Published:Updated:

புதுச்சேரி: ``முதல்வர்கள் மாநாட்டில் ஆளுநர் பங்கேற்றது ஏன்?!” – வெள்ளை அறிக்கை கேட்கும் அதிமுக

கூட்டத்தில் ஆளுநர் தமிழிசை

``மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை மக்களிடம் கொண்டு செல்ல துணைநிலை ஆளுநர் உறுதுணையாக இருக்க வேண்டும்.” – புதுச்சேரி அதிமுக

புதுச்சேரி: ``முதல்வர்கள் மாநாட்டில் ஆளுநர் பங்கேற்றது ஏன்?!” – வெள்ளை அறிக்கை கேட்கும் அதிமுக

``மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை மக்களிடம் கொண்டு செல்ல துணைநிலை ஆளுநர் உறுதுணையாக இருக்க வேண்டும்.” – புதுச்சேரி அதிமுக

Published:Updated:
கூட்டத்தில் ஆளுநர் தமிழிசை

மத்திய உள்துறை அமைச்சகத்தின் மூலம் ஆண்டுதோறும் நடத்தப்படும் தென்மண்டல கவுன்சில் கூட்டம், கேரள மாநிலத்தின் தலைநகர் திருவனந்தபுரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நேற்று (03.09.2022) துவங்கியது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, புதுச்சேரி உள்ளிட்ட தென் மாநில முதல்வர்களுக்கான இந்தக் கூட்டத்தில், எல்லைப் பிரச்னைகள், சட்டம் ஒழுங்கு பிரச்னைகள், நதிநீர் பங்கீடு உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்படும். நேற்று துவங்கிய 30-வது கூட்டத்தில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தென் மாநில முதல்வர்கள் கலந்துகொண்டனர். ஆனால் புதுச்சேரி சார்பில் முதல்வர் ரங்கசாமிக்கு பதிலாக பொறுப்பு துணைநிலை ஆளுநராக பதவி வகிக்கும் தமிழிசை சௌந்தரராஜன் கலந்துகொண்டது பலத்த சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. அதன் தொடர்ச்சியாக புதுச்சேரியில் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜ.க கூட்டணியில் அங்கம் வகிக்கும் அ.தி.மு.க-வின் கிழக்கு மாநிலச் செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.

முதல்வர் ரங்கசாமி
முதல்வர் ரங்கசாமி

அப்போது பேசிய அவர், ``பல்வேறு மாநிலங்களைக் கொண்ட நம் நாட்டில், மாநிலங்களுக்கிடையே நிலவும் பல்வேறு பிரச்னைகளை மனம்விட்டு பேசி தீர்த்துக்கொள்வதற்காக மத்திய உள்துறை அமைச்சரின் தலைமையில் ஆண்டுதோறும் தென் மண்டல கூட்டம் நடத்தப்படுவது வழக்கம். சம்பந்தப்பட்ட மாநிலத்தின் முதலமைச்சர்கள்தான் அந்தக் கூட்டத்தின் உறுப்பினர்கள். அதனடிப்படையில் தென் மாநிலங்களுக்கான கூட்டம் நேற்று திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. அதில் தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம், ஆந்திரா, தெலங்கானா என அந்தந்த மாநில முதலமைச்சர்கள் கலந்துகொண்டனர். ஆனால் புதுச்சேரி முதலமைச்சர் உறுப்பினராக இருந்தும் அவர் கலந்துகொள்ளாமல், துணைநிலை ஆளுநர் தமிழிசை கலந்துகொண்டார். இது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. யூனியன் பிரதேசமான புதுச்சேரியின் ஆளுநருக்கு அதிகாரங்கள் குவிக்கப்பட்டிருந்தாலும் சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்ப அரசுக்கும், முதலமைச்சருக்கும் உரிய முன்னுரிமை அளிக்க வேண்டியது துணைநிலை ஆளுநரின் தலையாய கடமை.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதுபோன்ற கூட்டங்களில் மாநில அந்தஸ்து இல்லாத சட்டமன்றம் உள்ள புதுச்சேரி யூனியன் பிரதேசம் மற்றும், சட்டமன்றம் இல்லாத அந்தமான், லட்சத்தீவுகளின் சார்பில் துணைநிலை ஆளுநர், முதலமைச்சர் கலந்துகொள்ளலாம் என அனுமதிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர், துணைநிலை ஆளுநர் கலந்துகொள்ளலாம் என விதி இருந்தும், சட்டமன்றம் உள்ள யூனியன் பிரதேசத்தில் முதலமைச்சர் கலந்துகொள்ளும் விதத்தில் துணைநிலை ஆளுநர் உரிய வாய்ப்பினை அளித்திருக்க வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாண்புமிகு முதலமைச்சருக்கான உரிமையை நிலைநாட்டும் விதத்தில், இக்கூட்டத்தில் துணைநிலை ஆளுநர் செல்வதை தவிர்த்து முதலமைச்சரை கலந்துகொள்ள தெரிவித்திருக்கலாம். புதுச்சேரியில் 2009-ம் ஆண்டு அப்போதைய உள்துறை அமைச்சர் சிவராஜ்பட்டேல் தலைமையில் நடைபெற்ற தென் மாநிலங்களுக்கான கூட்டத்தில் அப்போதைய முதலமைச்சர் ரங்கசாமி கலந்துகொண்டார்.

அன்பழகன்
அன்பழகன்

அதேபோன்று கடந்த ஆண்டு திருப்பதியில் நடைபெற்ற தென்மாநில மண்டல முதல்வர் கூட்டத்தில் புதுச்சேரி சார்பில் மாண்புமிகு முதல்வரும், துணைநிலை ஆளுநரும் கலந்துகொண்டது மற்ற உறுப்பினர்கள் மனதில் சில கேள்விகள் எழுந்தது. தமிழகத்திலிருந்து புதுச்சேரிக்கு காவிரி நீர், விமான நிலையத்திற்கான நில ஆர்ஜிதம், தமிழகத்திலிருந்து காரைக்காலுக்கு மணல் கொண்டுவருவது உள்ளிட்டவை குறித்து துணைநிலை ஆளுநர் தமிழிசை பேசியுள்ளார். இந்தக் கூட்டத்தில் முதலமைச்சர் கலந்துகொண்டிருந்தால் அவர் அண்டை மாநில முதலமைச்சரிடம் நேரிடையாகவும் கலந்து பேசியிருக்க வாய்ப்பு இருந்திருக்கும்.

யூனியன் பிரதேசத்திற்கு மத்திய அரசின் ஊக்குவிப்பு நிதியாக நமக்கு 100 சதவிகிதம் வழங்க வேண்டும். அதையும் வழங்குவதில்லை என்பதையும், தான் பா.ஜக-வின் ஆதரவில் துணைநிலை ஆளுநராக இருந்தாலும், மத்திய உள்துறை அமைச்சரிடம் நேரிடையாக சுட்டிக்காட்டியுள்ளார். அவரது தைரியமான செயல் என்பது பாராட்டுக்குரியது ஆகும். அது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட புதுச்சேரி அரசுக்கு மத்திய அரசு போதிய அதிகாரம் வழங்கவில்லை என்றும், துணைநிலை ஆளுநர் சூப்பர் முதலமைச்சராக செயல்படுகிறார் என்றும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக உள்ள தி.மு.க, காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டுகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் கருத்துகளுக்கு வலு சேர்ப்பதாக உள்ளது.

சிறப்புமிக்க இதுபோன்ற கூட்டங்களில் துணைநிலை ஆளுநர் கலந்துகொண்டதும், முதலமைச்சர் கலந்துகொள்ளாததும் ஏன் என்பது குறித்து மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் சந்தேகங்களை தீர்க்கும் வகையில் துணைநிலை ஆளுநரும், முதல்வரும் இணைந்து ஒரு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். ஜனநாயக நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு முழு அதிகாரம் தேவை. கடந்த கால காங்கிரஸ் ஆட்சியில் அதிகாரங்கள் துணைநிலை ஆளுநரிடம் கொடுக்கப்பட்டன. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை மக்களிடம் கொண்டு செல்ல துணைநிலை ஆளுநர் உறுதுணையாக இருக்க வேண்டும்” என்றார்.