விவசாயிகளின் போராட்டத்தில் பங்குபெற்ற பஞ்சாப் நடிகர் தீப் சித்து 2021-ம் ஆண்டு செப்டம்பரில் `வாரிஸ் பஞ்சாப் டி’ என்ற அமைப்பைத் தொடங்கினார். அதைத் தொடர்ந்து, எதிர்பாராத விதமாக கடந்த ஆண்டு பிப்ரவரியில் ஏற்பட்ட விபத்தில் அவர் உயிரிழந்தார். அவருக்குப் பிறகு அம்ரித்பால் சிங் அந்த அமைப்பை வழிநடத்தத் தொடங்கினார். அப்போது முதல் காலிஸ்தான் தனிநாடு கோரிக்கை குரல் அழுத்தமாக எழுப்பப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கடந்த மாதம் காலிஸ்தான் ஆதரவாளர்களை அமிர்தசரஸ் புறநகர் காவல்துறை கைதுசெய்தது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்த அம்ரித்பால் சிங், தன் ஆதரவாளர்களுடன் காவல் நிலையத்தை முற்றுகையிட்டார். அப்போது நடந்த தள்ளுமுள்ளு தாக்குதல் சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அப்போதே பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மான், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்தார்.
அதைத் தொடர்ந்து, பஞ்சாப் காவல்துறை, அம்ரித்பால் சிங்கைக் கைதுசெய்வதற்கு முயன்றது. ஆனால், அவர் காவல்துறையின் பிடியிலிருந்து தப்பிவிட்டார். இந்த நிலையில்தான், லண்டனில் இருக்கும் காலிஸ்தான் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சிலர் இந்திய தூதரக அலுவலகத்துக்குள் நுழைந்து ஜன்னல் கண்ணாடியை உடைத்திருக்கின்றனர். அங்கிருந்த மூவர்ணக்கொடியை அப்புறப்படுத்தி காலிஸ்தான் கொடியை ஏற்றுவதற்கு முயன்றனர். ஆனால், அங்கிருந்த அதிகாரிகள் அதைத் தடுத்திருக்கின்றனர்.
இந்தச் சம்பவத்துக்கு இந்திய அரசு கண்டனம் தெரிவித்து, லண்டன் தூதரகத்துக்கு சம்மன் அனுப்பியிருக்கிறது. அதில், "லண்டனிலுள்ள இந்திய துணை தூதரகத்தின் வெளியிலிருந்த தேசியக்கொடியை காலிஸ்தான் போராட்டக்காரர்கள் சேதப்படுத்தியது கண்டனத்துக்குரியது. இந்த விவகாரத்தில் தூதரக அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்.
மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக லண்டன் அரசு முழு விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டிருக்கிறது.
அதைத் தொடர்ந்து, லண்டன் அரசின் சார்பில், "இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையினர் ஒருவரைக் கைதுசெய்திருக்கின்றனர். மேலும், விசாரணை மேற்கொண்டிருக்கின்றனர்" எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.