நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்ட பிறகு ராகுல் காந்தி, முன்னர் தான் வெற்றிபெற்ற தொகுதியான வயநாட்டுக்கு நேற்று வந்திருந்தார். உடன் தனது சகோதரி பிரியங்கா காந்தியையும் அழைத்து வந்திருந்தார். ராகுலுக்கும் பிரியங்காவுக்கும் வயநாட்டில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு வரவேற்பு அளித்தனர். இந்தப் பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, எம்.பி பதவி இல்லாமல் இருந்தாலும் வயநாடு மக்களுடனான தனது பந்தம் தொடரும் எனப் பேசினார்.

அந்த மேடையில் பிரியங்கா காந்தி பேசுகையில், ``குஜராத் கோர்ட் உத்தரவைக் காரணம் காட்டி, ராகுல் காந்தியை நாடாளுமன்றத்திலிருந்து தகுதிநீக்கம் செய்தது உங்களுக்குத் தெரியும். அவரின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி இனி கோர்ட் தீர்ப்பைப் பொறுத்தது என எனக்குத் தெரியும். 4.25 லட்சம் வாக்குகள் பெற்று வெற்றிபெற்ற மனிதர், இனி தேர்தலில் போட்டியிட முடியுமா, முடியாதா என்பது நீதிமன்றத் தீர்ப்பில் ஊசலாடிக்கொண்டிருக்கிறது.
நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவது ஒரு எம்.பி-யின் பணி. கேள்வி கேட்பது மக்கள் பிரதிநிதியின் கடமை. இந்திய அரசியலமைப்பு நமக்கு அளிக்கும் கருத்துச் சுதந்திரம், ஆட்சியாளர்களிடம் கேள்வி கேட்கவும் அனுமதி அளிக்கிறது. கேள்வி கேட்கும் ஒரு மனிதனை, ஆட்சியாளர்களுக்கு எதிராக ஆவேசமாக எழுந்து நிற்கும் ராகுல் காந்தியை அவமானப்படுத்தவும், பரிகாசம் செய்யவும், சுற்றிவளைத்து எதிர்க்கவும் செய்கிறார்கள். ஆட்சியாளர்களும், அமைச்சர்களும், எம்.பி-க்களும் வரிசையாக நின்று அவரை எதிர்க்க அவர் கேள்வி கேட்பதுதான் காரணம் என நான் உணர்ந்திருக்கிறேன். கேள்வி கேட்பவர்களை அவமானப்படுத்தும்போது மக்கள் எதிர்க்கவேண்டியது அவசியம்.
உண்மையின் அடிப்படையில், சமத்துவத்தின் மீது கட்டமைக்கப்பட்டது இந்த தேசம். நீதி வேண்டி இந்தியாவில் சத்தியாக்கிரகப் போராட்டங்கள் நடந்தன. இந்த நாடு அனுபவிக்கும் சுதந்திரங்களைப் பாதுகாப்பதற்காகத்தான் நாடாளுமன்றம் உருவானது. அதை உயர்த்திப் பிடிக்கத்தான் இந்தியாவில் நீதிமன்றங்களும், சட்டங்களும் உருவாகின. காங்கிரஸ் தனிமனிதப் பிரச்னையை உயர்த்தி பிடிப்பதாகவும், தனிநபரின் பிரச்னையை நாட்டின் பிரச்னையாக மாற்ற முயல்வதாகவும் பா.ஜ.க தலைவர்கள் பேசுவதை நான் கேட்டேன்.
ஒரு தனிநபரின் பிரச்னையை இந்தியா முழுவதும் பிரச்னையாக்க காங்கிரஸ் முயலவில்லை. ஒரு தனிமனிதரைப் பாதுகாப்பதற்காக இந்தியாவின் பிரதமரும், அரசியலமைப்பும், அரசியல் ஸ்தாபனங்களும் முயல்வதாக நான் புரிந்துகொண்டேன். அந்த நபர்தான் கெளதம் அதானி.

ஜனநாயகத்தின் பாதையில் என் சகோதரர் பயணிக்கிறார். இந்தியாவின் சொத்துகளைத் தனிநபருக்கு எழுதிக்கொடுக்கும் பாதையில் மற்றொருவர் பயணிக்கிறார். துறைமுகங்களும், விமான நிலையங்களும் தனிநபருக்குச் சொந்தமாகின்றன. இந்தியாவின் மதிப்புமிக்க ஸ்தாபனங்களை விற்பனைக்கு வைத்திருக்கிறது அந்தப் பாதை. இந்த நாட்டில் உண்மையைச் சொல்பவரை நிராயுதபாணி ஆக்கும் முயற்சி நடக்கிறது.
நம் நாட்டு எல்லையில் ராணுவத்தினர் உயிரை துச்சமென மதித்து சீனாவை எதிர்ப்பதற்குத் தயாராக இருக்கின்றனர். ஆனால், சீனாவுக்கும் அதானிக்கும் இந்த அரசு உதவிகள் செய்துகொடுக்கிறது. அதானியைப் பாதுகாக்க பிரதமருக்கு நேரம் உண்டு, நம் நாட்டின் ராணுவத்தின் கோரிக்கையை நிறைவேற்ற நேரம் இல்லை.

இந்தியாவை அவர்களின் குடும்பச் சொத்து என நினைக்கின்றனர். ஆனால் இந்தியா, நாட்டு மக்களாகிய உங்களுக்குச் சொந்தமானது. ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் பொறுப்பு மக்களாகிய நமக்கு இருக்கிறது. விலைவாசி உயர்கிறது, வேலைவாய்ப்பு பாதாளத்துக்குச் செல்கிறது. இந்த அரசு மக்கள் முன்பு தோற்றுவிட்டது. பிரதமரும், அமைச்சர்களும், எம்.பி-க்களும் ராகுல் காந்தியை வேட்டையாடுகிறார்கள்.
ஆட்சியாளர்களுக்கு விருப்பமில்லாத கேள்விகளைக் கேட்பதுதான் ராகுலை வேட்டையாடுவதற்குக் காரணம். அதானியைப் பாதுகாப்பதுதான் அரசின் நோக்கம். வயநாடு, நாட்டுக்குப் புதிய பாதையை உருவாக்கிறது. ராகுலைப் பேசவிடாமல் செய்ய, நிராயுதபாணி ஆக்க முயலும்போது வயநாடு மக்கள் போராட்டம் நடத்தினர். எங்கள் வீடு உங்களுக்காகத் திறந்திருக்கிறது என ஆயிரக்கணக்கான இந்தியர்களும், வயநாட்டினரும் கூறினர். இது ஒரு தனிநபரின் பிரச்னை அல்ல என நீங்கள் உணர்ந்திருக்கிறீர்கள். உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி" என்றார்.