தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், தமிழில் வெளியிடப்படும் சிறந்த நூல்களைத் தேர்வு செய்து பரிசு வழங்கும் வழக்கம் நடைமுறையில் உள்ளது. அந்த வகையல் கடந்த 2018-ம் ஆண்டு தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு எழுதிய `மூளைக்குள் சுற்றுலா’ என்ற நூல், சிறந்த நூலாகத் தேர்வுக்குழுவினரால் தேர்வுசெய்யப்பட்டது. ஆனால், தனக்கு அந்தப் பரிசு வேண்டாம் என வெ.இறையன்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழ் வளர்ச்சித்துறைச் செயலாளர் மகேசன் காசிராஜனுக்கு அவர் எழுதிய கடிதத்தில், "தமிழில் வெளியிடப்படும் சிறந்த நூல்களுக்குப் பரிசு வழங்கப்படுகிறது. அதன்படி 2018-ல் வெளிவந்த நூல்கள் தேர்வுக்குழுவால் தேர்வு செய்யப்பட்டு, பரிசு குறித்த விவரங்கள் 2021 பிப்ரவரி 8-ம் தேதி வெளியிடப்பட்டன. இதில் என் நூலான `மூளைக்குள் சுற்றுலா’ நூல் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
அரசு விழாவில் பரிசு பெற அழைக்கப்பட்டதற்கு எனது நன்றியை தமிழக அரசுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன். அதேநேரம், 2021-ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்ட எனது படைப்புக்கு தற்போது நடைபெறும் விழாவில் தலைமைச் செயலாளராகப் பரிசு பெறுவது ஏற்புடையதாக இருக்காது. எனவே, எனது நூலுக்குப் பரிசு வழங்குவது தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
