Published:Updated:

`உ.பி என்றால் மட்டும் ஓடிவந்து அரசியல் செய்கிறார் பிரியங்கா காந்தி' - கொதிக்கும் வானதி சீனிவாசன்!

வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்

``மத்திய பா.ஜ.க அரசுக்கு எதிரான மனநிலைகொண்ட எதிர்க்கட்சிகள்தான் இந்தப் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராட்டங்களை நடத்துகின்றன. மற்றபடி விவசாயிகள் மத்தியில் எந்தவித எதிர்ப்பும் இல்லை'' என்கிறார் பா.ஜ.க தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன்.

மத்திய பா.ஜ.க அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் டெல்லியில் நடைபெற்றுவரும் விவசாயிகள் போராட்டம், மாதங்கள் பல கடந்து உக்கிரமாகிவருகிறது. இந்தநிலையில், குடியரசு தினத்தன்று போராட்டக்காரர்கள் நடத்திய டிராக்டர் பேரணியில் திடீர் கலவரம் ஏற்பட, விவசாய சங்கங்களே அதிர்ந்துபோயின. `மத்திய பா.ஜ.க அரசே திட்டமிட்டு, போராட்டத்தில் வன்முறையைத் தூண்டிவிட்டது’ என்று எதிர்க்கட்சிகள் குமுற, போராட்டத்துக்குக் காரணமானவர் என்று கூறி பஞ்சாப் நடிகர் தீப் சிங்கைக் கைதுசெய்திருக்கிறது டெல்லி காவல்துறை. இதற்கிடையே போராட்டக்குழுவினர், ``எங்கள் போராட்டம் என்பது, விவசாயிகளின் பிரச்னைகளுக்கு தீர்வை நோக்கியதாக மட்டுமே இருக்கிறது. மற்றபடி மத்தியில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவது எங்கள் நோக்கம் அல்ல...'' என்று தெரிவித்திருக்கிறார்கள். இந்தச் சூழ்நிலையில், பா.ஜ.க தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசனிடம் பேசினேன்.

விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் போராட்டம்

``விவசாயிகள் போராட்டத்துக்கு உலகப் பிரபலங்கள் ஆதரவு தெரிவிக்கின்றனர். ஆனால், மத்திய பா.ஜ.க அரசோ, போராட்டத்தை ஒடுக்குவதிலேயே குறியாக இருக்கிறதே?''

``போராட்டக் களத்தின் சூழல், இந்தியாவின் நிலைமை, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய அரசின் உரிமைகள் ஆகியவற்றைப் பற்றிய புரிதலோ அல்லது கருத்தியல்ரீதியிலான விமர்சனமோ வெளிநாட்டுப் பிரபலங்களிடம் இல்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசாங்கம், நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தி புதிய வேளாண் சட்டங்களை இயற்றியிருக்கிறது. ஆனால், இந்தப் புதிய சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராடிவந்தபோதும் அவர்களது போராட்டங்களை நசுக்கவோ அல்லது விவசாயிகள் மீது வன்முறையை பிரயோகிக்கவோ இல்லை. ஆனாலும் கடந்த குடியரசு தினத்தன்று விவசாயிகளின் அந்தப் போராட்டக் களத்தை திசைதிருப்புவதற்கான வேலைகளையும் சில சக்திகள் செய்தன. போராடிக்கொண்டிருக்கும் அந்த விவசாய சங்கங்களே இதை ஒப்புக்கொள்கின்றனர்.

போராட்டக் களத்தில் காலிஸ்தான் ஆதரவு கோஷங்கள் எழுப்பப்படுகின்றன. இதன் பின்னணியிலுள்ள அமைப்புகள் மற்றும் நபர்களின் செயல்பாடுகளையெல்லாம் கவனத்தில்கொள்ள வேண்டியிருக்கிறது. குடியரசு தினத்தன்று விவசாயிகள் போராட்டத்தில் நடைபெற்ற கலவரத்தால், எத்தனையோ காவலர்கள் காயமடைந்தனர். அதே எண்ணிக்கையில் விவசாயிகள் பாதிப்படைந்திருந்தால், இங்கிருக்கக்கூடிய எதிர்க்கட்சிகளும் ஊடகமும் என்னென்ன விமர்சித்திருக்கும்... மோடி மீதும், மத்திய பா.ஜ.க அரசு மீதும் அரசியல்ரீதியான எதிர்ப்பு மனநிலைகொண்ட எதிர்க்கட்சிகள் இந்தப் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராட்டங்களை நடத்துகின்றன. மற்றபடி விவசாயிகள் மத்தியில் எந்தவித எதிர்ப்பும் இல்லை.''

சென்னை: தீயில் கருகிய மாநகராட்சி ஊழியர் - போதையால் சிக்கிய நண்பர்கள்

``போராட்டக்காரர்களை தீவிரவாதிகளாகச் சித்தரிப்பதென்பது சொந்த நாட்டு மக்களைக் கொச்சைப்படுத்துவதாகத்தானே இருக்கிறது?''

``அப்படி எல்லாப் போராட்டங்களையும் நாம் குறைசொல்லவில்லை. இந்திரா காந்தி ஆட்சி செய்துவந்த காலங்களிலும்கூட இதுபோன்ற குற்றச்சாட்டுகள் சொல்லப்பட்டிருக்கின்றன. போராட்டக் களத்தில் புதிது புதிதாகப் பங்கேற்கும் அமைப்புகள், அவற்றுக்கான பண வரவு பின்னணிகள் மற்றும் போராட்டக்களத்தின் கோஷங்கள் என அத்தனை நடவடிக்கைகளையும் ஆராய்ந்து ஆதாரபூர்வமாகத்தான் இந்தக் குற்றச்சாட்டை அரசு முன்வைக்கிறது.

விவசாயிகள் டிராக்டர் பேரணி
விவசாயிகள் டிராக்டர் பேரணி

தீவிரவாதத்தாலும் பயங்கரவாதத்தாலும் உலகிலேயே மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் நாடு என்றால் அது இந்தியாதான். இப்போதுதான் இந்த பாதிப்புகளிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறோம். இது இங்கிருக்கும் ஒருசில சுயநல சக்திகளை கொதிப்படையவைக்கிறது. ஆனாலும் நேரடியாக மோத முடியாத காரணத்தால், ஆங்காங்கே சிறு சிறு குழுக்களாக அவர்களது வேலைகளைச் செய்துவருகிறார்கள். மக்களின் போராட்டக் களங்களிலும் இவர்கள் கலந்து செயல்படும்போதுதான் அரசாங்கம் அதைச் சுட்டிக்காட்டுகிறது.''

70 நாளில் ரூ.16 லட்சம் வருமானம்... கலர் கலராய் காலிபிளவர்... அசத்தும் நாசிக் விவசாயி!

``பாலியல் வன்முறைகளைத் தடுப்பதற்கு பா.ஜ.க தேசிய மகளிரணித் தலைவராக என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறீர்கள்?’’

``சட்டம், ஒழுங்கு என்பது மாநில அரசு சம்பந்தப்பட்டது. பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதில் அரசுக்கும் சட்டத்துக்கும் 50% பொறுப்பு என்றால், மீதமுள்ள 50% சமூகத்துக்கும் இருக்கிறது. பா.ஜ.க ஆட்சி செய்கிற மாநிலமோ, ஆட்சி செய்யாத மாநிலமோ பாதிக்கப்பட்ட பெண்களுக்கான உதவிகளைச் செய்ய எங்கள் மகளிரணி எப்போதும் தயாராக இருக்கிறது. எங்களுடைய கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ-க்கள் அல்லது உள்ளாட்சி பிரதிநிதிகள் யாரேனும் இது போன்ற சம்பவங்களில் ஈடுபட்டிருந்தால் அவர்கள்மீது பாரபட்சமின்றி பா.ஜ.க நடவடிக்கை எடுத்திருக்கிறது.

பிரியங்கா காந்தி
பிரியங்கா காந்தி

அண்மையில், ஒடிசாவில் 5 வயது பெண் குழந்தையை, அந்த மாநிலத்தைச் சேர்ந்த அமைச்சரின் ஆதரவாளர் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கியிருக்கிறார். இதையடுத்து ஒடிசா முழுவதும் நாங்கள் பாத யாத்திரை நடத்தினோம். பா.ஜ.க ஆளுகிற உ.பி-யில் இது போன்ற பிரச்னை என்றால் ஓடி வந்து அரசியல் செய்கிற பிரியங்கா காந்தி போன்றவர்கள் மற்ற மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறை நடைபெற்றாலும் குரல் கொடுக்க முன்வர வேண்டும்!''

அடுத்த கட்டுரைக்கு