Published:Updated:

`கடைகளில் கட்டாய இருக்கை வரவேற்கிறோம்; அதிகாரிகளை நினைச்சாதான்...'-வணிகர்களின் கவலையும் விளக்கமும்!

தி.நகர்

கடைகள், நிறுவனங்களின் அனைத்துப் பணியாளா்களுக்கும் இருக்கை வசதி வழங்குவது அவசியமானது.

`கடைகளில் கட்டாய இருக்கை வரவேற்கிறோம்; அதிகாரிகளை நினைச்சாதான்...'-வணிகர்களின் கவலையும் விளக்கமும்!

கடைகள், நிறுவனங்களின் அனைத்துப் பணியாளா்களுக்கும் இருக்கை வசதி வழங்குவது அவசியமானது.

Published:Updated:
தி.நகர்
கடைகள், நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்துப் பணியாளர்களுக்கும் இருக்கை வசதி அளிப்பதற்கான சட்ட மசோதா, சட்டப்பேரவையில் கடந்த திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. தமிழக அரசின் இந்த முன்னெடுப்புக்குப் பல தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்துகொண்டிருக்கின்றன.

இது தொடர்பாக, தொழிலாளா் நலன்- திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சா் சி.வி.கணேசன் சட்டமன்றத்தில் தாக்கல் செய்த மசோதாவில்,

``தமிழகத்திலுள்ள கடைகள், நிறுவனங்களில் பணிபுரிவோா் அவா்களின் வேலை நேரம் முழுக்க நிற்கவைக்கப்படுகின்றனா். அதன் விளைவாக பலவகையான உடல்நலக் கேடுகளுக்கு உள்ளாகின்றனா். இப்படிப் பலரும் தங்களின் வேலை நேரம் முழுவதும் நின்று கொண்டேயிருக்கவேண்டிய நிலை இருக்கிறது. இதைக் கருத்தில்கொண்டு, கடைகள், நிறுவனங்களின் அனைத்துப் பணியாளா்களுக்கும் இருக்கை வசதி வழங்குவது அவசியமானது. இதற்கேற்ற வகையில், 1947-ம் ஆண்டு தமிழ்நாடு கடைகள், நிறுவனங்கள் சட்டத்தை உரிய முறையில் திருத்தம் செய்வதென முடிவு செய்யப்பட்டுள்ளது'' என்று கூறப்பட்டுள்ளது.

வசந்தபாலன்
வசந்தபாலன்
Photo: Vikatan

தமிழக அரசின் இந்த நடவடிக்கையை மனித உரிமை அமைப்புகள், தொழிலாளர்கள் அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் வரவேற்றுள்ளனர். திரைப்பட இயக்குநர் வசந்தபாலன் இது குறித்து, ``தமிழக அரசுக்கு நன்றி. என் `அங்காடித்தெரு’ திரைப்படத்தின் கனவு மெல்ல மெல்ல நிறைவேறுகிறது. `அங்காடித் தெரு’ திரைப்படத்தில் தொடர்ந்து நின்றுகொண்டே வேலை செய்வதால், கால்களில் ஏற்படக்கூடிய வெரிக்கோஸ் நோய் பற்றிக் கூறியிருப்பேன். உங்களுக்கு நினைவிருக்கலாம்'' என தன் சமூக வலைதளப் பக்கங்களில் இந்த விஷயத்தைப் பகிர்ந்து அரசுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகக்குழு உறுப்பினர் லெனின் இது குறித்துப் பேசும்போது,

``எட்டு மணி நேர வேலை என்பதுதான் சட்டப்படியானது. ஆனால், வணிக நிறுவனங்களில் அதைவிடப் பல மணி நேரம் அதிகமாக வேலை வாங்குகிறார்கள். அதோடு, பணியாளர்கள் நின்றுகொண்டே வேலை பார்க்கவேண்டிய சூழல்தான் இருக்கிறது. ஓய்வு நேரத்தில்கூட பல கடைகளில் அவர்களை உட்காரவிடுவதில்லை. அதை ஒரு விதியாகவே வைத்திருக்கிறார்கள். இதனால், நரம்பு மற்றும் எலும்பு சம்பந்தமாக பல்வேறு பாதிப்புகள் உண்டாகின்றன. குறிப்பாக பெண்களுக்கு பல்வேறு பாதிப்புகள் உண்டாகின்றன. அதனால், வேலை முடிந்து வீட்டுக்குச் சென்றாலும் அவர்களால் முழுமையாக ஓய்வெடுக்க முடியாமல், அடுத்த நாள் வேலைக்கு வரவேண்டியிருக்கிறது. இது அவர்களுக்கு மனம் சார்ந்த பிரச்னைகளையும் உண்டாக்குகிறது. அதுமட்டுமல்ல, இது அடிப்படையில் மனித உரிமை மீறலும் கூட. உட்கார்ந்துகொண்டு இருப்பதாலேயே, பணியாளர் அலெர்ட்டாக இல்லை என்று சொல்வது அடிப்படையிலேயே தவறான விஷயம். இது கடந்தகால நிலப்புரபுத்துவ முறையின் நீட்சியாகத்தான் தோன்றுகிறது.

லெனின், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
லெனின், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

சொந்தமாக பெட்டிக்கடை வைத்திருப்பவர்கள், கடைக்கு ஆள் வராத நேரங்களில் உட்கார்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். அதனால், அவர்களின் தொழில் ஒன்றும் நஷ்டமடைந்துவிடவில்லை. ஆனால், வேலை செய்யும் ஊழியர்கள் அமர்ந்தால் மட்டும் நஷ்டமடைந்துவிடும் என்று சொல்வது எப்படிச் சரியான பார்வையாக இருக்கும்... அதேபோல, ஒருசில நிறுவனங்களில், இடத்தை ஒரு காரணமாகச் சொல்லி, பணியாளர்கள் அமர்வதற்கு இடம் இல்லை என்பார்கள். கடையிலுள்ள உயிரற்ற பொருள்களுக்குத் தரும் முக்கியத்துவத்தை உயிருள்ள மனிதர்களுக்குத் தர மறுப்பது எந்தவிதத்தில் நியாயம்... தங்களின் கடைகளில், நிறுவனங்களில் வேலை பார்க்கும் ஊழியர்களின், சுய கௌரவத்தை, உடல்நலத்தைக் காக்கவேண்டியது ஒவ்வொரு நிறுவனத்தின் பொறுப்பும்கூட. அரசு செய்வதற்கு முன்பாக நிறுவனங்களே இதைச் செய்திருக்க வேண்டும். ஆனால், செய்யவில்லை. இந்தநிலையில், தமிழக அரசு கொண்டு வந்திருக்கும் சட்டம் குறைந்தபட்சம் பணியாளர்களுக்கு ஆசுவாசத்தை அளிக்கும் வகையில் இருக்கிறது. ஆனால், இதையும் பல நிறுவனங்கள் ஏமாற்றுவதற்கு வாய்ப்பிருக்கிறது. ஆனால், அரசு முறையாகக் கண்காணிக்க வேண்டும். மீறுபவர்களுக்கு தண்டனைகள் வழங்க வேண்டும்'' என்றார்.

``இந்தச் சட்டம் பணியாளர்களின் மனித உரிமையை, மனித கௌரவத்தைக் காப்பாற்றுவதற்கான ஒரு முயற்சி. கட்டாயம் தமிழ்நாட்டில் இருக்கிற வணிக நிறுவனங்கள், வணிகச் சங்கப் பேரவைகளும் இதை ஏற்று அமல்படுத்துவதற்கு முன்வரவேண்டும்.''
லெனின்

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் விக்கிரமராஜாவிடம் இதுகுறித்துப் பேசினோம்.

``தமிழ்நாட்டில் பெரும்பாலான கடைகளில் வேலை பார்க்கிற நேரத்தைத் தவிர மற்ற நேரங்களில் அமர்வதற்கு இருக்கைகள் இருக்கும். ஒருசில கடைகளில் அதற்கான வாய்ப்பில்லை. காரணம், ஜவுளிக்கடை போன்று நின்றுகொண்டு செய்யக்கூடிய வியாபாரமாக அது இருக்கும். அமர்ந்துகொண்டு சர்வீஸ் செய்தால், வாடிக்கையாளர்களே விரும்ப மாட்டார்கள். பெரிய நிறுவனங்களில் இருக்கைகள் இருக்காது. ஆனால், ஓய்வு நேரங்களில் கேன்டீன் போன்ற இடங்களில் அமர்ந்து ஓய்வு எடுத்துக்கொள்ளலாம். இது பெரும்பாலும் வெளியில் தெரிவதில்லை. சட்டம் இயற்றுவதால் எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. காரணம், எங்கள் கடைகளில் வேலை பார்க்கும் ஊழியர்களை எங்கள் குடும்பத்தில் ஒருவராகத்தான் நாங்கள் பார்க்கிறோம். கடைக்கு முதலாளி யார், தொழிலாளி யார் என்கிற வேறுபாடு இல்லாமல்தான் பல இடங்களில் வேலை பார்ப்போம்.

விக்கிரமராஜா
விக்கிரமராஜா

எங்களைப் பொறுத்தவரை, ஊழியர்களுக்கு இருக்கை போடுவதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. பல கோடித் தொழிலாளர்கள், அவர்களுக்கான உரிமையோடும் ஆரோக்கியத்தோடும் இருக்க வேண்டும் என்பது முதல்வரின் நோக்கம். அதேவேளையில், இந்தச் சட்டம் நடைமுறைக்கு வரும்போது, ஒருசில அதிகாரிகள், அதைத் தவறாகப் பயன்படுத்த வாய்ப்பிருக்கிறது. இருக்கைகள் இருந்தும் இல்லை எனச் சொல்லி ஃபைன் போடுவார்கள். அவர்களின் கைகளில் எங்களைச் சிக்கவைத்துவிடக் கூடாது என்கிற கோரிக்கையை முதல்வருக்கு நாங்கள் முன்வைக்கிறோம். மாஸ்க் விஷயத்தில்கூட அதுதான் நடந்துகொண்டிருக்கிறது. சில கடைகளில் அப்போதுதான் மாஸ்க்கைக் கழற்றி முகத்தைத் துடைப்பார்கள். அந்த நேரத்தில்வந்து அதிகாரிகள் ஃபைனைப் போட்டுவிடுவார்கள்.

அதேபோல, மூத்த அதிகாரிகள் ஒரு நாளைக்கு இவ்வளவு வசூலிக்க வேண்டும் என டார்க்கெட் ஃபிக்ஸ் செய்துவிடுவார்கள். எங்குமே ஃபைன் கலெக்‌ஷன் ஆகவில்லை என்றால், நேரடியாக வியாபாரிகளிடமே வந்து இரண்டு ஃபைன் போட்டுக்கொள்கிறேன் எனச் சொல்லி பணத்தை வாங்கிச் செல்லும் சம்பவங்களும் நடந்துகொண்டிருக்கின்றன. அதனால் அதிகாரிகளின் அத்துமீறல் இல்லாதவகையில், இந்தச் சட்டம் இயற்றப்பட வேண்டும், வணிகர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்கிற கோரிக்கையை முதல்வரைச் சந்தித்து முன்வைக்கவிருக்கிறோம்'' என்கிறார் அவர்.

கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்
கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்

தி.மு.க-வின் செய்தித் தொடர்பாளர், கான்ஸ்டைன்டன் ரவீந்திரனிடம் இது குறித்துப் பேசினோம்.

``வணிகர்கள் சட்டத்தை மீறாத வரை அதிகாரிகளைப் பார்த்து பயப்படத் தேவையில்லை. கடைகளில் மூன்று பேர் வேலை செய்தால், மூன்று இருக்கைகள் இருக்க வேண்டும் அவ்வளவுதான். அது இருந்துவிட்டால் யாருக்கும் பயப்படத் தேவையில்லை. இருக்கைகள் இருந்தும் இல்லை என்று யாரும் சொல்ல முடியாது. ஒவ்வொரு நிறுவனத்திலும் சிசிடிவி இருக்கிறது. அதிகாரிகள் யாரும் துஷ்பிரயோகம் செய்தால், அந்த ஆதாரத்தைக் காட்டி, அரசிடம் முறையிட்டு அவர்களுக்கு தண்டனை வாங்கித் தரலாம். சட்டத்தின் முன் அனைவரும் சமம்'' என்கிறார் அவர்.

அரசின் இந்த நல்ல முன்னெடுப்புக்கு அனைவரும் ஒத்துழைப்பு தருவதுதான் சக மனிதருக்கு நாம் செய்கிற நீதி!