Published:Updated:

'தடுத்து நிறுத்திய போலீஸ்; டூ வீலரில் பயணமான பிரியங்கா’- உ.பி அரசைச் சுற்றும் அடுத்த சர்ச்சை!

உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பிரியங்கா காந்தி
பிரியங்கா காந்தி

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகிறது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் போராட்டத்தின் போது நடந்த வன்முறைச் சம்பவங்களில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். குண்டுக் காயங்களுடன் சிலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாணவர்கள், சிறுவர்கள் இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவங்கள் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஒரு தோட்டாக்களைக் கூட பயன்படுத்தவில்லை என போலீஸார் கூறுகின்றனர். தங்களது வாதத்துக்கு வலுசேர்க்கும் விதமாகப் போராட்டத்தின் போது நாட்டுத்துப்பாக்கிகளும், குண்டுகளும் கைப்பற்றப்பட்டதாக காவல்துறையினர் விளக்கம் அளித்துள்ளனர்.

உ.பி போலீஸ்
உ.பி போலீஸ்

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி எஸ்.ஆர். தாராபுரி (வயது 76) கைது செய்யப்பட்டார். அவரது குடும்பத்தினரைச் சந்திப்பதற்காக காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி காரில் சென்றார்.

அவரை தடுத்து நிறுத்தி உத்தரப்பிரதேச காவல்துறையினர் மேற்கொண்டு செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் அருகிலிருந்த காங்கிரஸ் தொண்டர் ஒருவரின் இருசக்கர வாகனத்தில் பிரியங்கா காந்தி பின்னால் அமர்ந்துகொண்டு சென்றார். அவரை துரத்திச் சென்ற காவல்துறையினர் வழிமறித்தனர்.

`குடியுரிமை கேட்டு மக்கள் வரிசையில் நிற்க வேண்டுமா?’ - டெல்லியில் கொதித்த பிரியங்கா காந்தி

இதனையடுத்து தாராபுரியின் வீட்டுக்கு பிரியங்கா நடந்து சென்று அவரது குடும்பத்தினரை சந்தித்து பேசினார். செய்தியாளர்களிடம் பேசிய பிரியங்கா, ”நான் அமைதியாக சென்றுக்கொண்டிருந்தேன். இந்த பயணம் குறித்து முன்னரே நான் யாரிடமும் தெரிவிக்கவில்லை. அதன்காரணமாகவே என்னுடன் 3 முதல் 4 நபர்களே வந்திருந்தனர். எங்களால் என்ன சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்படப்போகிறது. என்னை கைது செய்ய வேண்டும் என்றால் கைது செய்துக்கொள்ளட்டும்.

நான் தாராபுரி அவர்களின் வீட்டுக்கு செல்லும் வழியில் உத்தரப்பிரதேச காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டேன். இதனையடுத்து நான் இரு சக்கர வாகனத்தில் சென்றுக்கொண்டிருந்தேன். பின்னால் வந்த காவல்துறையினர் என்னை வழிமறித்தனர். ஒரு பெண் போலீஸ் அதிகாரி என்னை கழுத்தை பிடித்து இழுந்தார்.

இன்னொருவர் என்னை கீழே தள்ளிவிட்டார். இதனையடுத்து நான் நடந்தே சென்றேன்” என்றவர் ``நகரத்தின் மையத்தில் எங்களை நிறுத்துவதற்கு காரணம் என்ன? யாரை வேண்டுமானாலும் நடுவழியில் நிறுத்துவீர்களா?" என போலீஸ் அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார்.