Published:Updated:

கர்நாடகாவின் மதமாற்றத் தடைச் சட்டம்! - விளைவுகள் என்னென்ன?!

நீதிமன்றம்
News
நீதிமன்றம்

'கட்டாய மதமாற்றத் தடைச் சட்டம்' பா.ஜ.க-வின் அடிப்படைக் கொள்கைகளில் ஒன்று. எனவே, இந்தியாவில் பா.ஜ.க ஆட்சி செய்துவரும் பல்வேறு மாநிலங்களிலும் கடும் எதிர்ப்புகளுக்கிடையே 'கட்டாய மதமாற்றத் தடைச் சட்டம்' நிறைவேற்றப்பட்டுவருகிறது.

இந்திய அரசியலில், 'கட்டாய மதமாற்றத் தடைச் சட்டம்' குறித்த சர்ச்சைகள் அவ்வப்போது எழுவதும், பின்னர் அடங்குவதும் தொடர்கதையாகிவருகிறது. அண்மையில் கர்நாடக சட்டசபையில், பசவராஜ் பொம்மை தலைமையிலான பா.ஜ.க அரசு கொண்டுவந்துள்ள 'மத சுதந்திரப் பாதுகாப்பு மசோதா 2021' என்ற பெயரிலான கட்டாய மதமாற்றத் தடைச் சட்டத்துக்கு எதிராக அந்த மாநிலம் முழுவதும் போராட்டங்கள் வெடிக்கத் தொடங்கியிருக்கின்றன.

ஏற்கெனவே, தமிழ்நாட்டில், கடந்த 2002-ம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில், ஜெயலலிதாவால் கொண்டுவரப்பட்ட 'கட்டாய மதமாற்றத் தடைச் சட்டம்' கடும் எதிர்ப்புகளைச் சந்தித்தது. பா.ஜ.க தவிர்த்து அனைத்துக் கட்சிகளும் இந்தச் சட்டத்தை எதிர்த்தன. ஆனாலும் தன் முடிவிலிருந்து பின்வாங்காத ஜெயலலிதா, தேர்தல் தோல்விக்குப் பிறகு 'மதமாற்றத் தடைச் சட்டத்தை' ரத்துசெய்யும் அவசரச் சட்டத்தைப் பிறப்பித்தார்.

ஜெயலலிதா
ஜெயலலிதா

'கட்டாய மதமாற்றத் தடைச் சட்டம்' பா.ஜ.க-வின் அடிப்படைக் கொள்கைகளில் ஒன்று. எனவே, இந்தியாவில் பா.ஜ.க ஆட்சி செய்துவரும் பல்வேறு மாநிலங்களிலும் கடும் எதிர்ப்புகளுக்கிடையே 'கட்டாய மதமாற்றத் தடைச் சட்டம்' நிறைவேற்றப்பட்டுவருகிறது. இந்த விவகாரத்தில், சட்டத்தைக் கொண்டுவரும் அரசுத் தரப்பு, 'பண ஆசை காட்டி, ஏமாற்றி அல்லது வற்புறுத்தி மக்களை மதம் மாறச் செய்வது தவறு' என்கிறது. எதிர்த்தரப்போ, 'மதம் மாறுவதென்பது தனிமனித உரிமை சார்ந்தது. ஆனால், 'கட்டாயமாக மதமாற்றம் செய்கிறார்கள் என்ற பொய்ப் பிரசாரத்தைப் பரப்பி, அதன் வழியே இப்படியொரு சட்டத்தை அமல்படுத்துவதன் நோக்கமே, தங்கள் ஆதிக்கத்திலிருந்து மக்கள் என்றைக்கும் விடுதலை பெற்றுவிடவே கூடாது என்ற சதி நோக்கத்தைக்கொண்டது' என்று கொந்தளிக்கின்றனர்.

இந்தப் பிரச்னை குறித்துப் பேசுகிற தமிழக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ராமலிங்க ஜோதி, ''முகலாயர்களும் பிரிட்டிஷாரும் பல நூற்றாண்டுகளாக இந்த மண்ணை ஆட்சி செய்துவந்தபோதும்கூட, மதமாற்றத்தால் இந்து மதத்தை அழித்துவிட முடியவில்லை. அப்படியிருக்கும்போது, இன்றைக்கு வந்துள்ள ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க போன்ற இயக்கங்கள் 'மத மாற்றத்தால் இந்து மதம் அழிந்துவிடும்' என்று கூப்பாடு போடுவதே, அரசியல் உள்நோக்கம்கொண்டது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

மதத்தைவைத்து தங்கள் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றிக்கொள்ள நினைக்கிறார்கள் இவர்கள். இதற்காக, 'கட்டாய மத மாற்றம்' என்ற புதிய சொற்றொடரையே கொண்டுவந்து என்னென்னவோ கதை சொல்லி பயமுறுத்திவந்தவர்கள், ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததும் தாங்கள் நினைத்ததைச் சாதிக்க, புதிதாகச் சட்டங்களை இயற்றிக்கொண்டிருக்கிறார்கள்.

இந்தியா என்பது ஒரே நாடு அல்ல. இது நாடுகளின் நாடு. இங்கே பல்வேறு சமய, பண்பாடுகளைக்கொண்ட பலதரப்பட்ட மக்கள் வாழ்ந்துவருகிறார்கள். இந்தப் பன்மைத்துவத்தை சிதைத்து, ஒரே மதம் என்ற போர்வைக்குள் அடக்க முயற்சிப்பதுதான் 'கட்டாய மதமாற்றத் தடைச் சட்டம்'. சுருக்கமாகச் சொன்னால், 'இந்தியா இந்துக்களின் நாடு' என்று கட்டமைக்கப்பார்க்கிறது பா.ஜ.க. ஆனால், 'இந்தியா இந்துக்களுக்குமான நாடே தவிர... இது இந்துக்களின் நாடு அல்ல.' இதைத்தான் ராகுல் காந்தியும் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்.

பசவராஜ் பொம்மை
பசவராஜ் பொம்மை

கட்டாயப்படுத்தி யாரும் யாரையும் மதம் மாற்றிவிட முடியாது. அப்படி மாற்றப்படுவதாகப் பேச்சுக்கு வைத்துக்கொண்டோமானால்கூட, சம்பந்தப்பட்ட மக்களுக்கு விழிப்புணர்வைக் கொடுப்பதுதான் அரசின் வேலை. அதை விடுத்து, மதமாற்றத்தையே தடை செய்வது போன்று, சட்ட திட்டங்களை வகுத்துவைத்துக்கொண்டு அதைக் 'கட்டாய மதமாற்றத் தடைச் சட்டம்' என்ற பெயரில் சட்டபூர்வமாக மாற்ற முயல்வது சர்வாதிகாரம்.

இந்தியா சுதந்திரம் பெற்ற நாளில்கூட, 'நான் ராமரைத்தான் கும்பிடுவேன். அதற்காக மற்றவர்களையும் ராமரைக் கும்பிடச் சொல்லி ஒருநாளும் என் மதக் கோட்பாடுகளைத் திணிக்க மாட்டேன்' என்றார் மகாத்மா காந்தி. ஆனால், பா.ஜ.க-வினர் இந்துக்களுக்கு ஆதரவானவர்களாக நடித்து, இது போன்ற சட்டங்களை இயற்றி தனிமனித உரிமைகளை நசுக்குகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஒருவர் எந்தக் கடவுளை வணங்க வேண்டும் என்பது அவரின் தனிப்பட்ட உரிமை. அப்படியிருக்கும்போது, 'இந்த மதத்தைவிட்டு நீ எங்கும் செல்லக் கூடாது' என்று கட்டாயப்படுத்துவதே, இந்து மதத்தின் பாதுகாவலனாக தங்களைக் காட்டிக்கொண்டு, இந்து மக்களின் வாக்குகளைப் பெறும் மறைமுக முயற்சிதான்.

அதாவது மதம் எனும் புனிதமான விஷயத்தை, தங்களுக்குச் சாதகமான வாக்குக் கணிதமாக மாற்றுகின்றனர் பா.ஜ.க-வினர். காரணம் இந்தியாவில் இந்து மக்களின் எண்ணிக்கைதான் பெரும்பான்மையாக இருக்கிறது. எனவே, இப்படியொரு முடிவை எடுத்து, சட்டமாக்கத் துடிக்கிறது பா.ஜ.க. எப்படி சாதித் தலைவர்கள் சாதி துவேஷத்தைப் பரப்புவார்களோ... அதுபோல், பா.ஜ.க மதத் துவேஷத்தைப் பரப்பிவருகிறது'' என்கிறார் அழுத்தமாக.

ராமலிங்க ஜோதி - எம்.என்.ராஜா
ராமலிங்க ஜோதி - எம்.என்.ராஜா

காங்கிரஸின் எதிர்ப்புகளுக்கு பதிலளித்துப் பேசும் தமிழக பா.ஜ.க துணைத் தலைவர் எம்.என்.ராஜா, ''சட்டம் என்பதே மக்களை நெறிமுறைப்படுத்துவதற்குத்தான். எனவே, தவறான பல்வேறு சட்டங்கள் இன்றைக்குப் புதிய சட்டங்களாக திருத்தப்பட்டுவருகின்றன. அந்தவகையில், மக்களுக்காகத்தான் சட்டங்கள் இயற்றப்படுகின்றனவே தவிர, சட்டங்களுக்காக மக்கள் அல்ல.

மக்களின் ஏழ்மை நிலையைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு, அப்பாவி மக்களை மூளைச்சலவை செய்து மதம் மாற்றிவிடுகிற கும்பல்கள் நாட்டில் இருக்கின்றன. இவர்களால் மதம் மாற்றப்பட்டவர்கள் பின்னாளில், தங்கள் தாய் மதத்துக்கே திரும்ப நினைத்தாலும்கூட மதமாற்றக் கும்பல்களால் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள்.

இன்றைய சூழ்நிலையில், எல்லோருமே நன்கு படித்து, சம அந்தஸ்துடன் நல்ல நிலையில் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். பா.ஜ.க-வும் இதைத்தான் விரும்புகிறது... வலியுறுத்துகிறது. யாரொருவரும் மதம் மாறுவதில் எங்களுக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை. அதேசமயம், சம்பந்தப்பட்ட நபர் கட்டாயப்படுத்தலின் பேரில் மதம் மாறினால், அது தவறு என்றுதான் நாங்கள் சொல்கிறோம்.

அமித் ஷா - நரேந்திர மோடி
அமித் ஷா - நரேந்திர மோடி

சில குறிப்பிட்ட பகுதிகளில், மக்களை ஏமாற்றி, கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்கிறார்கள்தான். அதனால்தான், மதம் மாற விரும்புகிறவர்களை உரிய முறையில் விண்ணப்பம் செய்யச் சொல்கிறோம். அந்த விண்ணப்பத்துக்கு யாரேனும் ஆட்சேபனை தெரிவிக்கிறார்களா என்றெல்லாம் உண்மையைக் கண்டறிய கால அவகாசம் எடுத்துக்கொள்கிறோம். ஆக, சட்டத்தின் இந்த அம்சங்கள் உண்மைநிலையைக் கண்டறிவதற்குத்தானே தவிர, வேறு எந்த உள்நோக்கத்துக்குமானது அல்ல.

கர்நாடகா மாநிலத்தில், கட்டாயப்படுத்தலினால் மதம் மாறியவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. எனவேதான், இப்படியொரு சட்டத்தை அந்த மாநில அரசு இயற்றுகிறது. இதில் எந்தத் தவறும் இல்லை!'' என்கிறார் விளக்கமாக.