Published:Updated:

சொத்து வரி உயர்வு - சத்தமின்றி மக்களிடம் அதிருப்தியைச் சம்பாதிக்கிறதா திமுக அரசு?

முதல்வர் ஸ்டாலின்

தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் உள்ள குடியிருப்பு, வணிக, கல்விப் பயன்பாடு கட்டடங்களின் சொத்து வரி, 20 முதல் 150 சதவிகிதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

சொத்து வரி உயர்வு - சத்தமின்றி மக்களிடம் அதிருப்தியைச் சம்பாதிக்கிறதா திமுக அரசு?

தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் உள்ள குடியிருப்பு, வணிக, கல்விப் பயன்பாடு கட்டடங்களின் சொத்து வரி, 20 முதல் 150 சதவிகிதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

Published:Updated:
முதல்வர் ஸ்டாலின்

சொத்து வரி உயர்வு:

மத்திய அரசால் அமைக்கப்பட்ட 15-வது நிதி ஆணைம் தனது அறிக்கையில், 2022-2023-ம் ஆண்டு முதல் உள்ளாட்சி அமைப்புகளில் ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில் மானியம் பெறுவதற்கான தகுதியைப் பெறும் பொருட்டு 2021-2022-ம் ஆண்டில் சொத்து வரி தள வீதங்களை (Floor Rates) அறிவிக்க வேண்டும் என்றும், மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிக்கு ஏற்ப ஆண்டுதோறும் சொத்து வரியை உயர்த்திட வேண்டும் என்றும் நிபந்தனை விதித்துள்ளது .

தமிழக அரசு - சொத்து வரி
தமிழக அரசு - சொத்து வரி

இந்தக் காரணங்களால் தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில், குடியிருப்பு, வணிகக் கட்டடங்கள் மற்றும் கல்வி பயன்பாட்டுக் கட்டடங்களின் பரப்பளவுக்கு ஏற்ப சொத்து வரியை உயர்த்தியிருக்கிறது தமிழக அரசு. 600 சதுர அடிக்கும் குறைவான குடியிருப்புக் கட்டடங்களுக்கு 25 சதவிகிதமும், 601 முதல் 1,200 சதுர அடி வரையிலான கட்டடங்களுக்கு 50 சதவிகிதமும், 1,201 முதல் 1,800 சதுர அடி வரையிலான கட்டடங்களுக்கு 75 சதவிகிதமும், 1,800 சதுர அடிக்கும் அதிகமுள்ள கட்டடங்களுக்கு 100 சதவிகிதம் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அமைச்சர் விளக்கம்:

வரி உயர்வு தொடர்பாகச் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கே.என்.நேரு, ``பொதுமக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய, சொத்து வரி உயர்வு அவசியம். ஏழை மக்களும், நடுத்தர மக்களும் பாதிக்காத வகையில் வரி உயர்த்தப்பட்டுள்ளது. மத்திய அரசின் நிதிக்குழு கூறியதன் அடிப்படையிலேயே சொத்து வரி உயர்த்தப்பட்டிருக்கிறது. அப்படிச் சொத்து வரியை உயர்த்தவில்லையென்றால், உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி ஒதுக்கீடு கிடையாது என்று மத்திய அரசு தெரிவித்துவிட்டது. இந்த வரி உயர்வு நாட்டின் மற்ற நகரங்களைவிட மிகவும் குறைவு" என்றார்.

கே.என்.நேரு
கே.என்.நேரு

மேலும், ``அதிமுக ஆட்சியில் 200 சதவிகிதம் வரி உயர்த்தப்பட்டது. தேர்தல் வந்த காரணத்தால் தங்களின் முடிவை அதிமுக நிறுத்திவைத்துவிட்டது. தற்போது ஏழைகளுக்குக் குறைவாகவும், 1,800 சதுர அடிக்கு மேற்பட்ட கட்டடங்களுக்கு அதிகமாகவும் வரி உயர்த்தப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும்போது தமிழகத்தில் குறைந்த சொத்து வரி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது" என்று கூறியிருந்தார்.

சொத்து வரி உயர்ந்ததற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றன. எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, ``ஆளுங்கட்சிக்கு வாய்ப்பளித்த மக்களுக்குச் சிறப்புப் பரிசாக 150% வரை சொத்து வரி உயர்வை அளித்திருக்கிறது. இது வெறும் டிரெய்லர்தான். இனிதான் மக்களுக்குப் பல பம்பர் பரிசுகள் காத்திருக்கின்றன" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த விவகாரம் தொடர்பாக அ.தி.மு.க வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர், பாபு முருகவேலிடம் பேசினோம். ```படிக்கிறது ராமாயணம், இடிக்கிறது பெருமாள் கோயில்' என்ற கதைதான் திமுக-வுடையது. எதிர்க்கட்சியாக இருந்த சமயத்தில், மக்களுக்கு எதிரானது என்று எதையெல்லாம் சொல்லிப் போராட்டம் நடத்தினார்களோ, இப்போது ஆளுங்கட்சியாக இருக்கும் நேரத்தில் அவை அனைத்தும் நியாயமாக மாறிவிடும். கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில், சொத்து வரி உயர்த்தப்படும் என்று ஓர் அறிவிப்பு வெளியானது. அதற்கே போராட்டம், ஆர்ப்பாட்டம் என்று கூப்பாடு போட்டது திமுக. இப்போது, திருட்டுத்தனமாக, மக்களைச் சந்திக்கத் திராணி இல்லாமல், இரவோடு இரவாக அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது திமுக. இதற்கு முன்பாக எப்போது சொத்து வரி உயர்த்தப்பட்டது என்று பார்த்தால் அதுவும் திமுக ஆட்சியில்தான்.

பாபு முருகவேல்
பாபு முருகவேல்

வரி உயர்வுக்கு மத்திய அரசுதான் காரணம் என்று திமுக சொல்கிறதென்றால், தமிழக மக்களுக்கு எதிரான திட்டங்களை மத்திய அரசு கொண்டுவந்தால் போராடுவோம் என்று கூறியதே திமுக... இதுவும் தமிழக மக்களுக்கு பாதிப்பு தரக்கூடிய செயல்தானே... உண்மையில் பலம்கொண்ட ஓர் அரசாக இருந்தால் மத்திய அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்தலாமே... அதை ஏன் செய்யவில்லை? அப்படியென்றால், உங்களுக்குச் சாதகமான விஷயம் என்றால் மத்திய அரசு கட்டாயப்படுத்தியது என்று சொல்வது; பாதகமான விஷயமென்றால் எதிர்த்து போராடுவது இதைத்தான் திமுக-வினர் செய்துவருகிறார்கள். அவர்களின் நிலைப்பாடு, சிறிதும் பொதுநலம் இல்லாத தன்னலம் சார்ந்த ஒரு விஷயமாக மட்டுமே இருக்கிறது" என்று பேசினார்.

இந்த விவகாரம் தொடர்பாக பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதியிடம் பேசினோம். ``கடந்த அதிமுக ஆட்சியில் சொத்து வரி உயர்வு தொடர்பான அறிவிப்பு வந்தபோது, `சொத்து வரியா அல்லது சொத்தைப் பறிப்பதற்கு வரியா?’ என்று கூறியது திமுக. இன்று சொத்து வரியை உயர்த்தி, ஏழை மக்களின் வயிற்றில், சிறு, குறு தொழிலாளர்களின் வயிற்றில் அடித்திருக்கிறது திமுக. கொரோனா பேரிடர் காரணமாக, வியாபாரம் மோசமாக இருக்கிறது, பொருளாதாரம் மிக மோசமாக இருக்கிறது என்று சமீபத்தில்தான் நிதியமைச்சர் தெரிவித்தார். இப்போது சொத்து வரியை உயர்த்தியிருப்பதன் மூலம் தமிழகம் முழுவதும் உள்ள ஏழை எளிய மக்களின் வாடகை உயரும். இது மிகவும் தவறான செயல்" என்றார்.

நாராயணன் திருப்பதி
நாராயணன் திருப்பதி

மேலும், `` `இந்தியாவின், மற்ற பகுதிகளைவிட ஏழை எளிய மக்களுக்குத் தமிழகத்தில் சொத்து வரி குறைவு’ என்று அமைச்சர் பேசியிருக்கிறார். உண்மையில், மும்பையில் 500 சதுர அடிக்கும் குறைவான கட்டடங்களில் வசிக்கும் மக்களுக்குச் சொத்து வரி இல்லை. அமைச்சர் தெரியாமல் சொல்கிறார் அல்லது வேண்டுமென்றே சொல்கிறார் என்று நினைக்கிறேன். அடுத்தது, மத்திய அரசுதான் காரணம் என்று சொல்வது தவறான ஒன்று. மத்திய அரசு எப்படி மாநில அரசை நிர்பந்திக்க முடியும்... அடிப்படையான சொத்து வரியை வசூலிக்க வேண்டும் என்றுதான் மத்திய அரசு கூறியிருக்கிறது. இந்த விஷயத்தில் அமைச்சர் தெரியாமல் பேசுகிறார் அல்லது தெரிந்தே மத்திய அரசைக் குறை சொல்கிறார்" என்று பேசினார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism