Published:Updated:

`பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா மிகவும் ஆபத்தான இயக்கம்’ - ஆளுநரின் குற்றச்சாட்டும் எதிர்வினைகளும்!

ஆர்.என்.ரவி

`பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா, மிகவும் ஆபத்தான இயக்கம்’ என்று ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியிருக்கும் கருத்துக்கு பலரும் கடுமையாக எதிர்வினை ஆற்றியுள்ளனர். சென்னையில் போராட்டமும் நடைபெற்றுள்ளது.

`பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா மிகவும் ஆபத்தான இயக்கம்’ - ஆளுநரின் குற்றச்சாட்டும் எதிர்வினைகளும்!

`பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா, மிகவும் ஆபத்தான இயக்கம்’ என்று ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியிருக்கும் கருத்துக்கு பலரும் கடுமையாக எதிர்வினை ஆற்றியுள்ளனர். சென்னையில் போராட்டமும் நடைபெற்றுள்ளது.

Published:Updated:
ஆர்.என்.ரவி

தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்பதற்கு முன்னதாகவே, அவர் தொடர்பாக சர்ச்சையான பல தகவல்கள் தமிழகத்தில் விவாதிக்கப்பட்டன. நாகாலாந்து மாநில ஆளுநராக இருந்தபோது தனது செயல்பாடுகள் மூலம் கடும் எதிர்ப்புகளை ஆர்.என்.ரவி அங்கு சந்தித்தார். தமிழக ஆளுநராக அவர் மாற்றப்பட்டபோது, நாகாலாந்தில் இனிப்பு வழங்கியும் பட்டாசு வெடித்தும் கொண்டாடினார்கள். தற்போது, ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசுக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையே கடுமையான மோதல் போக்கு நிலவிவருகிறது. அதையொட்டி, ஆர்.என்.ரவி மீது கடும் விமர்சனங்களை பல்வேறு அரசியல் கட்சிகளும் இயக்கங்களும் முன்வைத்துவருகின்றன.

பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா
பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா

இந்த நிலையில், ‘பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா, மிகவும் ஆபத்தான இயக்கம்’ என்று ஆளுநர் பேசியிருக்கும் கருத்து பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. சென்னையில் ஒரு கல்லூரியில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் கடந்த வாரம் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, “பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா, மிகவும் ஆபத்தான இயக்கம். மனித உரிமைகள், மறுவாழ்வு, மாணவர் சங்கம் எனப் பல முகமூடிகளை அணிந்துகொண்டு அது செயல்பட்டுவருகிறது. இந்தியாவை சிதைப்பதுதான் அவர்களின் நோக்கம். ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா ஆகிய நாடுகளில் சண்டையிடுவதற்கு இந்த அமைப்பு ஆட்களை அனுப்பிவைத்திருக்கிறது. இது மிகவும் அச்சுறுத்தலான ஒரு பிரச்னை. இது குறித்து மிக மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்று ஆர்.என்.ரவி பேசினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஆளுநரின் இந்த கருத்துக்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், ஆளுநருக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலும், ஆளுநரைத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியும் சென்னையில் பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பைச் சேர்ந்தவர்கள் கடந்த 7-ம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில் ஏராளமான பெண்களும் பங்கேற்றனர். ஆளுநர் மாளிகையிலிருந்து சற்று தொலைவில் சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே நடைபெற்ற அந்தப் போராட்டத்தின்போது, தான் பேசிய கருத்துகளுக்காக ஆளுநர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா
பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா

பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பு குறித்து இரு வேறு கருத்துகள் சொல்லப்படுகின்றன. தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று தீவிரமாக இருந்த காலத்தில் குறிப்பிடத்தக்க சேவையை அந்த அமைப்பு ஆற்றியிருக்கிறது. கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களின் பக்கத்தில் செல்வதற்கு உறவினர்களே அச்சப்பட்டபோது, அந்த உடல்களை சாதி, மத வேறுபாடின்றி பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பைச் சேர்ந்தவர்கள் தூக்கிச்சென்று அடக்கம் செய்தனர். இதுபோல பல சமூகப் பணிகளை இந்த அமைப்பு மேற்கொண்டுவருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதே நேரத்தில், பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா குறித்து ஏராளமான சர்ச்சைகளும் உண்டு. தடைசெய்யப்பட்ட ‘சிமி’ எனப்படும் இஸ்லாமிய மாணவர் இயக்கத்துடன் இந்த அமைப்புக்கு தொடர்பு இருப்பதாகக் குற்றம்சாட்டப்படுகிறது. ‘இந்தியாவில் பாசிசம் முறியடிக்கப்பட வேண்டும்’ என்பதை அடிப்படைக் கொள்கையாகக் கொண்டுள்ள பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பினருக்கும் சங் பரிவார் அமைப்புகளைச் சேர்ந்தவர்களுக்கும் கேரளாவிலும், கர்நாடகாவிலும் அடிக்கடி மோதல்கள் நடப்பதுண்டு.

ஆர்.என்.ரவி
ஆர்.என்.ரவி

கேரளாவில் இடதுசாரி இயக்கங்களுக்கும் இந்த அமைப்புக்கும் இடையே மோதல்களும் கொலைகளும் நிகழ்ந்துள்ளன. எர்ணாகுளம் மகாராஜா கல்லூரியில் பிஎஸ்.சி இரண்டாம் ஆண்டு மாணவரும், இந்திய மாணவர் சங்கத்தின் நிர்வாகியுமான அபிமன்யு 2018-ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். அந்த சம்பவம் கேரளா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா, கேம்பஸ் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா, எஸ்.டி.பி.ஐ ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த 16 பேர் கொண்ட கும்பல், அபிமன்யுவை படுகொலை செய்தது என்று 15,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது

ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க-வின் அரசியலையும் அவற்றின் செயல்பாடுகளையும் பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா கடுமையாக எதிர்த்துவருகிறது. இந்த நிலையில்தான், பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியாவை தடை செய்ய வேண்டும் என்று குரல் வலதுசாரி அமைப்புகளிடமிருந்து தொடர்ந்து ஒலித்துவருகிறது. மத்தியில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததிலிருந்து அத்தகைய கோரிக்கை எழுப்பப்பட்டுவந்தபோதிலும், இந்த அமைப்பு தடைசெய்யப்படவில்லை. ‘எங்கள் அமைப்பைத் தடைசெய்யப்போவதாக கடந்த எட்டு ஆண்டுகளாக கூறிவருகிறார்கள். ஆனால், அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராகவோ, தேசத்துக்கு எதிராகவோ, ஜனநாயகத்துக்கு எதிராகவோ நாங்கள் செயல்பட்டதாக அவர்களால் நிரூபிக்க முடியவில்லை. எங்களுக்கு எதிராக வெறும் அவதூறுகளைப் பரப்பிவருகிறார்கள்’ என்று பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் கூறுகிறார்கள்.

ஆர்.என்.ரவி
ஆர்.என்.ரவி

இந்த அமைப்புக்கு எதிரான ஒரு கருத்தை இரு வாரங்களுக்கு முன்பு பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியிருந்த நிலையில், தற்போது ஆளுநர் ஆர்.என்.ரவியும் அப்படியான ஒரு கருத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். ஒரு பொது மேடையில் ஆளுநர் ரவி ஓர் அமைப்புக்கு எதிராக இப்படியொரு குற்றச்சாட்டை சுமத்தியது குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பப்படுகின்றன. மத்திய உளவுத்துறையில் பணியாற்றிய ஐ.பி.எஸ் அதிகாரி என்பதால், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு சில தகவல்கள் கிடைத்திருக்கலாம். ஆனால், அந்த தகவல்களை உரிய முறையில் மத்திய அரசுக்கு அனுப்பாமல், ஒரு பொது மேடையில் எதற்காகப் பேச வேண்டும் என்ற கேள்வி எழுப்பப்படுகிறது.

சாதாரண ஓர் அரசியல்வாதியைப் போல ஆளுநர் பேசலாமா என்ற கேள்வியும் முன்வைக்கப்படுகிறது. ஒருவேளை, ஆளுநர் சொல்லும் குற்றச்சாட்டுகள் உண்மையென்றால், அந்த அமைப்பின் மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்ற கேள்வியையும் பலர் எழுப்புகிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism