Published:Updated:

``அப்போது இனித்த ஆளுநர்கள் இப்போது கசக்கிறார்களா?” – திமுக-வுக்கு கேள்வியெழுப்பும் புதுச்சேரி அதிமுக

புதுச்சேரி - அதிமுக

”ஆளுநரை அவமதிக்க வேண்டும் என்று முன்கூட்டியே முதலமைச்சரால் கொடுக்கப்பட்ட ஆணையை தி.மு.க-வின் கூட்டணி கட்சிகள் சிறப்பாக அரங்கேற்றின.” - புதுச்சேரி அதிமுக

``அப்போது இனித்த ஆளுநர்கள் இப்போது கசக்கிறார்களா?” – திமுக-வுக்கு கேள்வியெழுப்பும் புதுச்சேரி அதிமுக

”ஆளுநரை அவமதிக்க வேண்டும் என்று முன்கூட்டியே முதலமைச்சரால் கொடுக்கப்பட்ட ஆணையை தி.மு.க-வின் கூட்டணி கட்சிகள் சிறப்பாக அரங்கேற்றின.” - புதுச்சேரி அதிமுக

Published:Updated:
புதுச்சேரி - அதிமுக

புதுச்சேரி மாநில அ.தி.மு.க செயலாளரும், முன்னாள் சட்டமன்ற கட்சித் தலைவருமான அன்பழகன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ``ஆளுநர் உரை என்பது அரசின் கொள்கை உரையாகும். ஆளுநரால் வாசிக்கப்பட்ட தமிழக அரசின் உரையை நீக்கம் செய்து சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்த தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களின் செயல்,  சட்டமன்ற மரபுக்கும் சட்டமன்ற நடத்தை விதிகளுக்கும் எதிரான ஒன்றாகும்.

ஆளுநர் என்பவர் ஆளும் மாநில அரசுக்கு அடிமை இல்லை. தனது இயலாமையை மூடி மறைத்து, தனது அரசின் செயலற்ற தன்மையை செயலுள்ளதாக மிகைப்படுத்தி, பிரிவினை அர்த்தங்களை வார்த்தை ஜாலங்களால் புகுத்தி தயாரிக்கப்பட்ட உரையை ஆளுநர் அப்படியே வாசித்துதான் ஆக வேண்டும் என்பது சர்வாதிகாரத்தனமான செயலாகும். சுதந்திரம், உண்மைத்தன்மை, சமத்துவம், பிரிவினையற்ற செயல் இவற்றை உள்ளடக்கியதுதான் இந்திய அரசியலமைப்பாகும்.

ஸ்டாலின், ஆளுநர் ரவி
ஸ்டாலின், ஆளுநர் ரவி

அதன்படி தனக்கு இருக்கும் சுதந்திரத்தின் அடிப்படையில், தமிழக ஆளுநர் தனக்கு ஏற்புடையதாக இல்லாத ஒருசில வார்த்தைகளை தவிர்த்திருக்கிறார். ஆளுநர் உரை முடிந்து அதன் தமிழாக்கம் சட்டப்பேரவை தலைவரால் வாசிக்கப்பட்ட பிறகு, அத்துடன் சபை நடவடிக்கை முடிவுக்கு வரும். ஆனால், சட்டப்பேரவைத் தலைவரின் தமிழ் வாசிப்புக்குப் பிறகு தமிழக முதல்வர், ஆளுநருக்கு எதிரான கண்டன தீர்மானத்தை எந்த விதியின் கீழ் கொண்டுவந்தார். இது தமிழக முதல்வர் ஸ்டாலினின் சட்டமன்ற நிகழ்விலுள்ள முதிர்ச்சியின்மையை காட்டுகிறது. சட்டமன்ற நடத்தை விதிகளுக்குப் புறம்பாக நடைபெற்ற சபை நடவடிக்கையை கண்டித்து கழகத்தின் இடைக்கால பொதுச்செயலாளர், தமிழக முன்னாள் முதலமைச்சரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடியார் தலைமையில் அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

அதன்பிறகு விழித்துக்கொண்ட ஆளுநர், அரசின் செயலை கண்டித்து வெளியேறியபோது ஆளுநரைப் பார்த்து ஒரு அமைச்சர், `ஆளுநரே வெளியே போ' என குரல் கொடுப்பது அநாகரிகத்தின் உச்சக்கட்டமாகும். ஆளுநரை சட்டசபையில் அவமதிக்க வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில், மக்கள் விரோத தி.மு.க-வின் நடவடிக்கை இருந்தது. ஆளுநரை அவமதிக்க வேண்டும் என்று முன்கூட்டியே முதலமைச்சரால் கொடுக்கப்பட்ட ஆணையை தி.மு.க-வின் கூட்டணிக் கட்சிகள் சிறப்பாக அரங்கேற்றின. ஆளுநர் உரையை வாசிக்கத் தொடங்கியதும் தி.மு.க-வின் அத்தனை கூட்டணிக் கட்சிகளும் சட்டசபையில் ஆளுநருக்கு முன்பாக எதிர்கோஷம் போட்டபோது, முதல்வர் ஸ்டாலினும், சபாநாயகரும் குறைந்தபட்சம் அவர்களை சபையிலிருந்து வெளியேற உத்தரவுகூட பிறப்பிக்கவில்லை. மாறாக தாங்களாகவே தொடர்ந்து கோஷம்போட முடியாமல் வெளிநடப்பு செய்யும் வரை முதல்வரும், சபாநாயகரும் ரசித்து பார்த்து கொண்டிருந்தது நியாயமற்ற செயலாகும்.

புதுச்சேரி  - அதிமுக
புதுச்சேரி - அதிமுக

எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஆளும் அ.தி.மு.க-வை ஒடுக்க, நசுக்க, குற்றம்சுமத்த மாதம்தோறும் ஆளுநரைச் சந்தித்து பூங்கொத்து கொடுத்து, வெண்சாமரம் வீசிய தி.மு.க தலைவர் ஸ்டாலின், தற்போது ஆளுங்கட்சியாக வந்தவுடன் ஆளுநரை எதிர்ப்பது ஏன்? ஆளுநர் என்பவர் மாநில அரசின் அடிமையல்ல. எதிர்க்கட்சியாக தி.மு.க இருந்தபோது கரும்பாக இனித்த ஆளுநர்கள், இன்று ஆளுங்கட்சியாக ஆனவுடன் முதல்வர் ஸ்டாலினுக்கு ஆளுநர்கள் வேப்பங்காயாக கசப்பது ஏன்? ஆளும் அ.தி.மு.க ஆட்சியில் கிழியாத சட்டையை தானே கிழித்துக்கொண்டு கவர்னரை தேடி ஓடிய தி.மு.க தலைவர் ஸ்டாலின், இன்று ஆளுநரை எதிர்ப்பது தனது அரசின் ஊழல், சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, அரசின் செயலற்ற தன்மையை மக்களிடமிருந்து திசை திருப்பும் நாடகமாகும். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க, காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு மக்கள் சரியான பாடத்தை புகட்டுவார்கள்” என்றார்.