Election bannerElection banner
Published:Updated:

மும்பையில் பால்தாக்கரே சிலை வைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு! - அதிர்ச்சியில் சிவசேனா

பால்தாக்கரே சிலை
பால்தாக்கரே சிலை

மும்பையில் மறைந்த சிவசேனா தலைவர் பால்தாக்கரே சிலை வைக்க பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்திருப்பது சிவசேனா கட்சியினரை அதிர்ச்சியடையவைத்திருக்கிறது.

மகாராஷ்டிராவில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. அதோடு மும்பை மாநகராட்சியையும் சிவசேனாதான் ஆட்சி செய்கிறது. இதனால் எந்தப் புதிய திட்டம் என்றாலும் உடனே பால்தாக்கரே பெயரை வைக்க சிவசேனா ஆர்வம் காட்டி வருகிறது. அதோடு பால்தாக்கரே ஆசைப்பட்டபடி ஒளரங்காபாத் நகரத்தின் பெயரையும் சாம்பாஜி நகர் என்று மாற்ற ஆர்வம் காட்டி வருகிறது.

பாலதாக்கரே
பாலதாக்கரே

ஆனால், சிவசேனாவின் இம்முடிவுக்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. தற்போது மும்பையில் உள்ள கொலாபாவில் டாக்டர் ஷியாம் பிரசாத் முகர்ஜி சௌக் பகுதியில் உள்ள எம்.ஜி.ரோடு சந்திப்பில் சிவசேனா, பால்தாக்கரே சிலையை நிறுவ முடிவு செய்துள்ளது. மாநகராட்சி அதிகாரிகள் நேற்று சிலையைக் கொண்டு வந்து வைத்தனர். இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். சிலையால் அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி ஏற்படும் என்று கூறி மக்கள் எதிர்த்தனர். `கடந்த 2013-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுப்படி பொதுசாலைகளில் சிலைகள் வைக்கக்கூடாது’ என்று அப்பகுதி மக்கள் கூறியிருக்கிறார்கள். ஆனால் மாநகராட்சி ஊழியர்கள் சிலையை வைத்து அதனை மூடிவிட்டுச் சென்றுவிட்டனர். இன்னும் சில பணிகள் பாக்கி இருப்பதால் அவை முடிந்த பிறகு சிலை திறக்கப்படும் என்று மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இச்சிலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அப்பகுதி தொண்டு நிறுவனம் ஒன்றின் தலைவரும் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியுமான சி.ராவ் இது குறித்து கூறுகையில், ``சுப்ரீம் கோர்ட் 2013-ம் ஆண்டு சாலைகளில் சிலைகள் வைக்கக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளது. சிலையால் பாதசாரிகள் பாதிக்கப்படுவர். ஒவ்வொரு முறையும் சிலைக்கு மாலை அணிவிக்கும்போது சாலைகள் மூடப்பட்டு போக்குவரத்து நெருக்கடி ஏற்படும். கேரளா அரசு அம்மாநில முன்னாள் துணை சபாநாயகர் சுந்தரம் நாடாருக்கு சிலை வைக்க முடிவு செய்தபோது, அதனால் போக்குவரத்து பாதிக்கப்படும் என்று கூறி சுப்ரீம் கோர்ட் தடை விதித்தது. இந்த உத்தரவு அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும்’’ என்று தெரிவித்தார். இது குறித்து மும்பை மாவட்ட ஆட்சி த்தலைவர் ராஜீவ் நிவத்கரிடம் கேட்டதற்கு, `கூடுதல் தகவல்களைக் கேட்டுள்ளேன்’ என்று மட்டும் கூறினார்.

மும்பை மாநகராட்சி நிலைக்குழுவின் தலைவர் யஷ்வந்த் ஜாதவிடம் கேட்டதற்கு, ``பாலாசாஹேப் மும்பைக்கு செய்த தியாகங்களை மதிப்பிடவே முடியாது. எனவே ஒவ்வொருவரும் அவருக்கு மரியாதை செலுத்த விரும்புகின்றனர். இதற்கு முன்பு சிலை வைக்க தேர்வு செய்யப்பட்ட இடம் சிறிதாக இருந்தது. தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தில் மக்கள் நின்று மாலை அணிவிக்க போதிய இட வசதி இருக்கிறது. அனைத்து அனுமதிகளும் பெறப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்தார்.

உள்ளூர் பா.ஜ.க கவுன்சிலர் நர்வேகரிடம் இது குறித்து கேட்டதற்கு, ``கோர்ட் உத்தரவு மீறப்படாமல் சட்டப்படி சிலை வைக்கவேண்டும்’’ என்றார். 2019-ம் ஆண்டில் இருந்தே இந்தப் பகுதியில் சிலை வைக்க பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இப்போது எதிர்ப்பையும் மீறி சிலையைக் கொண்டு வந்து வைத்துவிட்டனர். பால்தாக்கரே, தான் இருந்த வரை மும்பையைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். ஆரம்ப காலத்தில் தமிழர்களை எதிர்த்து பால்தாக்கரே, தனது கட்சியை வளர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு