Published:Updated:

``பிரதமர் மோடி கோழையைப்போலச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்" - பிரியங்கா காந்தி சாடல்!

பிரியங்கா காந்தி
பிரியங்கா காந்தி

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் தீவிரமடைந்துள்ள நிலையில், மத்திய அரசு நோய்த் தொற்றைத் திறம்படக் கையாள தவறிவிட்டதாகக் கூறியுள்ள பிரியங்கா காந்தி, பிரதமர் மோடி கோழையைப்போல் செயல்படுவதாகக் கடுமையாகச் சாடியிருக்கிறார்.

கொரோனா நோய்த் தொற்றின் முதலாம் அலையைத் திக்கித் திணறிச் சமாளித்துவிட்ட இந்தியா, தற்போது இரண்டாம் அலையில் பரிதவித்துக்கொண்டிருக்கிறது. இந்தநிலையில், கொரோனா நோய்த் தொற்று விவகாரத்தில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு தோல்வியடைந்துவிட்டதாக எதிர்க்கட்சியினர் தொடர்ந்து விமர்சன ஏவுகணைகளைத் தொடுத்துவருகின்றனர். பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸின் சார்பாக அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி மத்திய அரசுக்கு எதிராக 'Zimmedaar Kaun' (யார் பொறுபேற்பது?) என்ற கேள்வியை முன்வைத்து பிரசாரம் செய்துவருகிறார். அந்த வகையில், பிரதமர் மோடியை ட்விட்டரில் அறிக்கை வாயிலாகச் சாடியுள்ள பிரியங்கா காந்தி அவரை 'கோழை' என்று குறிப்பிட்டிருப்பது பாஜக-வினர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கொரோனா பாதிப்பு
கொரோனா பாதிப்பு

இது தொடர்பாகத் தனது ட்விட்டர் பக்கத்தில் பிரியங்கா காந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், "நூறு ஆண்டுகளுக்கு முன்பு ஸ்பானிஷ் வைரஸால் கங்கை நதியில் ஏராளமான சடலங்கள் மிதந்ததாகவும், தகன மேடைகளில் சடலங்களை எரியூட்ட மரக்கட்டைகள் இல்லாமல் மக்கள் பரிதவித்ததாகவும் பிரபல எழுத்தாளர் நிரலா தன்னுடைய 'குல்லி பாத்' நாவலில் குறிப்பிட்டிருந்தார். அவரின் கூற்று தற்போது நிகழ்காலத்தில் நடந்துகொண்டிருப்பதை நாம் காண்கிறோம். மக்களை நோய்த் தொற்று பாதிப்பிலிருந்து பாதுகாக்க வேண்டிய மத்திய அரசு, மக்களைத் தனித்து விட்டுவிட்டது. இது போன்ற பேரிடர் நேரங்களில் ஒரு நல்ல அரசாங்கம் என்பது பொறுப்புடனும் உண்மையுடனும் செயல்பட வேண்டும். ஆனால், துரதிர்ஷ்டவசமாக மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு இந்த விஷயத்தில் எந்தக் கவலையும் இல்லை. இந்தியாவில் கொரோனா பரவல் வேகமெடுக்கத் தொடங்கியதிலிருந்தே மத்திய அரசு உண்மைகளை மறைத்துக்கொண்டு, பொறுப்பற்று செயல்பட்டுவருகிறது. அரசின் இந்த அலட்சியப் போக்கால் பாதிப்புக்குள்ளானது நாட்டு மக்கள்தான்.

பிரதமர் மருத்துவ நிபுணர்களின் எச்சரிக்கைகளைக் காதில் வாங்கிக்கொள்ளவில்லை. அதன் விளைவாக தற்போது, நாட்டு மக்கள் ஆக்சிஜன் கிடைக்காமலும், மருத்துவமனைகளில் படுக்கைகள் கிடைக்காமலும் பரிதவித்துக்கொண்டிருக்கின்றனர். ஆனால், பிரதமர் மோடி நோய்த் தொற்று பரவல் அதுவாகவே குறைந்துவிடும், காட்சிகள் தானாகவே மாறிவிடும் என்று எதுவும் செய்யாமல் பொறுமையாகக் காத்துக்கொண்டிருக்கிறார். கொரோனா விவகாரத்தில் மோடி கோழையைப்போலச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். அவரால் இந்தியா வீழ்ந்துகொண்டிருக்கிறது.

எல்லாவற்றிலும் அரசியல் செய்துகொண்டிருக்கும் மோடிக்காக நாட்டு மக்கள் முன்வரத் தயாராக இல்லை. மக்கள் பிரதமரைக் கேள்வி கேட்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. தடுப்பூசி ஒன்றுதான் மக்கள் உயிர் காக்கும் ஆயுதம் என்றாகிவிட்ட நிலையில் இந்தியர்களுக்கு இருப்பை உறுதி செய்யாமல், மத்திய அரசு மில்லியன் கணக்கில் தடுப்பூசிகளை வெளிநாடுகளுக்கு உற்பத்தி செய்து அனுப்பியது. அதன் விளைவாக தற்போது பெரும்பாலான இடங்களில் தடுப்பூசித் தட்டுப்பாடு நிலவிவருகிறது.

அவர் தன் சொந்த இமேஜை காப்பாற்றச் செய்த முயற்சிகளை மக்கள்நலனில் காட்டியிருந்தால், இன்று தடுப்பூசித் தட்டுப்பாடு இருந்திருக்காது. இந்த ஆண்டு, ஜனவரி மாதம் வரையில் காத்திருந்ததற்கு பதிலாக, கடந்த ஆண்டே தடுப்பூசிகளுக்கு ஆர்டர் செய்திருந்தால், இன்று நம்மால் எண்ணற்ற உயிர்களைக் காப்பாற்றியிருக்க முடியும். மக்களைக் காக்கும் முயற்சிகளில் ஈடுபடாமல், பாத்திரங்களைத் தட்டி ஒலி எழுப்பவும், விளக்கேற்றவும் பிரதமர் வலியுறுத்தினார். ஒரு நாட்டின் பிரதமராக மோடி திறம்படச் செயல்படத் தவறிவிட்டார்" என்று பிரியங்கா கடுமையாக விமர்சித்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு