Published:Updated:

மறுக்கப்பட்ட அனுமதி; விடிய விடிய நடந்த தர்ணா! - நள்ளிரவில் உ.பி அதிகாரிகளைத் திணறடித்த பிரியங்கா

சத்யா கோபாலன்

இரவு 1:30 மணிக்கு, உத்தரப்பிரதேச உயர் அதிகாரிகள், காவல்துறையினர் வந்து பிரியங்காவை சந்தித்து, சமாதானப்படுத்திய வீடியோவை காங்கிரஸ் தலைவர் தன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

நள்ளிரவில் பிரியங்கா தர்ணா
நள்ளிரவில் பிரியங்கா தர்ணா ( Twitter/@srinivasiyc )

உத்தரப்பிரதேச மாநிலம் சோன்பத்ரா மாவட்டத்தில் உள்ள கோராவால் பகுதியில் உள்ள பழங்குடியினர், பயிரிட்டு வந்த 36 ஏக்கர் நிலத்தை ஊர்த் தலைவர் யக்யா தத் (Yagya Dutt) என்பவர் கேட்டுள்ளார். ஆனால், பழங்குடிகள் அந்த நிலத்தைத் தர மறுத்துள்ளனர். தொடர்ந்து, கடந்த 16-ம் தேதி 32 ட்ராக்டர்களில் சுமார் 200 பேருடன் வந்து நிலத்தை அபகரித்த யக்யா தத் வந்துள்ளார். அவரின் குழுவுக்கும் பழங்குடியினருக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது.

பிரியங்கா காந்தி
பிரியங்கா காந்தி
Twitter/@kcvenugopalmp

இதன் உச்சத்தில், யக்தா தத்தின் ஆதரவாளர்கள் பழங்குடியினரை துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் 10 பேர் உயிரிழந்ததோடு, 24 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், துப்பாக்கிச்சூட்டால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற கிழக்கு உத்தரப்பிரதேசத்தின் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி நேற்று தன் ஆதரவாளர்களுடன் வாரணாசிக்கு வந்துள்ளார்.

முதலில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களைச் சந்தித்துவிட்டு, அங்கிருந்து சோன்பத்ராவுக்குச் சென்றுள்ளார். அவர் வருவதை அறிந்த காவலர்கள், கோராவாலுக்கு 80 கி.மீ முன்பே அவரை நிறுத்தி, ‘இதற்கு மேல் செல்ல உங்களுக்கு அனுமதி இல்லை. நீங்கள் செல்லமுடியாது’ எனக் கூறி தடுத்துள்ளனர். தன்னை தடுப்பதற்கான காரணத்தை பிரியங்கா, காவல்துறையினரிடம் கேட்டுள்ளார். அவர்கள் முறையான காரணத்தைக் கூறாததால், அதே இடத்தில் நடு ரோட்டில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.

பிரியங்கா காந்தி கைது
பிரியங்கா காந்தி கைது
Twitter/@kcvenugopalmp

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பிரியங்கா காந்தி, “ சோன்பத்ரா சொத்துத் தகராறில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை நான் சந்திக்கச் செல்கிறேன். காவலர்கள் என்னைத் தடுத்துவிட்டனர். என்னுடன் வெறும் நான்கு பேரை மட்டும் அழைத்துச்செல்வதாக அவர்களிடம் நான் கூறினேன். அப்போதும் காவலர்கள் என்னை அனுமதிக்கவில்லை. பாதிக்கப்பட்டவர்களைச் சந்திக்காமல் இந்த இடத்தைவிட்டு நகரப் போவதில்லை. அவர்கள் என்னை சிறையில் அடைத்தாலும் அதைப் பற்றி கவலையில்லை. நான் சிறை செல்லவும் தயாராக உள்ளேன். ஆனால், இங்கிருந்து செல்ல மாட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.

பிரியங்கா காந்தி தர்ணாவில் ஈடுப்பட்டதால், அந்த இடத்தில் பதற்றம் நிலவியது. பின்னர், பிரியங்காவையும் அவரின் ஆதரவாளர்களையும் உத்தரப்பிரதேச காவல்துறையினர் கைது செய்து மிஸாபூரில் உள்ள விருந்தினர் மாளிகைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சென்றும் பிரியங்கா காந்தி, தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டுவந்தார். இரவு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் தொடர் தர்ணாவில் ஈட்டுப்பட்டுள்ளனர். இதற்கிடையில், பிரியங்கா அடைக்கப்பட்ட விருந்தினர் மாளிகையில், மின்சாரமும் தண்ணீரும் துண்டிக்கப்பட்டதாகவும் இது, ஆளும் அரசின் பழிவாங்கும் செயல் என்றும் காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து சமூக வலைதளங்களில் குற்றம் சாட்டி வருகின்றனர்.

பிரியங்கா காந்தி
பிரியங்கா காந்தி
ANI

நள்ளிரவு முழுவதும் தர்ணாவில் ஈடுபட்ட பிரியங்கா காந்தியை, உத்தரப்பிரதேச உயர் அதிகாரிகள் சிலர் நேரில் சந்தித்து சமாதானப்படுத்தியுள்ளனர். ஆனால், பிரியங்கா காந்தி தன் கொள்கையிலிருந்து சற்றும் விலகவில்லை. இன்று காலை வரை அதே விருந்தினர் மாளிகையில் உள்ளார். இதற்கிடையே, தன் தர்ணா தொடர்பாக ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ள பிரியங்கா,” வாரணாசி ஏ.டி.ஜி ப்ரிஷ் புஷன், வாரணாசி கமிஷனர் தீபக் அகர்வால், மிஸாபூர் டி.ஐ.ஜி ஆகிய அனைவரையும் உத்தரப்பிரதேச அரசு அனுப்பிவைத்து, நான் மக்களை சந்திக்காமல் இந்த இடத்தை விட்டு செல்ல வேண்டும் என என்னிடம் கூறச்சொல்லியுள்ளது. அவர்கள், கடந்த ஒரு மணி நேரமாக இங்கு முகாமிட்டுள்ளனர். என்னை ஏன் கைது செய்தார்கள் என இன்னும் அவர்கள் எனக்கு விளக்கவில்லை. மேலும், கைது தொடர்பான எந்த ஆவணங்களையும் என்னிடம் தரவில்லை” என்று குறிப்பிட்டிருந்த அவர்,

என் கைது சட்டத்துக்குப் புறம்பானது என என் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். நான் மக்களைப் பார்க்க முடியாது என அரசு மூலம் எனக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நான் எந்த சட்டவிதிகளையும் மீறி இங்கு வரவில்லை, பாதிக்கப்பட்ட குடும்பங்களை மட்டுமே பார்க்க வந்துள்ளேன் என முன்னரே அவர்களிடம் தெரிவித்துவிட்டேன். அந்தக் குடும்பங்களைப் பார்க்காமல் நான் இங்கிருந்து செல்லப்போவதில்லை” என்று பதிவிட்டுள்ளார்.