Published:Updated:

இந்திராவின் பெல்சியும்... பிரியங்காவின் சோன்பத்ராவும்! தொடரும் காங்கிரஸின் அரசியல் பயணம்

பிரியங்கா காந்தியைத் தோற்ற அளவில் மட்டுமே இந்திரா காந்தியோடு ஒப்பிட்டுப் பேசியவர்கள், செயல்பாட்டு அளவிலும் ஒப்பிடத் தொடங்கியுள்ளனர்.

பிரியங்கா காந்தி
பிரியங்கா காந்தி ( விகடன் )

1977-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம். சதாக்கத் ஆசிரமத்தின் தொலைபேசி ஒலித்துக்கொண்டிருந்தது. சதாக்கத் ஆசிரமம்தான் பீகார் மாநில காங்கிரஸ் கமிட்டியின் தலைமையகம். அப்போது அழைப்பை எடுத்துப் பேசியவர், பீகார் மாநில காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகப் புதிதாக நியமிக்கப்பட்டிருந்த கேதார் பாண்டே. மறுமுனையில் பேசியவர் மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி. அந்தத் தொலைபேசி உரையாடலுக்குப் பிறகு பரபரப்பானது, இந்திய அரசியல். அதற்குக் காரணம், 1977-ல் அடைந்த தேர்தல் தோல்விக்குப் பிறகான இந்திரா காந்தியின் பெல்சி நோக்கிய பயணம்.

இந்திரா காந்தி
இந்திரா காந்தி

பெல்சி என்பது, பீகார் மாநிலத்தில் பாட்னா மாவட்டத்துக்கு உட்பட்ட சிறிய கிராமம். அந்தக் கிராமத்தின் மொத்த மக்கள்தொகையே சில ஆயிரங்கள்தான். பெல்சி கிராமத்தில் 1977 மே மாத இறுதியில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்தேறின. இதில், அந்தப் பகுதியில் வசித்த உயர்வகுப்பைச் சார்ந்தவர்களால் 11 தாழ்த்தப்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவத்தைக் கேள்விப்பட்ட இந்திரா காந்தி, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறுவதற்காகத்தான் பெல்சிக்குப் புறப்பட்டார்.

`இந்தியா என்பதே இந்திரா’ என்றிருந்த நிலைமாறி, இந்திரா தோல்வியைத் தழுவியிருந்த காலம் அது. இந்தியாவில் எமர்ஜென்சி விலக்கப்பட்ட பிறகு, நடைபெற்ற முதல் தேர்தலில் இந்திரா காந்தி தோல்வியைத் தழுவ, முதல்முறையாகக் காங்கிரஸ் அல்லாத ஒரு கட்சி, ஆட்சியமைத்தது. ஆட்சியை இழந்து ஆறு மாதங்களுக்குள் இந்திரா நடத்திய தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஆதரவான பெல்சி பயணம், மிக முக்கிய அரசியல் நிகழ்வாகப் பார்க்கப்பட்டது. 1977-ம் ஆண்டு, ஆகஸ்ட் 13-ம் தேதி டெல்லியிலிருந்து விமானம் மூலம் பாட்னா வந்த இந்திரா காந்தி, அங்கிருந்து கார், டிரக், யானை மேல் சவாரி என மூன்றரை மணி நேரப் பயணத்துக்குப் பிறகு பெல்சியை அடைந்தார்.

இந்திரா காந்தி
இந்திரா காந்தி

இந்திரா காந்தி பெல்சி சென்றவுடன், அவரை நெருங்கிவந்த கிராமத்து மக்கள், "எங்களைக் காப்பாற்றுங்கள். நாங்கள் அழித்தொழிக்கப்படுகிறோம்” என்றனர். பாதிக்கப்பட்டவர்களின் குறைகளைக் கேட்டு மீண்டும் மூன்று மணி நேரப் பயணம் செய்து பாட்னாவை அடைந்தார் இந்திரா காந்தி. இந்திராவின் இந்தப் பெல்சி பயணத்தை, மற்றொரு தண்டி யாத்திரை எனக் கூறினார், முன்னாள் காங்கிரஸ் கட்சியின் தலைவரான சீதாராம் கேசரி. இது, தண்டி யாத்திரை அளவுக்கு ஒப்பிடக்கூடியதோ, இல்லையோ... ஆனால், 1977 தேர்தல் தோல்விக்குப் பிறகு, மீண்டும் இந்திராவின் அரசியல் பயணம் நடைபோட ஆரம்பித்த நிகழ்வு அது. அப்போது பிரியங்கா காந்திக்கு வயது 5.

சமீபத்தில் நடந்துமுடிந்த மக்களவைத் தேர்தலில் கடந்த தேர்தலை எதிர்க்கட்சி அந்தஸ்தைக்கூடப் பெற முடியாத நிலையில் தோல்வியைச் சந்தித்துள்ளது காங்கிரஸ். தோல்விக்குப் பொறுப்பேற்று ராகுல் காந்தி தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார். இந்தச் சூழலில் பாட்டி இந்திராவைப் போலவே சோன்பத்ராவில் பழங்குடியினருக்கு எதிராக நிகழ்ந்தேறிய வன்முறைச் சம்பவத்தை கையில் எடுத்து ஸ்கோர் செய்துள்ளார் பிரியங்கா காந்தி.

பிரியங்கா காந்தி
பிரியங்கா காந்தி

உத்தரப்பிரதேச மாநிலம் சோன்பத்ரா மாவட்டத்தில் உள்ள கோராவால் என்ற கிராமத்தில் இருபிரிவினருக்கிடையே மோதல் ஏற்பட்டு கலவரம் வெடித்தது. இந்தக் கலவரத்தில் பழங்குடியினர் சமூகத்தைச் சார்ந்த 10 பேர் உயிரிழந்தனர். அதேபோல் படுகாயமடைந்த பலர் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர். இந்நிலையில், பிரியங்கா காந்தி இந்தத் தகவலை அறிந்ததும் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்கத் தயாரானார். கடந்த 19-ம் தேதி பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் உள்ளவர்களிடம் நலம் விசாரித்துவிட்டு, இந்தச் சம்பவம் நடந்த சோன்பத்ரா பகுதிக்குச் சென்றுகொண்டிருந்தார். ஆனால், பிரியங்காவை, போகும்வழியிலேயே காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர்.

"பாதிக்கப்பட்டவர்களைச் சந்திக்காமல் செல்ல மாட்டேன்" என நடுரோட்டில் அமர்ந்து பிரியங்கா தர்ணா போராட்டத்தில் ஈடுபட, அவரைக் கைதுசெய்த காவல் துறையினர் மிசாப்பூர் விருந்தினர் மாளிகையில் அடைத்து வைத்தனர். அங்கும், இரவு முழுவதும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு இறுதியில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து தன்னுடைய போராட்டத்தில் வெற்றி பெற்றுள்ளார் பிரியங்கா காந்தி. அவருடைய இந்தச் செயல்பாடு, காங்கிரஸ் கட்சியின் பல முக்கியத் தலைவர்களிடம் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

பிரியங்கா நடு ரோட்டில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தியபோது, சமூக வலைதளங்களில் டிரெண்டிங் ஆக ஆரம்பித்தது, இந்திரா மற்றும் பிரியங்காவின் பெயர்கள். அதுவரை பிரியங்கா காந்தியைத் தோற்ற அளவில் மட்டுமே இந்திரா காந்தியோடு ஒப்பிட்டுப் பேசியவர்கள், செயல்பாட்டு அளவிலும் ஒப்பிடத் தொடங்கியுள்ளனர்.

1966 ஜனவரி 11-ம் தேதி முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி, திடீரென மரணமுற்றார். அவரின் இறப்பு அடுத்த பிரதமர் யார் என்ற பெரும் கேள்வியை இந்தியா முழுமைக்கும் எழுப்பியது. மொரார்ஜி தேசாய் மற்றும் இந்திரா காந்தி ஆகிய இருவருக்கிடையே கடும் போட்டி நிலவியது. யார் பிரதமர் என்பதற்கான வாக்கெடுப்பு மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜர் முன்னிலையில், 19 ஜனவரி 1966-ம் ஆண்டு நடைபெற்றது. இந்த வாக்கெடுப்பில் பங்கெடுப்பதற்காக அன்றைய தினம் காலைவேளையில், மகாத்மா காந்தி இறுதியாக உயிர்துறந்த இடமான ராஜ்கோட் பகுதிக்குச் சென்று அவருடைய நினைவிடத்தை வணங்கினார் இந்திரா. பின்னர், முன்னாள் பிரதமர் நேருவின் நினைவிடத்துக்குச் சென்று வணங்கினார். அதன் பிறகே வாக்கெடுப்பு நடைபெறும் இடத்துக்குச் சென்றார்.

மறுக்கப்பட்ட அனுமதி; விடிய விடிய நடந்த தர்ணா! - நள்ளிரவில் உ.பி அதிகாரிகளைத் திணறடித்த பிரியங்கா

அப்போது அவரின் உடைகள் மற்றும் நடவடிக்கைகள் ஏறத்தாழ நேருவையே ஞாபகப்படுத்துபவையாக அமைந்திருந்தன. ஆம், வெள்ளை காட்டன் புடவை, தோள்களின் மீது இளமஞ்சள் நிறத்தால் ஒரு காஷ்மீர் சால்வை, அதன்மீது ஒரு ரோஜாப்பூ என நேருவின் வழியில் வாக்கெடுப்பு அறைக்குள் நுழைந்தார் இந்திரா.

தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட மொராஜி தேசாயிடம் சென்று, “நீங்கள் என்னை ஆசீர்வதிப்பீர்களா" எனக் கேட்க... அவரை, ஆசீர்வதித்து அனுப்பினார் தேசாய். போட்டிக்கான முடிவுகள் வெளியாகும் முன்னரே இந்திரா காந்தி வெற்றிபெற்ற இடம் அது.

இந்த நிகழ்வுகளை நேரில் பார்த்தவர்கள், "இங்கு வந்திருப்பது இந்திராவா, இல்லை நேருவா?" என்றுதான் முணுமுணுத்திருப்பர். கிட்டத்தட்ட இதே நிலையில்தான் இன்று பிரியங்காவை, இந்திரா காந்தியோடு ஒப்பிட்டு விவாதிக்கின்றனர், காங்கிரஸ் தொண்டர்கள். ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்த நிலையில், இப்போது காற்று பிரியங்கா காந்தியின் பக்கம் வீச ஆரம்பித்திருக்கிறது.

பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி
பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி
விகடன்

எந்த லால் பகதூர் சாஸ்திரியின் மறைவுக்குப் பிறகு, பிரதமராகும் வாய்ப்பு இந்திராவுக்குக் கிடைத்ததோ, அதே லால் பகதூர் சாஸ்திரியின் மகனான அனில் சாஸ்திரி, "இந்த நேரத்தில் காங்கிரஸ் கட்சியை வழிநடத்துவதற்கான சரியான நபர் பிரியங்கா காந்திதான். அவர், கட்சித் தலைமைப் பொறுப்பை ஏற்க வேண்டும். வேறு யார் அந்தப் பதவிக்கு வந்தாலும் அவரைக் கட்சியினர் 100 சதவிகிதம் ஏற்றுக்கொள்வார்கள் என்று சொல்ல முடியாது” எனக்கூறியுள்ளார்.

அதேபோல், “காங்கிரஸின் இந்த இக்கட்டான சூழலில், ராகுல் காந்தி தன்னுடைய ராஜினாமா முடிவில் உறுதியாக இருக்கும்போது, லட்சக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்களின் அழைப்பை பிரியங்கா காந்தி ஏற்க மறுக்கக் கூடாது” என முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் மகன் அபிஜித் முகர்ஜி கருத்து தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகள் தொடங்கி, இளம் காங்கிரஸ் தொண்டர்கள் வரை அனைவரும், பிரியங்கா காந்தியே அடுத்த தலைவராக வேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றனர்.

பிரியங்கா காந்தி
பிரியங்கா காந்தி

1952-ல் நடைபெற்ற தேர்தலில் உத்தரப்பிரதேசத்தில் இந்திரா காந்தியை போட்டியிடச் சொல்லி காங்கிரஸின் மூத்த நிர்வாகிகள் கேட்டுக்கொண்டபோது, "குழந்தைகள் சிறியவர்களாக இருக்கிறார்கள்" எனப் பதிலளித்தார் இந்திரா காந்தி. இதே பதிலைத்தான் 1999 தேர்தலில் இருந்தே பிரியங்கா காந்தி சொல்லி வருகிறார். அவர் முழுநேர அரசியலில் ஈடுபடாததற்கும் இதுவே காரணம். ஆனால், பிரியங்காவுக்கு இன்று காலம் கனிந்திருக்கிறது. இந்திரா காந்தியின் அரசியலில் இரண்டாவது ஆட்டத்தைத் தொடங்கி வைத்த பெல்சியைப்போல, பிரியங்கா உத்தரப்பிரதேச பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுச் சந்தித்த முதல் நாடாளுமன்றத் தேர்தலில், காங்கிரஸ் பெரும் தோல்வியடைந்தாலும், அவருடைய சோன்பத்ரா பயணம் காங்கிரஸ் கட்சிக்குப் புதிய நம்பிக்கையைத் தந்துள்ளது. இதைப் பயன்படுத்திக்கொள்வது பிரியங்காவின் கைகளில்தான் உள்ளது.