மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் சிகிச்சைக்காக அமெரிக்காவுக்குச் சென்றிருக்க, அவரின் கட்சிக்குள் பல்வேறு சலசலப்புகள் உண்டாகியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
``அடுத்தடுத்த தேர்தல் தோல்விகள், முக்கிய நிர்வாகிகள் விலகல் எனச் சோர்ந்து போயிருந்த தொண்டர்களை உற்சாகப்படுத்துவதற்காக, கட்சியில் நிர்வாகரீதியாக பல மாற்றங்கள் செய்யப்பட்டன. ஆனால், இப்போது பொறுப்புகளில் இருப்பவர்கள் தொண்டர்களை மேலும் மேலும் சோர்வடையச் செய்துகொண்டிருக்கிறார்கள்'' என நொந்துகொள்கிறார்கள் நிர்வாகிகள். நடிகர் கமல்ஹாசன் இரண்டு முறை ஜூம் வழியாக நிர்வாகிகளிடம் சமரசம் பேசியும் இன்னும் சுமுக முடிவை எட்டியபாடில்லை, அவர் வந்து நேரடியாகப் பேசித் தீர்த்தால் மட்டுமே பிரச்னைகள் தீரும்'' என்கிறார்கள் மநீம வட்டாரத்தில்.

2019 நாடாளுமன்றத் தேர்தலில் கிட்டத்தட்ட நான்கு சதவிகித வாக்குகளைப் பெற்ற மக்கள் நீதி மய்யம், 2021 சட்டமன்றத் தேர்தலில் படு தோல்வியைச் சந்தித்தது. கட்சியின் வாக்குவங்கி 2.45 சதவிகிதமாகக் குறைய, கட்சியின் தலைவர் கமல்ஹாசனும் தோல்வியைத் தழுவினார். இது ஒருபுறமிருக்க, கட்சியின் முன்னணி நிர்வாகிகள் மகேந்திரன், முருகானந்தம், சி.கே.குமரவேல், சந்தோஷ் பாபு உள்ளிட்டவர்கள் கட்சியிலிருந்து விலகினர். தொடர்ந்து மக்கள் நீதி மய்யம் கட்சியில் நிர்வாகரீதியாகப் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டன. கட்சியின் தலைவரான கமலே பொதுச்செயலாளர் பொறுப்பையும் ஏற்பதாக அறிவித்தார். மேலும், புதிதாக இரு அரசியல் ஆலோசகர்கள், இரண்டு துணைத் தலைவர்கள், மூன்று மாநிலச் செயலாளர்கள், நிர்வாகக்குழுவில் மேலும் ஓர் உறுப்பினர், நற்பணி மன்ற ஒருங்கிணைப்பாளர் ஆகிய பதவிகளுக்கு நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டனர்.
``இப்போது துரோகிகள் நம்மைவிட்டு விலகிவிட்டனர். உருமாறிய கொரோனாபோல, உருமாறிய மக்கள் நீதி மய்யமாக நிற்கிறோம். இனி படிப்படியாக நல்லது நடக்கும்.”கமல்
அதில், சட்டப் பஞ்சாயத்தில் இயக்கத்தின் மூலம் செயல்பட்டு வந்த சமூக ஆர்வலர்களான, சிவ.இளங்கோ (கட்டமைப்பு) & செந்தில் ஆறுமுகம் (தகவல் தொழில்நுட்பம் & செய்தித் தொடர்பு) இருவருக்கும் கட்சியில் மாநிலச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. இவர்களுடன் மாநிலச் செயலாளர் (தலைமை நிலையம்) பொறுப்பு வழங்கப்பட்ட சரத்பாபு எழில்மலை ஆகிய மூவரும்தான், கட்சி நிர்வாகிகள் கமலுடன் தொடர்புகொள்வதற்கு பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டனர். ஆரம்பம் முதலே நிர்வாகிகளுக்கும் இவர்களுக்கும் சிறு சிறு முரண்கள் ஏற்பட்ட நிலையில், கமல்ஹாசன் அமெரிக்காவுக்குச் சென்றிருக்கும் இந்த நேரத்தில் அது முற்றியுள்ளதாகவும் மண்டலச் செயலாளர்கள் கடும் அதிருப்தியில் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், மக்கள் நீதி மய்யம் வட்டாரத்தில் பேசினோம்.
``ஆரம்பம் முதலே மூன்று மாநிலச் செயலாளர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் ஒத்துப்போகவே இல்லை. ஆனால், கட்சியின் தலைவர் இங்கிருக்கும்வரை அது பெரிதாக வெடிக்கவில்லை. ஆனால், இப்போது தலைவர் இங்கே இல்லாததால் கொஞ்சம் கொஞ்சமாகப் பிரச்னை பெரிதாகிக்கொண்டிருக்கிறது. கட்சியில் இரண்டு துணைத் தலைவர்கள், எட்டு மண்டலச் செயலாளர்கள் இருக்கின்றனர். ஒரு மண்டலச் செயலாளருக்கு 15-20 மாவட்டச் செயலாளர்கள் வருவார்கள். மாநிலச் செயலாளர்கள் மண்டலச் செயலாளர்களிடம் தொடர்புகொண்டு, கட்சி நடவடிக்கைகளை மேற்கொண்டால் செயல்படுத்துவதற்கு எளிதாக இருக்கும். ஆனால், இவர்கள் நேரடியாக நூற்றுக்கும் மேற்பட்ட மாவட்டச் செயலாளர்களுடன் தொடர்புகொண்டு கட்சியை வழிநடத்த நினைப்பது பல்வேறு பிரச்னைகளை உண்டாக்குகிறது. நினைத்த விஷயங்களை சரியாகச் செய்ய முடியவில்லை. அதனால்தான் கட்சியில் நிர்வாகிகள் மத்தியில் சலசலப்புகள் உண்டாகியிருக்கின்றன.
இது தலைவரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு ஜூம் காலில் பஞ்சாயத்தும் நடந்தது. அப்போது துணைத் தலைவர்கள், மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட முன்னணி நிர்வாகிகள் ஒன்றுகூடி, கட்சியில் யாருக்கு என்ன அதிகாரம் என்பதை வரையறை செய்யுங்கள் எனத் தலைவர் கமல் உத்தரவிட்டார். ஆனால், இரண்டுமுறை இந்தக்குழு கூடியும் சுமுக முடிவை எட்ட முடியவில்லை. காரணம், மூன்று மாநிலச் செயலாளர்களும் துணைத் தலைவர்களையும் மற்ற முன்னணி நிர்வாகிகளையும் ஒரு பொருட்டாக மதிப்பதில்லை. தவிர, சிவ.இளங்கோ, செந்தில் ஆறுமுகம் ஓர் அணியாகவும் சரத்பாபு ஓர் அணியாகவும் பிரிந்து, அவர்களுக்குள்ளாகவே பல முரண்பாடுகள் இருக்கின்றன. கட்சி நிர்வாகிகளை என்.ஜி.ஓ-வில் வேலை வாங்குவதுபோலவே மூன்று மாநிலச் செயலாளர்களும் நடத்துகின்றனர். இதனால், கட்சித் தொண்டர்கள் மேலும் சோர்ந்துபோயிருக்கிறார்கள். தலைவர் இந்த மாத மத்தியில் தமிழ்நாட்டுக்கு வருகிறார். அவர் நேரடியாக வந்து பேச்சுவார்த்தை நடத்தினால் மட்டுமே இந்தப் பிரச்னைகள் ஓயும்'' என்கிறார்கள்.

இந்த விஷயங்கள் குறித்து, கட்சியின் மாநிலச் செயலாளர் (தகவல் தொழில்நுட்பம் & செய்தித் தொடர்பு) செந்தில் ஆறுமுகத்திடம் பேசினோம்.
``எங்கள் கட்சியில் நீங்கள் சொன்னது போன்ற பிரச்னைகள் எதுவும் இல்லை. கட்சியை வழிநடத்துவதற்கு பல்வேறு யுக்திகளைக் கையாளுகிறோம். விவாதங்கள் நடத்துகிறோம். கருத்து வேறுபாடுகள் இருப்பதுபோல வெளியில் தெரியலாம். ஆனால், அப்படி எதுவும் இல்லை. நீங்கள் எங்கள் கட்சியின் செய்தித் தொடர்பாளரிடம் பேசிக்கொள்ளுங்கள்'' என்றார்.
கட்சியின் செய்தித் தொடர்பாளர், முரளி அப்பாஸிடம் பேசினோம்.
``எங்கள் கட்சி நிர்வாகிகளுக்கிடையில் கருத்துரீதியான மாறுபாடுகள் இருந்து ஆரோக்கியமான விவாதங்கள் இருந்திருக்கலாம். ஆனால், பெரிய மோதல், சண்டை, சலசலப்பு அப்படியெல்லாம் எதுவும் இல்லை. நேற்று முன்தினம்கூட அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து நிர்வாகிகள் கூட்டம் ஜூமில் நடந்தது. சில பதவிகளின் அதிகார வரைமுறைகளை சரிசெய்யச் சொல்லப்பட்டிருக்கிறது. அவ்வளவுதான்'' என்கிறார் அவர்.