் தலைவராக நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்கு நான் பொறுப்பேற்க வேண்டும். அந்த வகையில் கட்சியின் எதிர்கால நலன் கருதி நான் தலைவர் பொறுப்பிலிருந்து வெளியேறுகிறேன். கட்சியிலிருக்கும் பலர், அடுத்த தலைவரை நான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். நான் அடுத்த தலைவரைத் தேர்ந்தெடுப்பது சரியாக இருக்காது. பாரம்பர்ய வரலாற்றுப் பெருமை கொண்டது காங்கிரஸ். அப்படியிருக்க எங்களை வழிநடத்தும் சரியான தலைவரைக் கட்சி அறிவிக்கும் என நம்புகிறேன்.

அரசியல் அதிகாரத்துக்கு வர வேண்டும் என்பதற்காக அல்ல, எனது போராட்டம். பா.ஜ.க மீது எனக்குத் தனிப்பட்ட முறையில் எந்த வெறுப்போ, கோபமோ இல்லை. என்னுடைய உடம்பில் இருக்கும் ஒவ்வொரு செல்லும், பா.ஜ.க முன்னிறுத்தும் இந்தியாவை எதிர்க்கச் சொல்கின்றது. இது ஒன்றும் புதிதாகத் தொடங்கிய போராட்டம் அல்ல. நம் நாட்டில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நடந்த போராட்டம்தான். அவர்கள் எங்கெல்லாம் வேற்றுமை பார்க்கிறார்களோ, அங்கு நான் சமத்துவத்தைப் பார்க்கிறேன். அவர்கள் வெறுப்பை நோக்கும் இடங்களில், நான் அன்பை விதைக்க ஆசைப்படுகிறேன். என்னுடைய இறுதி மூச்சுவரை நாட்டுக்காகச் சேவையாற்றுவேன்” என்று உருக்கமாகத் தெரிவித்திருந்தார்.

பிரியங்கா - ராகுல்
பிரியங்கா - ராகுல்

ராகுலின் இந்த முடிவு குறித்து அவரது சகோதரி பிரியங்கா காந்தி ட்விட்டரில் கருத்து பகிர்ந்துள்ளார். அதில், ``இந்த உத்வேகம் சிலரிடமே இருக்கும் ராகுல். உங்கள் முடிவுக்கு மதிப்பளிக்கிறோம்" என அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இதேபோல் ``அவர் விலகுவதைப் பார்க்கும்போது வருத்தமாக இருக்கிறது. மகத்தான உழைப்பை ராகுல் கொடுத்தார். தலைவர் பதவியிலிருந்து விலகினாலும் எங்களுக்கு வழிகாட்டியாக அவர் இருப்பார்" என முன்னாள் அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார்.