Published:Updated:

பரந்தூர் விமான நிலையம்: வலுக்கும் மக்கள் போராட்டம் - கைகொடுக்குமா திமுக அரசின் சமாதான முயற்சி?

பரந்தூர் விமான நிலையம்: அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை

பரந்தூர் சுற்றுவட்டாரப் பகுதியில் அமையவிருக்கும் புதிய விமான நிலையத்தால் 13 கிராமங்களின் விவசாய நிலங்கள், குடியிருப்புப் பகுதிகள் முற்றிலுமாக அழிக்கப்படும் எனக் கூறி, அந்த கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர்.

பரந்தூர் விமான நிலையம்: வலுக்கும் மக்கள் போராட்டம் - கைகொடுக்குமா திமுக அரசின் சமாதான முயற்சி?

பரந்தூர் சுற்றுவட்டாரப் பகுதியில் அமையவிருக்கும் புதிய விமான நிலையத்தால் 13 கிராமங்களின் விவசாய நிலங்கள், குடியிருப்புப் பகுதிகள் முற்றிலுமாக அழிக்கப்படும் எனக் கூறி, அந்த கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர்.

Published:Updated:
பரந்தூர் விமான நிலையம்: அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை

பரந்தூர் பசுமை விமான நிலையத்துக்கு எதிரான மக்கள் போராட்டம் தீவிரமடைந்துவரும் நிலையில், சர்வதேச ஒப்பந்தப்புள்ளியை தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் கோரியது. இதனால் அதிருப்தியடைந்த கிராம மக்கள், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மனு கொடுப்பதற்காக கறுப்புக்கொடியுடன் பேரணியாகச் சென்றனர். அவர்களைத் தடுத்து நிறுத்திய மாவட்ட நிர்வாகம், காவல்துறையினர் சமாதானம் சொல்லி அனுப்பிவைத்தனர். இந்த நிலையில், நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் மூன்று அமைச்சர்கள் சேர்ந்து, அதிகாரிகள் மற்றும் போராட்டக்குழுவினரிடம் விரிவான ஆலோசனை மேற்கொண்டிருக்கின்றனர்.

பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு
பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு
ட்விட்டர்

மக்கள் போராட்டங்களும், அரசின் சமாதான முயற்சிகளும்:

காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூர் சுற்றுவட்டாரப் பகுதியில் அமையவிருக்கும் புதிய விமான நிலையத்தால் 13 கிராமங்களின் விவசாய நிலங்கள், குடியிருப்புப் பகுதிகள் முற்றிலுமாக அழிக்கப்படும் எனக் கூறி, அந்த கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர்.

போராட்டம் 80 நாள்களைக் கடந்து நடைபெற்றுவந்த நிலையில், ஆளும் தி.மு.க அரசு, ``தமிழகப் பொருளாதாரத்தை ஒரு ட்ரில்லியன் டாலராக 2030-ம் ஆண்டுக்குள் உயர்த்த வேண்டுமானால், பரந்தூரில் விமான நிலையம் அமைப்பது காலத்தின் கட்டாயம்" என அறிக்கை வெளியிட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த போராட்டக் கள பொதுமக்கள், விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, அக்டோபர் 17-ம் தேதி சென்னையில் தமிழ்நாடு சட்டமன்றத்தை நோக்கிப் பேரணி நடத்தப்போவதாக அதிரடியாக அறிவித்தனர்.

பரந்தூர் விமான நிலையம்
பரந்தூர் விமான நிலையம்

இதைச் சற்றும் எதிர்பாராத தமிழக அரசு, போராட்டக்குழுவினருடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டது. அதனடிப்படையில் கடந்த அக்டோபர் 15-ம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, தா.மோ.அன்பரசன் ஆகியோர் போராட்டக்குழுவினரை சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து, அரசின் பேச்சுவார்த்தையில் நம்பிக்கை இருப்பதாகக் கூறி, சென்னையில் தமிழ்நாடு சட்டமன்றத்தை நோக்கிச் செல்லும் மக்கள் எதிர்ப்பு பேரணியை மட்டும் தற்காலிகமாகக் கைவிடுவதாக அறிவித்தனர். வழக்கமாக நாள்தோறும் ஏகனாபுரம் கிராமத்தில் நடக்கும் போராட்டத்தை மட்டும் தொடர்ந்துவந்தனர்.

பரந்தூர்
பரந்தூர்

இந்த நிலையில், கிராம மக்களின் விமான நிலைய எதிர்ப்பு போராட்டம் நான்கு மாதங்களைக் கடந்தும் தொடர்ந்து நடைபெற்றுவந்த நிலையில், புதிய அறிவிப்பை சமீபத்தில் தமிழ்நாடு அரசு அறிவித்தது. அதாவது, பரந்தூர் விமான நிலைய மேம்பாட்டுக்கான சர்வதேச டெண்டரை தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் கோரியது. இது போராட்டக் கள மக்களிடம் மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், டிசம்பர் 19-ம் தேதி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி கறுப்புக்கொடி பேரணியை அறிவித்தனர். இந்தப் பேரணியை தடுப்பதற்காக ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த காவல்துறையினர் குவிக்கப்பட்டதால் பெரும் பதற்றம் நிலவியது. தொடர்ந்து திட்டமிட்டபடி பேரணியை நேற்று முன்தினம் நடத்தினர். அப்போது, காஞ்சிபுரம் எஸ்.பி., கோட்டாட்சியர், தாசில்தார் ஆகியோர் பேரணியாக வந்த மக்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அதிகாரிகள் உறுதியளித்ததையடுத்து பேரணியைத் தற்காலிகமாக போராட்டக் கள மக்கள் வாபஸ் பெற்றனர்.

பரந்தூர்
பரந்தூர்

இந்த நிலையில், நேற்று டிசம்பர் 20-ம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் வைத்து பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் போராட்டக்குழுவினர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டனர்.

பரந்தூர் விமான நிலையம்
பரந்தூர் விமான நிலையம்

ஆலோசனைக்குப் பிறகு பேசிய போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணி, ``போராட்டத்தின் தொடக்கத்தில் எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, தா.மோ.அன்பரசன் உள்ளிட்டோர், `விரைவில் மக்களுக்குச் சாதமான பதிலை முதல்வர் அறிவிப்பார்' என உறுதி கூறினார்கள். நாங்களும் மூன்று மாதங்களாகக் காத்திருந்தோம். ஆனால், எந்தவிதமான அறிவிப்பையும் அரசாங்கம் வெளியிடவில்லை. இந்த நிலையில், தமிழ்நாடு அரசின் தொழில் வளர்ச்சிக் கழகமானது (TIDCO) பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கான சர்வதேச டெண்டரை அறிவித்தது. அதனால் நாங்கள் மீண்டும் மீண்டும் எங்கள் கோரிக்கையை அரசுக்கு அழுத்தமாக எடுத்துச்செல்ல நேற்று 13 கிராமங்களைச் சேர்ந்த மக்களும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கிப் பேரணியைத் தொடங்கினோம்.

அப்போது, எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய அரசு அதிகாரிகள், `ஏற்கெனவே நீங்கள் அரசிடம் வைத்த கோரிக்கைகள் தற்போது என்ன நிலையில் இருக்கின்றன என்பதை அரசிடமே, அமைச்சர்களிடமே கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்' எனப் பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர். அதனடிப்படையில், அன்று பேசிய அதே மூன்று அமைச்சர்களிடமும் இன்று பேச்சுவார்த்தை நடத்தினோம். விமான நிலையம் வந்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை மீண்டும் அவர்களிடம் தெரியப்படுத்தினோம்" என்றார்.

ஜி.சுப்ரமணி
ஜி.சுப்ரமணி
Jerome K

மேலும், அதற்கு அமைச்சர்கள், ``நீங்கள் வைத்த கோரிக்கைகளின் அடிப்படையில்தான் (Pre feasibility Test) திட்ட சாத்தியக்கூறுகள் பற்றி ஆராய்வதற்கான உலக அளவிலான டெண்டர் விட்டிருக்கிறோம். இந்த டெண்டரின் நோக்கமே எந்த இடத்தில் வேளாண் நிலங்கள் இருக்கின்றன, குடியிருப்புப் பகுதிகள் இருக்கின்றன, விமான நிலையம் வருவதால் ஏற்படும் பொருளாதார இழப்புகள் என்னென்ன, மீள்குடியமர்வு எப்படி என்பது குறித்தெல்லாம் அந்த டெண்டர் எடுக்கும் நிறுவனம் ஆராய்ந்து கொடுக்கும். அந்த நிறுவனத்தின் ஆலோசனையின்படியே விமான நிலையம் அமைக்க உகந்த இடமா என்பது குறித்த தெளிவான முடிவு எடுக்கப்படும். அதுவரை நீங்கள் பயப்படாமல் காத்திருங்கள். கள ஆய்வுக்காக சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் அதிகாரிகள் உங்கள் கிராமத்துக்கு வரும்போது, எங்களிடம் நீங்கள் தந்த அத்தனை தரவுகளையும் அவர்களிடம் தாருங்கள். மேலும், நீரியல் தொடர்பான ஆய்வுக்கு IIT பேராசிரியர்கள் குழுவும் அமைக்கப்பட்டிருக்கிறது. அவர்களிடமும் உங்கள் கருத்துகளைத் தெரிவியுங்கள். நாங்கள் ஆலோசிக்கப்படவேண்டியவை இன்னும் நிறைய இருக்கின்றன. எனவே, நிச்சயம் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாதபடியான முடிவையே எடுப்போம்' என அமைச்சர்கள் உறுதியளித்ததாகவும் கூறினார்.

பரந்தூர்
பரந்தூர்

இந்த நிலையில், ``தமிழ்நாடு அரசு உறுதியான முடிவை அறிவிக்கும் வரை, அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக நாங்கள் மாலை நேரத்தில் நடத்தும் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்துவோம்" என போராட்டக்குழுவினர் அறிவித்திருக்கின்றனர்.

இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் சமாதான முயற்சியிலேயே சமாளிக்கப்போகிறது தி.மு.க அரசு?