Published:Updated:

``பிரதமருக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டது" - அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு டிஜிபி பதில்

டிஜிபி சைலேந்திர பாபு

``பிரதமரின் வருகையின்போது பாதுகாப்புக் குளறுபடிகள் இருந்ததற்கான எந்த ஒரு தகவலும் இல்லை.'' - டிஜிபி சைலேந்திர பாபு

``பிரதமருக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டது" - அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு டிஜிபி பதில்

``பிரதமரின் வருகையின்போது பாதுகாப்புக் குளறுபடிகள் இருந்ததற்கான எந்த ஒரு தகவலும் இல்லை.'' - டிஜிபி சைலேந்திர பாபு

Published:Updated:
டிஜிபி சைலேந்திர பாபு

சென்னை, மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் ஜூலை 29-ம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ம் தேதி வரை நடைபெற்றன. இந்தப் போட்டியைத் தொடங்கிவைக்க பிரதமர் மோடி சென்னைக்கு வந்திருந்தார். அப்போது பிரதமருக்கு தமிழக அரசு போதுமான பாதுகாப்பு வழங்கவில்லை என அண்ணாமலை நேற்று குற்றம்சாட்டியிருந்தார்.

இது தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``சென்னையில் செஸ் ஒலிம்பியாட் விளையாட்டு தொடக்கவிழாவுக்கு பிரதமர் மோடி வந்திருந்தபோது, உலக நாடுகளைச் சேர்ந்த பலர் அங்கு வந்திருந்தார்கள். அப்போது பிரதமருக்கு தமிழக அரசு போதுமான பாதுகாப்பு வழங்கவில்லை என்பது பல ஆதாரங்களின் அடிப்படையில் எங்களுக்குத் தெரியவந்தது.

அண்ணாமலை
அண்ணாமலை

பிரதமருக்கே போதுமான பாதுகாப்பு வழங்க முடியவில்லையென்றால், சாமானிய மக்களுக்கு எப்படிப் பாதுகாப்பு அளிப்பார்கள்... இது தொடர்பாக ஆளுநரிடம் புகார் அளித்திருக்கிறோம். காவல்துறை, முதல்வரின் இமேஜ் விஷயத்தில்தான் கவனம் செலுத்துகிறதே தவிர, சாதாரண மக்களைப் பாதுகாப்பதற்கு அவர்களுக்கு நேரமில்லை" என தமிழக அரசு மற்றும் காவல்துறை மீது குற்றம்சாட்டினார்.

இதற்கு பதிலளிக்கும்விதமாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக டிஜிபி சைலேந்திரபாபு, "பிரதமரின் வருகையின்போது பாதுகாப்புக் குளறுபடிகள் இருந்ததற்கான எந்த ஒரு தகவலும் இல்லை. பிரதமருக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டது. பாதுகாப்பு உபகரணங்கள்கூட நம்மிடம் சிறப்பானதாகவே இருக்கின்றன.

சைலேந்திரபாபு
சைலேந்திரபாபு

குறிப்பாக தமிழ்நாடு காவல்துறை அதிக எண்ணிக்கையிலான, தரமான உபகரணங்களைப் பயன்படுத்துகிறது. அண்டை மாநிலங்கள்கூட நம்மிடமிருந்து பாதுகாப்பு உபகரணங்களை உதவிக்காக பெற்றுச் செல்கின்றன. மேலும், நம்மிடம் இரண்டு மடங்கு பாதுகாப்புக் கருவிகள் இருக்கின்றன. அவற்றில், பயன்பாட்டுக் காலம் முடிந்தவற்றைத்தான் நாம் அப்புறப்படுத்துகிறோம்" எனத் தெரிவித்திருக்கிறார்.