Published:Updated:

பிடிஆர் ஆடியோ விவகாரம்... புயலா, புஸ்வாணமா?!

பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்

`பிடிஆர் பெயரில் வெளியான ஆடியோ உண்மையல்ல’ என திமுக தரப்பும், ` `Dmk Files' ஊழல் பட்டியலுக்கு ஆதாரமாக ஆடியோ கசிந்திருக்கிறது’ என பா.ஜ.க-வினரும் மல்லுக்கட்டிவருகின்றனர். அரசியல்ரீதியாகத் தாக்கத்தை ஏற்படுத்துமா ஆடியோ சர்ச்சை?

Published:Updated:

பிடிஆர் ஆடியோ விவகாரம்... புயலா, புஸ்வாணமா?!

`பிடிஆர் பெயரில் வெளியான ஆடியோ உண்மையல்ல’ என திமுக தரப்பும், ` `Dmk Files' ஊழல் பட்டியலுக்கு ஆதாரமாக ஆடியோ கசிந்திருக்கிறது’ என பா.ஜ.க-வினரும் மல்லுக்கட்டிவருகின்றனர். அரசியல்ரீதியாகத் தாக்கத்தை ஏற்படுத்துமா ஆடியோ சர்ச்சை?

பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்

தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசியதாக கடந்த சில நாள்களாக சமூக வலைதளங்களில் ஆடியோ ஒன்று பரவிவருகிறது. அந்த ஆடியோவில் முதல்வர் மு.க.ஸ்டாலினின் மகனான அமைச்சர் உதயநிதியும், மருமகனான சபரீசனும் கடந்த இரு ஆண்டுகளில் 30,000 கோடி ரூபாய் சேர்த்துவிட்டனர் என்று கூறுவதுபோல் இடம்பெற்றிருக்கிறது.

12 மணி நேர வேலை சட்டத் திருத்தம், Dmk Files, திருமண மண்டபங்களில் மதுபான விருந்துக்கு அனுமதி விவகாரம், ஜி ஸ்கொயர் தொடர்புடைய இடங்களில் வருமான வரி சோதனை, நில ஒருங்கிணைப்புச் சட்ட மசோதா உள்ளிட்டவற்றிற்குக் கடும் எதிர்ப்பு கிளம்பி, தி.மு.க-வினர் எதற்கு பதில் சொல்வது என்றே தெரியாமல் குழம்பி நிற்கின்றனர். இதில் முதல்வர் குடும்பத்தோடு நேரடியாக சம்பந்தப்பட்டிருப்பதால், பிடிஆர் ஆடியோ விவகாரம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.

எதிர்க்கட்சிகளான அ.தி.மு.க., பா.ஜ.க இந்த விவகாரத்தைக் கையிலெடுத்துக்கொண்டு தி.மு.க அரசுக்கு நெருக்கடி கொடுக்கத் தொடங்கியிருக்கின்றன. ஆடியோ விவகாரம் தொடர்பாக அறிக்கை வெளியிட்ட தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, ஒலிநாடாவின் உண்மைத்தன்மையை சுதந்திரமான, நியாயமான தடவியல் தணிக்கை செய்யக் கோரி, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் கோரிக்கை வைக்கப்போவதாகக் கூறினார்.

ஆர்.என்.ரவி
ஆர்.என்.ரவி
ட்விட்டர்

அதன்படி, தமிழக பாஜக மூத்த தலைவர்கள் வி.பி.துரைசாமி, கரு நாகராஜன் உள்ளிட்டோர் ஆளுநரைச் சந்தித்து மனு அளித்தனர். தடயவியல் விசாரணை செய்து உண்மையைக் கண்டறிய வேண்டும். ஆடியோவில் இருப்பது பிடிஆர் குரல்தானா அல்லது வேறொருவரின் குரலா என்பதை கண்டறிய வேண்டுமென்பது பா.ஜ.க-வினரின் கோரிக்கை. மேலும் நேற்றும் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் மற்றொரு ஆடியோவை வெளியிட்டார். அதிலும் பிடிஆர் பேசுவதுபோல் சில கருத்துகள் இடம்பிடித்திருக்கின்றன.

ஆனால், அந்த ஆடியோக்கள் போலியானவை என நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் மறுப்பு தெரிவித்திருக்கிறார். இந்த விவகாரத்தில் உண்மைத்தன்மையைக் கண்டறிய வேண்டுமென அ.தி.மு.க-வும் வலியுறுத்தியிருக்கிறது. இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “உதயநிதி மற்றும் சபரீசனிடம் அமலாக்கத்துறை விசாரிக்க வேண்டும். அந்த முப்பதாயிரம் கோடி ரூபாய் அரசு கருவூலத்துக்கு வந்தால் மக்களின் பல கஷ்டங்கள் தீரும். ஜி என்றாலே தி.மு.க-வுக்கு ஒத்துப்போகும்போல. முன்னர் 2ஜி, இப்போது ஜி ஸ்கொயர். தி.மு.க-வுக்கு கவுன்ட்டவுன் (Countown) ஸ்டார்ட் ஆகிவிட்டது” என்றார்.

டிவிட்டர்
டிவிட்டர்

அதேபோல எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும், மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்தார். “அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் இதை மறுத்த பிறகுதான் சந்தேகமே வலுக்கிறது. இது நிச்சயமாக அவருடைய குரலேதான். ரூ.30 ஆயிரம் கோடி பணத்தை என்ன செய்வது, எங்கு வைப்பது எனத் தடுமாறிக்கொண்டிருக்கின்றனர். எனவே இதை வெட்ட வெளிச்சத்துக்கு கொண்டு வர வேண்டும். இது தொடர்பாக மத்திய அரசு விசாரணை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துவோம். எதற்கெல்லாமோ அறிக்கைவிடும் முதல்வர், இந்த விவகாரம் குறித்து ஏன் அறிக்கை அளிக்கவில்லை... 30,000 கோடி ரூபாய் கொள்ளையடித்துள்ளனர் என்றால் நினைத்துப் பார்க்கவே அதிர்ச்சியளிக்கிறது” என்றார்.

ஆடியோ விவகாரம் தொடர்பாக தி.மு.க இணையதளப் பிரிவு நிர்வாகிகள் சிலரிடம் விசாரித்தோம். “Voice cloning செயலியைப் பயன்படுத்தி இந்த இந்த ஆடியோவைத் தயாரித்திருக்கிறார்கள். தமிழில் இப்படியொரு ஆடியோவைத் தயாரிக்க முடியாது. ஆங்கிலத்தில் மட்டும்தான் தயாரிக்க முடியும். பிடிஆர் ஆங்கிலத்தில் நன்றாகப் பேசுவார் என்பதால், அவர் குரலில் இப்படியொரு போலி ஆடியோவைத் தயாரித்துப் பரப்பியிருக்கிறார்கள். ஒருவேளை இந்த ஆடியோ உண்மை என்று சொல்வார்களேயானால், எங்கு பேசியது, யாருடன் பேசியது என்ற தகவலையும் வெளியிட்டிருப்பார்களே... தி.மு.க-வில் குழப்பத்தை ஏற்படுத்த திட்டமிட்டு செய்யப்பட்ட சதி. இதற்கான தொழில்நுட்பச் சாத்தியங்கள் குறித்து முதல்வருக்கு விளக்கிவிட்டோம். அவர்கள் எதிர்பார்த்ததுபோல தி.மு.க-வில் இதைவைத்து எந்தப் புயலும் ஏற்படாது. சட்டரீதியாகவும் இதை எதிர்கொள்ளத் தயாராகவே இருக்கிறோம்” என்றனர்.

நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

ஈஷா விவகாரம் முதல் பல்வேறு விவகாரங்களில் அதிரடியாக கருத்து சொல்லி, விமர்சனங்களில் சிக்கிக்கொண்டிருந்தவர் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன். சமீபகாலமாக சர்ச்சைகளுக்கு இடமளிக்காமல், ஒதுங்கியே இருந்துவந்தவர் இப்போது புதிதாக ஆடியோ சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். பிடிஆர் உட்பட தி.மு.க-வினர் அனைவருமே இதை முழுமையாக நிராகரித்தாலும், தி.மு.க-வினர் மீதான சொத்து மற்றும் ஊழல் பட்டியலை பா.ஜ.க வெளியிட்ட சமயத்தில், இந்த ஆடியோவும் வெளியாகியிருப்பதால் அரசியல்ரீதியாக நிச்சயம் இது தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதே அரசியல் நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது. ஊழல் பட்டியலுக்கு ஆதாரமாக பிடிஆர் ஆடியோ கசிந்திருக்கிறது என ஏற்கெனவே பா.ஜ.க-வினர் பேசத் தொடங்கியிருப்பதையும் இதோடு பொருத்திப் பார்க்க வேண்டியிருக்கிறது!