சொத்து வரி, தண்ணீர் வரி, வீட்டு வரி கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இந்தச் சமூகத்தில் உயிர் வாழ்வதற்கும், துணி உடுத்துவதற்கும்கூட வரி இருந்திருக்கிறது.
அதைப்பற்றிக் கேள்விபட்டிருக்கிறோமா? மனித சமுதாயம் நாகரிகம் அடைந்துள்ளது என்பதற்கு ஆதார சாட்சியம் `ஆடை.' ஆனால் அந்த ஆடை அணிவதில்கூட ஒரு தரப்பினருக்கு அநீதி இழைக்கப்பட்டது என்கிறது வரலாறு. 18-ம் நூற்றாண்டின் இறுதியில் கேரளாவின் திருவனந்தபுரம் மற்றும் தமிழகத்தின் குமரிப் பகுதியை உள்ளடக்கிய திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் ஈழவர், சாணார், புலையர், பறையர் ஆகிய 18 சமூகத்து மக்களின் மீது கடுமையான சாதியக் கொடுமைகள் நடந்திருக்கின்றன.
முழங்காலுக்குக் கீழே ஆடைகள் அணியக்கூடாது, குடை பிடிக்கக்கூடாது, செருப்பு அணியக்கூடாது, மாடி வீடு கட்டக்கூடாது, தங்க நகைகள் அணியக் கூடாது, பசு மாடுகள் வளர்க்கக்கூடாது என்று ஏராளமான சட்டங்கள் இருந்தன. மேலும் அம்மக்கள் வைத்திருக்கும் நாய்க்கும் மரத்திற்கும் மீசைக்கும், ஏன், உயிர் வாழ்வதற்கும்கூட `தலைவரி' என்று பல்வேறு வரிகள் வசூலிக்கப்பட்டன.

இதன் உச்சக்கட்டமாக பெண்களின் மார்பகங்களை மறைக்க ஆடை உடுத்தினால், அவர்களின் மார்பின் அளவைக் கொண்டு வரி வசூலிக்கும் இழிநிலையும், மீறி வரி செலுத்தாமல் உடையணிந்தால் மார்பகத்தை அறுத்து எறியும் கொடூர தண்டனைகளும் வழங்கப்பட்டன. கற்பனையில்கூட நினைத்துப் பார்க்கமுடியாத இந்தக் கொடுமை 200 ஆண்டுகளுக்கு முன் நடந்திருக்கிறது. அந்தத் துயர வன்முறை பற்றிய தொகுப்பு இதோ:
தாய்வழிச் சமூகமாக இருந்த காலத்தில் பெண்களும், ஆண்களைப்போல மேலாடை இல்லாமலே வாழ்ந்துவந்தனர். மெல்ல மெல்ல நாகரிகத்தின் வளர்ச்சியினால் உடைக் கலாசாரத்தில் பெரிய மாற்றங்கள் உண்டாகின. ஆரம்பக் காலகட்டத்தில் திருவிதாங்கூர் ராணிகள்கூட மாராப்பு அணியாமல் இருந்துள்ளனர். பின்னர் ராணி பார்வதி பாய் அவர்கள் காலத்தில் இந்த நடைமுறை மாறி 'மார் முண்டு' அணியும் பழக்கம் தொடங்கியிருக்கிறது. அப்போது நாயர் சமூகத்துப் பெண்களுக்கும் அந்த உரிமை வழங்கப்பட்டது. அவர்கள் மார்பிற்கு மேல் ரவிக்கை போன்ற ஒரு துணியினை அணிந்து அதற்கு மேல் மெல்லிய ஒரு ஆடையை அணிந்தனர், அதுவே தோள் சீலை ஆகும்.
தோள்சீலையைப் பிற ஒடுக்கப்பட்ட சாதிப்பெண்கள் அணிவது தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்பட்டது. வரி செலுத்தி அணிந்துகொள்ளலாம் என்ற போதும், ஆதிக்க சமூகத்து மக்கள் எதிரில் செல்கையில், அந்த ஆடையைக் கழற்றிவிட வேண்டும் என்கிற உத்தரவிருந்தது. மேலும், அவர்களிடம் பேச வேண்டும் என்றால் 16 அடி தள்ளி நிற்க வேண்டும் என்கிற கொடுமைகள் கடைப்பிடிக்கப்பபட்டன. அந்தக் காலகட்டத்தில்தான் கிறிஸ்தவ மிஷினரிகளின் வருகை அதிகரித்திருந்தது. அவர்கள் தங்கள் மதத்தில் இணைந்தால் இஸ்லாமிய ஆடை போல தொளதொளவென இருக்கும் குப்பாயம் எனக்கூடிய ஆடையை அணியலாம் என்றனர். இதன் எதிரொலியாகப் பல்வேறு ஒடுக்கப்பட்ட மக்கள் கிறிஸ்தவ மதத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். அச்சமூகத்துப் பெண்கள் தங்கள் முன் மார்பை மறைத்து வந்தது ஆதிக்க சமூகத்து மக்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. எனவே 1819-ஆம் ஆண்டில் இராமவர்மா எனும் அரசர் ஒடுக்கப்பட்ட சமூகத்துப் பெண்களும் , சாணார் சமூகப் பெண்களும் மேலாடை அணியக் கூடாது எனும் அறிவிப்பை வெளியிட்டார்.

இந்த அறிவிப்பை எதிர்த்து சாணார் குல மக்கள் போராட்டம் நடத்தினர். பிறகு எதற்காக போராட்டத்தின் தொடக்க ஆண்டாக 1819-ஐ கொள்ளவில்லை என்ற கேள்வி எழுந்தது. இதைப் பற்றி எழுத்தாளர் குமார செல்வா அவர்களிடம் கேட்ட போது "இந்தப் போராட்டம் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. உண்மையாக 1822-ம் ஆண்டுக்குப் பிறகு ஆரம்பித்த போராட்டங்களே மிக எழுச்சிகரமாக நடைபெற்றன. ஆக தோள்சீலைப் போராட்ட வரலாறு 1822-ம் ஆண்டு தொடங்குகிறது" என்றார். மேலும், இந்தப் போராட்டம் மூன்று கட்டங்களாக நடைபெற்றதாகக் கூறினார்.
அதன்படி 1822-ல் கொத்தனாவிளையில் தொடங்கிய போராட்டமே முதல் அடியாகப் பார்க்கப்பட்டது. இதுநாள் வரை கொடுமைகளைப் பொறுத்துக்கொண்டு இருந்த மக்கள் வெகுண்டெழுந்த நிகழ்வுகள் இங்கிருந்துதான் தொடங்கின. கிறித்துவ சாணார் பெண்கள் கோயிலுக்குச் செல்லும்போது அவர்களை வழிமறித்து குப்பாய ஆடையைக் கிழித்துள்ளனர். இதற்கு எதிராக சாணார் இன மக்கள் பதில் தாக்குதல் நடந்தினர். ஆத்திரம் அடைந்த ஆதிக்க சாதியினர் அவர்களின் வீடுகளைக் கொளுத்தினர்.

இவ்வாறு பற்றி எரிந்த கனலை அணைக்க சார்லஸ் மீட் என்பவர் அன்றைய ஆங்கிலேயக் கர்னலுக்கு மனு ஒன்றினை எழுதினார். அதன் விளைவாக பத்மநாபபுரம் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் முடிவில் கிறிஸ்தவ சாணார் பெண்களுக்கு ஆதரவாகத் தீர்ப்பு வந்தது. இந்தக் கலவரம் முடிந்த பின்னர் ஒரு ஆலமரம் முழுவதும் சாணார் பெண்களின் கிழிக்கப்பட்ட ஆடைகள் தொங்கவிடப்பட்டதாக `Land of Charity' எனும் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
அடுத்தகட்டப் போராட்டம் மார்த்தாண்டம் அருகிலுள்ள கண்ணனூர் என்னும் சிற்றூரில் 1828-ல் தொடங்கியது. அக்காலகட்டத்தில் `ஊழியம்' என்னும் பெயரில் இலவசமாகக் கோயில்களுக்கும், ஆதிக்கச்சாதி நபர்களின் வயல்களுக்கும் ஒடுக்கப்பட்ட மக்கள் வேலை செய்யும் முறை இருந்தது. கிறிஸ்துவ மதத்திற்கு மாறிய பிறகு ஞாயிற்றுக்கிழமைகளில் ஊழியம் செய்யத் தேவையில்லை என்னும் நிலை உருவானது. இது ஒருபுறம் ஆதிக்க சாதியினருக்கு எரிச்சலைத் தர மறுபுறம் நாயர் சமூகத்துப் பெண்கள் போலக் குப்பாய ஆடைக்கு மேலே தோள் சீலை அணிந்தது மேலும் கோபத்தைத் தூண்டியது. இதனால் வருவாய் அதிகாரி ஈஸ்வர பிள்ளை ஒரு குழுவோடு சேர்ந்து சாணார் மக்களின் குடிசைகளைத் தீக்கிரையாக்கினார்.

இதற்கு ஒடுக்கப்பட்ட மக்கள் பதிலடி தர, பெருங்கோபம் கொண்டு கிறிஸ்தவ தேவாலயம் தீக்கிரையாக்கப்பட்டது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உதவிய சார்லஸ் மீட் உயிரைப் பறிக்க விலை வைக்கப்பட்டது. அவர் உதயகிரி கோடையின் அருகே கேப்டன் ஷிவால்டு உதவியோடு தலைமறைவாகினார். நிலைமை நாளுக்கு நாள் மோசமடைய சார்லஸ் மீட் அவரின் நண்பர் மாட்டின் உதவியோடு கர்னல் மொரிசன் என்பவருக்குக் கடிதம் எழுதினார். கர்னல் நிலைமையை விசாரிக்க வெங்கடராவ் என்பவரை நியமித்தார். அது பேரிடியாக ஒடுக்கப்பட்ட மக்களின் தலையில் விழுந்தது. தற்காலிக நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த அந்த வழக்கில் சாணார் பெண்கள் நிர்வாணமாக விசாரிக்கப்பட்டதாக “Native Lives of Travancore“ எனும் புத்தகம் குறிப்பிடுகிறது. விசாரணையின் முடிவில் அதிர்ச்சி அளிக்கும் வகையில் ஊழியம் செய்யாமல் தோல் சீலை அணிந்ததுதான் பிரச்னைக்குக் காரணம் என்று தீர்ப்பு வந்தது. அதனைத் தொடர்ந்து பார்வதி மகாராணி சாணர்குல பெண்கள் மேலாடை இனி அணியக்கூடாது என்று ஆணையிட்டார்.
இது கிறித்தவ மிஷனரிகள் திரித்த வரலாறு. உண்மையாக தோள்சீலைப் போராட்டம் நடைபெறவில்லை என ஒருவாதம் வைக்கப்படுகிறது. ஆனால் போராட்டக் காலம் என்று குறிப்பிடப்பட்ட சமகாலத்தில் வாழ்ந்த, சாணார் இனமக்களுக்காகப் போராடிய முத்துக்குட்டி என்னும் வைகுண்டர் எழுதிய `அகிலத் திரட்டு' என்னும் நூலில், “பூக்கள் நீதமுடன் போட தோள்சீலை போடாதே என்றடித்தானே சிவனே ஐயா“ என்று தோள்சீலைக் கொடுமையையும், “தாலிக்கு ஆயம்; சருகு முதல் ஆயம்; கம்புத் தடிக்கு ஆயம்; தாளமேறும் சான்றோருக்கு ஆயம்; அரிவாள் தூர்வெட்டிக்கு ஆயம்; வட்டிக்கு ஆயம்; வலங்கை சென்றோர் கருப்புக் கட்டிக்கும் ஆயம் வைத்தானே கருநீசன்” என்று எதற்கெல்லாம் வரி வசூலிக்கப்பட்டது என்பதையும் தெரிவித்துள்ளார்.

இரண்டாம் கட்டப் போராட்டத்தில் ஐயா வைகுண்டர் அவர்களின் பங்கு குறிப்பிடத்தக்கதாக இருந்திருக்கிறது. `குமரியின் தந்தை' என்று சொல்லப்படும் மார்ஷல் நேசமணி என்பவரும் வைகுண்டரின் கருத்துகளையே தெரிவிக்கிறார். இப்போராட்ட வரலாற்றினைப் பற்றிப் பேசும்போது அனைவருக்கும் தோன்றும் ஒரு சோகக்கதை உண்டு. அது சாத்தலை எனும் பகுதியில் ஈழவ சமூகத்துப் பெண்ணான நங்கேலி, முலைவரி கொடுக்க மறுத்து தன் முலைகளை அறுத்து வாழையிலையில் வைத்து ரத்த வெள்ளத்தில் மரித்ததாகும். இச்சம்பவத்தில் நங்கேலியின் உடல் எரிக்கப்படும்போது அவள் கணவன் சிறுகண்டன் சிதையில் விழுந்து உயிர் துறந்தான் எனப்படுகிறது. இது தொன்மக் கதை இதற்குச் சான்று இல்லை என்று கூறப்பட்டாலும், இச்சம்பவம் நடந்தது என்று சொல்லக்கூடிய இடத்திற்கு மொலைச்சிபரம்பு என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. அங்குள்ள மக்கள் நங்கேலிக்குச் சிலை வைக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இரண்டாம் கட்டப் போராட்டத்திற்குப் பிறகு, 25 ஆண்டுகள் மிகத் தீவிரமாக தடை உத்தரவு பின்பற்றப்பட்டது. அதன் பின்னர் 1857 -ல் உண்டான சிப்பாய் கலகத்தின் முடிவில், விக்டோரியா பேரரசி “இந்திய மத உணர்வுகளில் இனி ஆங்கிலேய அரசு தலையிடாது” என்று அளித்த உறுதிமொழியின் மூலம் மேலும் மிகத் தீவிரமடைந்தது. இதனால் ஆதிக்க சமூகத்தினர் மேலும் ஊக்கம் பெற்றனர். மாடத்தி என்னும் கர்ப்பிணிப் பெண்ணை ஏர் உழும் மாட்டிற்கு பதிலாகப் பயன்படுத்திக் கொடுமை செய்தனர். மேலும், மாட்டு வண்டியில் கொண்டு செல்லும் தென்னை ஓலைகளைப் பெண்களின் தலையில் கட்டி நடக்க வைத்தனர்; 'அரசாங்க ஊழியம்' என்ற முறையில் ஈவிரக்கமின்றி வேலை வாங்கினர்.

இச்சூழ்நிலையில்தான் மூன்றாம் கட்டப் போராட்டம் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கொட்டாரத்தில் 1859-ல் தொடங்கியது. இதில் முதல் முறையாக கிறிஸ்தவ நாடார்களும், இந்து நாடார்களும் ஒன்றுசேர்ந்தனர். அங்கே பெரிய அளவில் கலவரம் மூண்டது, அதன் நடுவே ஒரு பெண் தாலியுடன் மணக்கோலத்தில் மாட்டிக்கொள்ள அவளது தாலி அறுக்கப்பட்டுக் கொல்லப்பட்டார். அப்பெண்ணின் நினைவாக ’தாலி அறுத்தான் சந்தை’ என்று அந்த இடத்திற்குப் பெயர் சூட்டப்பட்டது. இறுதிக்கட்டமாக இரணியல் சந்தை பகுதியில் கொடூரமாகத் தாக்குதல் நடைபெற, நிலைமை கைமீறிப் போய்க் கொண்டிருக்கிறது என்பதை அறிந்த மிஷனரி ஜான் காக்ஸ், திருவிதாங்கூரில் இருந்த ஆங்கிலேய ரெசிடெண்டுக்கும், மெட்ராஸ் கவர்னருக்கும் விஷயத்தைக் கொண்டு சேர்த்தார்.
விசாரணையின் முடிவில் 1859-ம் ஆண்டு ஜூலை மாதம் கிறிஸ்தவ, இந்து சாணார் இனப் பெண்கள் தோள்சீலை அணியலாம் என்று தீர்ப்பு வந்தது ஆனாலும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அந்த உரிமை வழங்கப்படவில்லை. இதையடுத்து மால்ட்பி என்னும் நபரின் முயற்சியால் 1865 ஜூலை 1-ம் தேதி அவர்களுக்கான உரிமையையும் பெற்றனர். கிட்டத்தட்ட மூன்று கட்டமாக சுமார் 40 ஆண்டுக்காலப் போராட்டத்திற்குப் பிறகு தோள்சீலை உரிமை அனைவருக்கும் என்றானது.

கடந்த 2019-ம் ஆண்டு மத்திய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கழகம் (NCERT) பாடத்திட்டத்திலிருந்து இந்தப் போராட்ட வரலாற்றை நீக்கியது. இதுகுறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனத்தைத் தெரிவித்திருந்தார். இப்போராட்ட வரலாறே கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்நாட்டோடு இணைக்கப்படுவதற்கான போராட்டத்தின் முன்னோடி.
இருநூறு ஆண்டுகளைக் கடந்த இந்த வரலாறு, பூர்வ வரலாற்றில் ஆதிக்கத்திடம் இருந்து சமத்துவம் மீண்டதற்கான தொடக்கமும் சாட்சியமும் ஆகும்.