இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பா.ஜ.க எம்.பி-யுமான பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது, இந்திய மல்யுத்த வீராங்கனைகளான சாக்ஸி மாலிக், வினேஷ் போகத் உள்ளிட்டவர்கள் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்து, கடந்த ஜனவரி மாதம் போராட்டத்தை முன்னெடுத்தனர். அதைத் தொடர்ந்து, மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம், இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த, குத்துச் சண்டை வீராங்கனை மேரிகோம் தலைமையில் ஆறு பேர்கொண்ட குழுவை அமைத்தது.

இதற்கிடையே, இந்திய ஒலிம்பிக் சங்கம், இந்திய மல்யுத்த கூட்டமைப்பை நிர்வகிக்க முன்னாள் துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை சுமா ஷிரூர், ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஆகியோர் உள்ளடக்கிய குழுவை நியமித்தது. இந்த நிலையில், மேரிகோம் தலைமையிலான விசாரணைக் குழுவும் தனது அறிக்கையை வழங்கியது. ஆனால், இந்தப் பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக பா.ஜ.க எம்.பி பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
அதன் காரணமாக, கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லி ஜந்தர்மந்தர் பகுதியில் மீண்டும் குத்துச்சண்டை வீராங்கனைகள் போராட்டத்தைத் தொடங்கி, கடந்த ஐந்து நாள்களாக நடத்திவருகின்றனர். இந்த நிலையில், இந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் பங்கு பெற்று ஈட்டி எறிதல் போட்டியில் தங்கம் வென்று நாட்டுக்குப் பெருமை சேர்த்த ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா மல்யுத்த வீரர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், "நமது விளையாட்டு வீரர்கள் நீதி கேட்டு தெருக்களில் போராடுவது எனக்கு வேதனையளிக்கிறது. அவர்கள் நமது தேசத்தை பிரதிநிதித்துவப்படுத்தவும், நம்மைப் பெருமைப்படுத்தவும் கடுமையாக உழைத்திருக்கிறார்கள்.

இந்த தேசத்தில் ஒவ்வொரு தனிமனிதனின், விளையாட்டு வீரரின் நேர்மை, கண்ணியத்தைப் பாதுகாப்பதற்கு நாம்தான் பொறுப்பு. தற்போது நடந்துகொண்டிருக்கும் நிகழ்வுகள் இனி ஒருபோதும் நடக்கக் கூடாது. இது ஒரு முக்கியப் பிரச்னை. எனவே பாரபட்சமற்ற, வெளிப்படையான முறையில் இது கையாளப்பட வேண்டும். நீதியை உறுதிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்த நிலையில், டெல்லியில் நேற்று இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்குப் பிறகு இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் பி.டி.உஷா செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, "பிரதமர் மோடியின் அரசு எப்போதும் வீரர்களுடன் துணை நிற்கிறது. போராடும் வீராங்கனைகள் போராடுவதற்கு முன்னர் இந்திய ஒலிம்பிக் சங்கத்திடம் வந்திருக்க வேண்டும்.

அவர்களுக்கு அங்கு நீதி கிடைக்கவில்லையெனில் தெருக்களில் இறங்கிப் போராடியிருக்கலாம். ஆனால், எங்களிடம் எதுவும் கேட்காமல், தெருவில் இறங்கிப் போராடுவது விளையாட்டுத்துறைக்கு நல்லதல்ல. எங்கள் விளையாட்டு வீரர்களுடன், எந்தப் பிரச்னையையும் ஏற்படுத்திக்கொள்ள நாங்கள் விரும்பவில்லை. நாட்டின் விதிமுறைகள், சட்டத்துக்கு உட்பட்டு, ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் எங்கள் விளையாட்டு வீரர்கள் பங்கேற்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.
இந்த வகையான எதிர்மறை விளம்பரம், போராட்டம் நாட்டின் நற்பெயருக்கு நல்லதல்ல. மேலும், இது ஒழுக்கமின்மைக்குச் சமம். இந்த எதிர்மறை விளம்பரம் நாட்டுக்கு நல்லதல்ல. இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்திய எந்தவொரு விளையாட்டு வீரருடனும், நாங்கள் இருக்க விரும்புகிறோம்" எனத் தெரிவித்திருக்கிறார். இதற்கு மல்யுத்த வீராங்கனைகள் எதிர்வினையாற்றியிருக்கின்றனர்.