Published:Updated:

``காங்கிரஸை ஸ்டாலினிடம் அடகு வைத்துவிட்டார்!” - நாராயணசாமியை சாடும் அதிமுக

புதுச்சேரி அதிமுக கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன்

”புதுச்சேரியில் தங்கள் தலைமையில் ஆட்சி அமையும் என தி.மு.க அமைப்பாளர் சிவா கூறியபோது கடுமையாக விமர்சித்த முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, அதை தி.மு.க தலைவர் ஸ்டாலின் கூறும்போது `அது அவர்களது விருப்பம்' என மழுப்புகிறார்” – புதுச்சேரி அதிமுக

``காங்கிரஸை ஸ்டாலினிடம் அடகு வைத்துவிட்டார்!” - நாராயணசாமியை சாடும் அதிமுக

”புதுச்சேரியில் தங்கள் தலைமையில் ஆட்சி அமையும் என தி.மு.க அமைப்பாளர் சிவா கூறியபோது கடுமையாக விமர்சித்த முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, அதை தி.மு.க தலைவர் ஸ்டாலின் கூறும்போது `அது அவர்களது விருப்பம்' என மழுப்புகிறார்” – புதுச்சேரி அதிமுக

Published:Updated:
புதுச்சேரி அதிமுக கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன்

புதுச்சேரி கிழக்கு மாநில அ.தி.மு.க செயலாளரும், முன்னாள் சட்டமன்ற கட்சித் தலைவருமான அன்பழகன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “புதுச்சேரிக்கு வந்த தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியை பற்றி பேசிய வார்த்தைகள் அநாகரிகமான அறுவறுக்கத்தக்க செயலாகும். தமிழ்நாடு என்பது ஒரு மாநிலம், புதுச்சேரி ஒரு யூனியன் பிரதேசம். இங்கு துணைநிலை ஆளுநருடன் இணக்கமாகச் செயல்படுவது மாநில வளர்ச்சிக்கு உகந்ததாகும். அந்த வகையில் முதலமைச்சர் மத்திய அரசிடமும், துணைநிலை ஆளுநரிடமும் இணக்கமாகச் செயல்படுகிறார். சட்டமன்றத்தில் அறிவித்த அனைத்து திட்டங்களையும் உடனுக்குடன் செயல்படுத்தி நல்லாட்சியும் நடத்தி வருகிறார். ஆனால் ‘ரங்கசாமி ஆள்தான் உயர்ந்தவர். தகுதியில் துணைநிலை ஆளுநரிடம் அடிபணிந்து பொம்மை ஆட்சி நடத்தி வருகிறார். எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை’ என தமிழக முதலமைச்சர் பேசியது அரைவேக்காட்டுத்தனமான செயலாகும்.

நாராயணசாமி
நாராயணசாமி

சட்டமன்றத்தில் அறிவித்த அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தியவர் முதலமைச்சர் ரங்கசாமி, எங்களின் அரசை பற்றியும், முதலமைச்சரை பற்றியும் தமிழக முதலமைச்சர் தரம் தாழ்ந்து விமர்சித்ததை புதுச்சேரி அ.தி.மு.க வன்மையாக கண்டிக்கிறது. துணைநிலை ஆளுநர் யார், அவரது அதிகாரம் என்ன என்பதை தெரிந்துகொண்டு தமிழக முதலமைச்சர் பேச வேண்டும். ஆளுநரை பற்றி பேசினால்தான் இந்தியா முழுவதும் தெரிவார் என்பதால் இப்படி பேசியிருக்கிறார். எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது சட்டையை கிழித்துக்கொண்டு ஆளுநரிடம் முறையிட்டவர்தான் இப்போதைய தமிழக முதல்வர் ஸ்டாலின். ஆட்சியில் இருக்கும்போது ஒரு நிலைப்பாடு, ஆட்சியில் இல்லாதபோது ஒரு நிலைப்பாடா? கடந்தகால காங்கிரஸ் - தி.மு.க ஆட்சி புதுச்சேரி மாநிலத்திற்கான இருண்ட ஆட்சி. மாநில வளர்ச்சியை பின்னுக்குத் தள்ளியதுதான் கடந்தகால ஆட்சி. இதுதான் திராவிட மாடல் ஆட்சியா? திராவிட மாடல் ஆட்சி என்பது மக்களுக்கான ஆட்சி இல்லை. அவர்களின் குடும்ப ஆட்சி.

குடும்ப நலனுக்கான ஆட்சி. புதுச்சேரியில் தங்கள் தலைமையில் ஆட்சி அமையும் என தி.மு.க அமைப்பாளர் சிவா கூறியபோது கடுமையாக விமர்சித்த முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, அதை தி.மு.க தலைவர் ஸ்டாலின் கூறும்போது `அது அவர்களது விருப்பம்' என மழுப்புகிறார். தன்னுடைய சுயநலத்திற்காக புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சியை ஒட்டுமொத்தமாக தி.மு.க ஸ்டாலினிடம் அடமானம் வைத்துவிட்டார். அவருடைய கருத்தை இப்போது உள்ள காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர்கள்,  நிர்வாகிகள் ஏற்றுக்கொண்டார்களா? புதுச்சேரி மாநிலத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க நிற்கும் என்பதை காங்கிரஸ் கட்சியினர் ஏற்றுக்கொள்கிறார்களா? பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி வரும் நாராயணசாமி இதுவரை அதற்கான ஆதாரத்துடன் நிரூபித்தாரா? வாய்க்கு வந்தபடி எல்லாம் பேசுவது தவறானது. நாராயணசாமியிடம் எந்த காலகட்டத்திலும் அரசியல்ரீதியான மரியாதையை எதிர்பார்க்க முடியாது.

நாம் என்ன விதைக்கிறோமோ அதைத்தான் அறுவடை செய்வோம். காலாப்பட்டில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் 2 தொழிலாளர்கள் மரணமடைந்துள்ளனர். அந்த நிறுவனம் மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய ரசாயனங்களை உற்பத்தி செய்கிறது. இந்தச் சம்பவம் முழுமையாக மூடி மறைக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களுக்கு குறைந்த அளவில் இழப்பீடு வழங்கப்பட்டு பிரச்னை மூடி மறைக்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனத்தில் சரியான உள்கட்டமைப்பு இல்லாத நிலையில் உயிரிழப்பு ஏற்பட்டால் உரிய இழப்பீடு வழங்கி அதை மூடி மறைப்பது சரியில்லை. மீண்டும் இதுபோன்ற சம்பவம் ஏற்படவும் வாய்ப்புள்ளது. உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய ரசாயனம் தயார் செய்வதை கண்காணிக்கும் துறையினர் என்ன செய்கிறார்கள் எனத் தெரியவில்லை. அந்த தொழிலாளர்கள் பயம் கலந்த பீதியுடன் பணி செய்யும் சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இந்தப் பிரச்னையில் துணைநிலை ஆளுநர், முதலமைச்சர் ஆகியோர் நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். அதுவரை அந்த தொழிற்சாலையில் உற்பத்தியை நிறுத்தி வைக்க அரசு உத்தரவிட வேண்டும்” என்றார்.