ஏழை-பணக்காரர், அதிகாரம்மிக்கவர்- அதிகாரமில்லாதவர் என எந்தப் பாகுபாடும் பார்க்காமல் தாக்குகிறது கொரோனா. இந்த நிலையில் இந்தியப் பிரதமர் மற்றும் தமிழக முதல்வரின் பாதுகாப்பு நடைமுறைகள் எப்படி இருக்கின்றன?
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் பிரதமருக்கு மட்டுமே அதிநவீன எஸ்.பி.ஜி (SPG-Special Protection Group) பாதுகாப்பு அளிக்கப்பட்டுவருகிறது. பிரதமரின் இந்த பாதுகாப்பு வளையத்தில் புதிதாக இணைந்துள்ளது, மருத்துவப் பாதுகாப்புப் படை. பொதுவாகவே பிரதமரின் அன்றாட பணியாளர்களில் மருத்துவக் குழுவும் அடங்கும். கொரோனா தொற்றுக்குப் பிறகு பிரதமரின் மருத்துவப் பாதுகாப்பு இன்னும் அதிகரிக்கப்பட்டுள்ளதாகச் சொல்கின்றனர் பிரதமர் அலுவலகத்துக்கு நெருக்கமானவர்கள்.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSகடந்த 80 நாள்களுக்கும் மேலாக ‘லோக் கல்யாண் மார்க்’ என்று அழைக்கப்படும் இந்தியப் பிரதமரின் அதிகாரபூர்வ இல்லத்திலேயே இருந்துவருகிறார் மோடி. அங்குள்ள முகாம் அலுவலகமே இப்போது பிரதமரின் அதிகாரபூர்வ அலுவலகமாகச் செயல்படுகிறது. அமைச்சரவை கூட்டம் முதல் அனைத்துக் கட்சிகளின் வீடியோ கான்ஃபரன்ஸ் வரை அனைத்தும் இந்த இல்லத்திலுள்ள பிரதேயக அறையில்தான் நடக்கிறதாம். அமைச்சர்களுடனான தனிப்பட்ட சந்திப்புகளைக்கூடத் தவிர்த்துவிட்டார் மோடி.
16 பேர் கொண்ட மருத்துவக்குழு 24 நான்கு மணி நேரமும் பிரதமர் இல்லத்தில் பணியாற்றி வருகிறது. ஆரம்பத்தில் பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகள் தினமும் மாறிக்கொண்டே இருந்தார்கள். இப்போது, ஒருவர் வந்தால் நான்கு முதல் ஐந்து நாள்கள் வரை தொடர்ந்து பிரதமர் வீட்டிலிருந்து பணிபுரிய வேண்டும். பின்னர், ஒரு வாரம் விடுமுறை அளிக்கப்படுகிறதாம்.
பிரதமரின் அலுவல் செயலாளர்களிடமும் இன்டர்காம் மூலமே பேசுகிறார் பிரதமர். தேவைப்பட்டால் மட்டும் தகுந்த பாதுகாப்பு முறைகளைப் பின்பற்றி பிரதமர் அறைக்குச் சென்று, இரண்டு மீட்டர் இடைவெளியில் நின்று பேசச் சொல்கின்றனர். அதேபோல் எந்தக் கோப்புகளும் பிரதமருடைய மேசையில் வைக்கப்படுவதில்லை. அனைத்துக் கோப்புகளையும் இணையம் வழியாகவே அனுப்பி பிரதமரிடம் ஒப்புதல் பெறுகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
தனது ஐபேட் மூலமே துறைரீதியான செயல்பாடுகளைக் கண்காணித்துவருகிறாராம் பிரதமர். வழக்கமான உடல் பரிசோதனைகள் பிரதமருக்கு தினமும் செய்யப்படுகின்றன. அமைச்சரவைக் கூட்டத்துக்கு அமைச்சர்கள் வந்தாலும், அவர்களுக்கும் உடல் பரிசோதனை செய்யப்பட்டு, மாஸ்க் உள்ளிட்ட பாதுகாப்பு கவசங்கள் அணிந்துதான் அவர்கள் பிரதமரின் ஆலோசனை அறைக்குச் செல்ல முடியும். அவர்களைச் சமூக இடைவெளியுடன் அமர வைத்துவிட்டு, இறுதியாகப் பிரதமரை அறைக்கு அழைத்துவருகின்றனர்.
பிரதமரின் பயன்பாட்டுக்காகச் சிறப்பு இணையப் பக்கம் ஒன்றையும் பிரதமர் அலுவலகம் தற்போது பயன்படுத்தி வருகிறது. பிரதமர் பயன்படுத்தும் தொலைபேசி, ஐபேட், கணினி உள்ளிட்டவற்றை யாரும் தொடாத அளவுக்குப் பாதுகாத்துவருகின்றனர். தற்போது பிரதமருக்கு வயது 69. அறுபது வயதைக் கடந்தவர்களுக்கு கொரோனா தொற்று எளிதாகப் பரவிவிடும் என்பதால், பிரதமரின் பாதுகாப்பு வளையம் வலுவாக்கப்பட்டுள்ளது.
‘‘நாமே வீட்டில் முடங்கிவிட்டால், எதிர்க்கட்சிகளுக்குத் தீனியாகிவிடும்!’’
‘‘தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கொரோனா வராது… வந்தாலும் உடனே சரியாகிவிடும்’’ என்று திருவாய் மலர்ந்திருக்கிறார் அமைச்சர் செல்லூர் ராஜூ. அதற்காக முதல்வருக்குப் பாதுகாப்பு கொடுக்காமல் இருந்துவிட முடியுமா?
முதல்வருக்குத் தொற்று வந்துவிடக் கூடாது என்று முதல்வரின் பாதுகாப்பு அதிகாரிகள் பாதுகாப்பைத் தீவிரப்படுத்தியுள்ளனர். முதல்வரின் வீட்டுக்குப் பாதுகாப்புக்கு வரும் காவலர்களைக் கடும் பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்கின்றனர். ஒரு முதுகலை மருத்துவர், இரண்டு இளநிலை மருத்துவர்கள்கொண்ட மருத்துவக்குழு முதல்வர் இல்லத்தில் 24 மணி நேரமும் பணியில் இருக்கிறது. தனிப்பட்ட சந்திப்புகளை முடிந்தவரை தவிர்க்குமாறு முதல்வரிடம் கூறியுள்ளனர். மாஸ்க் அணிந்து, கைகளை நன்றாக சானிடைஸ் செய்துகொண்ட பிறகுதான் முதல்வர் இல்லத்துக்குள் நுழைய முடியும்.

முதல்வரின் செயலாளர் ஒருவரின் ஓட்டுநருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஆகையால். ‘மிகவும் அத்தியாவசியத் தேவையிருந்தால் மட்டுமே முதல்வரை நேரடியாகச் சந்தித்துப் பேசுங்கள்’ என்று முதல்வரின் செயலாளர்கள் மற்றும் உதவியாளர்களுக்குக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல... முதல்வரின் பாதுகாப்பு அதிகாரிகள், ஓட்டுநர்கள் ஆகியோர் தினமும் அவர்களின் வீட்டுக்குச் சென்றுவர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஒரு வாரம் பணியாற்றிவிட்டு, உடல் பரிசோதனை செய்துகொண்டு வெளியே செல்லாம்; மீண்டும் ஒரு வாரம் கழித்து பரிசோதனை செய்துகொண்டு உள்ளே வர வேண்டும் என்று அறிவுறுத்தப் பட்டிருக்கிறது.
முதல்வர் வீட்டுக்குள் தினமும் கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது. கொரோனா பரவிய நேரத்திலும் அடிக்கடி தலைமைச் செயலகம் வந்து சென்றார் முதல்வர். `இப்போது தலைமைச் செயலகத்தில் கொரோனா தாக்கம் அதிகரித்திருப்பதால், தலைமைச் செயலகத்துக்கு வர வேண்டாம்’ என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியிருக்கின்றனர். ஆனால் முதல்வரோ, ‘‘நாமே வீட்டில் முடங்கிவிட்டால், மக்களின் அச்சம் அதிகரித்துவிடும். எதிர்க்கட்சிகளுக்குத் தீனியாகிவிடும்’’ என்று துணிந்து வெளியே செல்கிறார்.