Published:Updated:

`10,626 கோடி ரூபாய் வசூலிப்பதுதான் உறுத்தலாக இருக்கிறது!' - ஈஷாவுக்கு எதிராக பொதுநல வழக்கு

காவிரி தொடங்கும் தலைக்காவேரி முதல் திருவாரூர் வரையிலான 639.1 கி.மீ தொலைவு நெடுகிலும் மரங்கள் நடுவதற்கான திட்டம் வரையறுக்கப்பட்டுள்ளது.

ஜக்கி வாசுதேவ்
ஜக்கி வாசுதேவ்

ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ், `காவேரி கூக்குரல்' என்ற பெயரில் ஓர் இயக்கத்தைத் தொடங்கியிருக்கிறார். காவிரி நதியின் போக்கை மறுசீரமைப்பது மற்றும் காவிரியை நம்பி விவசாயம் செய்யும் மக்களின் வாழ்வாதாரத்தை வளப்படுத்துவது என இரண்டு குறிக்கோள்களை முன்வைத்து, 'காவேரி கூக்குரல்' என்கிற முழக்கம் முன்வைக்கப்படுகிறது.

காவேரி கூக்குரல்
காவேரி கூக்குரல்

இந்த இயக்கத்தின் முக்கிய அம்சமாக, காவிரி தொடங்கும் தலைக்காவேரி முதல் திருவாரூர் வரையிலான 639.1 கி.மீ தொலைவு நெடுகிலும் மரங்கள் நடுவதற்கான திட்டம் வரையறுக்கப்பட்டுள்ளது. தலைக்காவேரி முதல் திருவாரூர் வரை பைக்கில் பிரச்சார பயணமும் மேற்கொள்ளப்படுகிறது.

இந்நிலையில், கர்நாடகாவைச் சேர்ந்த வழக்கறிஞர் அமர்நாதன் என்பவர், 'ஈஷா நிறுவனர் ஜக்கி வாசுதேவ், காவிரிப் படுகையில் மரம் நடுவதற்கு மக்களிடம் நன்கொடை வாங்குவதை நிறுத்த வேண்டும்' என்று கோரி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருக்கிறார்.

ஒரு மரத்துக்கு ரூபாய் 42 வீதம், 253 கோடி மரங்களுக்கு மக்களிடமிருந்து ரூபாய் 10,626 கோடி பணம் வசூலிக்கப்பட இருக்கிறது.
மனுதாரர்

அவர் தன்னுடைய மனுவில், 'காவேரி கூக்குரல்' இயக்கத்துக்காக ஒரு மரக்கன்று நடும் செலவுக்கு ரூபாய் 42 வாங்கப்படுகிறது. தலைக்காவேரி முதல் திருவாரூர் வரையிலான 639.1 கி.மீ தொலைவில், 253 கோடி மரங்கள் நடுவதற்குத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. ஒரு மரத்துக்கு ரூபாய் 42 வீதம், 253 கோடி மரங்களுக்கு மக்களிடம் இருந்து ரூபாய் 10,626 கோடி பணம் வசூலிக்கப்பட இருக்கிறது. மக்களின் பணம் பத்தாயிரம் கோடி ரூபாய், ஒரு தனியார் அறக்கட்டளையின்மூலம் வசூலிக்கப்படுவது உறுத்தலாகவும் நியாயத்துக்கும் சமத்துவத்துக்கும் ஊறு விளைவிப்பதாகவும் இருக்கிறது' எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஈஷா அறக்கட்டளை காவிரிப் படுகையை ஒட்டி முழு ஆய்வு மேற்கொண்டதாகத் தெரிவித்துள்ளது. ஆனால், அந்த ஆய்வறிக்கைகளை அரசாங்கத்திடம் ஒப்படைத்து, அதற்கான முறையான ஒப்புதலும் அங்கீகாரமும் பெறவில்லை என்றும் மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஒரு தனியார் நிறுவனம், நீளமான காவிரிப் படுகையில் மரம் நடுவது போன்று பெரிய செயல்களைச் செய்யும்போது, அதற்கான முறையான அனுமதியைப் பெற்றிருக்க வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேசமயம், அரசு நிலத்தில், ஒரு தனியார் நிறுவனம் செய்வதாகச் சொல்லும் வேலைக்கு, பொதுமக்களிடம் நன்கொடை வசூலிப்பதை அரசாங்கம் அனுமதிக்கக்கூடாது என்றும் மனுவில் அமர்நாதன் தெரிவித்துள்ளார்.

நேற்று இந்த மனுவின் மீதான விசாரணை கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நடந்தது. மரம் நடும் நிகழ்ச்சி தொடர்பாக விளக்கம் கேட்டு, மாநில அரசுக்கும் ஈஷாவுக்கும் நோட்டீஸ் அனுப்புமாறு நீதியரசர்கள் உத்தரவிட்டனர்.

காவேரி கூக்குரல்
காவேரி கூக்குரல்

வழக்கறிஞர் அமர்நாதனின் பொதுநல வழக்கு குறித்து விளக்கமறிய திங்கள்கிழமை மாலை (16.9.19) அன்று `ஈஷா' தரப்பினரைத் தொடர்பு கொண்டோம். இதுதொடர்பாக நம்மிடம் பேசிய `ஈஷா' மக்கள் தொடர்பு அலுவலர் ஒருவர், `` பொதுவாக, பொதுநல வழக்கு தொடர்பான கேள்விகளுக்கு நாங்கள் விளக்கம் அளிப்பதில்லை. இருப்பினும், உங்களுடைய கேள்விகளுக்கு நாளை விளக்கம் கொடுக்கிறோம்" என்றார். 48 மணிநேரங்களைக் கடந்த பிறகும் ஈஷா தரப்பில் இருந்து நமக்கு விளக்கம் கொடுக்கப்படவில்லை. இக்கட்டுரை பிரசுரம் ஆன பிறகு ஈஷா தரப்பில் இருந்து ஏதேனும் விளக்கம் அளிக்கப்பட்டால், தகுந்த பரிசீலனைக்குப் பிறகு பிரசுரிக்கவும் தயாராக இருக்கிறோம்.