Published:Updated:

பேனர் விவகாரம்: "மாவட்ட ஆட்சியரால் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவருகிறது" - புதுச்சேரி அதிமுக சாடல்

புதுச்சேரி - அதிமுக

”தங்களுக்கு வேண்டியவர்களின் விளம்பர பேனர்களை அனுமதிக்கும் அதிகாரிகள், அதன் பிறகு, ’திறந்தவெளி விளம்பரங்கள் தடைசெய்யப்பட்டிருக்கின்றன. மீறி வைப்பவர்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என வெளியிடும் எச்சரிக்கை அறிக்கை தமாஷாகப் பார்க்கப்படுகிறது” - புதுச்சேரி அதிமுக

பேனர் விவகாரம்: "மாவட்ட ஆட்சியரால் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவருகிறது" - புதுச்சேரி அதிமுக சாடல்

”தங்களுக்கு வேண்டியவர்களின் விளம்பர பேனர்களை அனுமதிக்கும் அதிகாரிகள், அதன் பிறகு, ’திறந்தவெளி விளம்பரங்கள் தடைசெய்யப்பட்டிருக்கின்றன. மீறி வைப்பவர்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என வெளியிடும் எச்சரிக்கை அறிக்கை தமாஷாகப் பார்க்கப்படுகிறது” - புதுச்சேரி அதிமுக

Published:Updated:
புதுச்சேரி - அதிமுக

புதுச்சேரி அ.தி.மு.க செயலாளரும், முன்னாள் சட்டமன்றக் கட்சித் தலைவருமான அன்பழகன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், ``மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றம் மூலம் கொண்டுவரப்பட்ட ஒரு சட்டத்தை அமல்படுத்தவேண்டிய அதிகாரிகள், அதைக் கண்டும் காணாமல் விட்டுவிடுவது சட்டத்தையே அவமதிக்கும் செயல். ஒரு சட்டத்தை அவமதிக்கும்போது பொதுமக்களுக்கு நீதித்துறை தண்டனை வழங்குவது சட்டப்படியான நிகழ்வு. ஆனால், இருக்கும் சட்டத்தைக் காப்பாற்றவேண்டிய அதிகாரிகள் தங்கள் கடமையிலிருந்து தவறும்போது, அவர்களுக்கு நீதித்துறை தண்டனை வழங்கினால் மட்டுமே சட்டத்தை முழுமையாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடைமுறைப்படுத்த முடியும். உதாரணத்துக்கு புதுச்சேரியில் திறந்தவெளி விளம்பரங்கள் முழுமையாகத் தடைசெய்யப்பட்டிருக்கின்றன.

அதற்குரிய சட்டம் சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்டது. ஆனால், அந்தச் சட்டத்தை அமல்படுத்தவேண்டிய மாவட்ட ஆட்சியர், பொதுப்பணித்துறை அதிகாரிகள், உள்ளாட்சித்துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகளின் தொடர் அலட்சியப் போக்கால் திறந்தவெளி விளம்பரங்கள் வைப்பதில் சட்டம்- ஒழுங்கு சீர்குலைந்துவருகிறது. திறந்தவெளி விளம்பரங்களால் அன்றாடம் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கும், விபத்துகளுக்கும் ஆளாகிவருகின்றனர். திறந்தவெளி விளம்பரங்கள் வைக்கப்படும்போது திடீர் திடீர் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஞானோதயம் வந்து, விளம்பர பேனர்களை அகற்றுவதும், விளம்பரம் வைப்பவர்கள்மீது சில நேரங்களில் வழக்கு பதிவுசெய்வதும், சில நேரங்களில் கண்டும் காணாமல் விட்டுவிடுவதும் வாடிக்கையான ஒன்றாக இருக்கிறது.

ஒரு சிலரின் மீது வழக்கு பதிவுசெய்யும் அதிகாரிகள், அதே தவற்றைக் குறிப்பிட்ட ஒருசில அரசியல் கட்சிகள், சினிமா துறையைச் சேர்ந்தவர்கள், அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், ரசிகர்மன்றத்தைச் சேர்ந்தவர்கள் செய்யும்போது நடவடிக்கை எடுக்காமல் மௌனம் காப்பது ஏன்... திறந்தவெளி விளம்பரங்கள் தடை எனச் சட்டம் இருக்கும்போது, நகர்ப் பகுதி முழுவதும் ராட்சத பேனர்கள் வைக்கப்படுவதை அதிகாரிகள் கண்டும் காணாமல் விட்டுவிடும்போது, அவர்களுடைய பணியின் தன்மை கேள்விக்குறியாக்கப்பட்டுவருகிறது. தங்களுக்கு வேண்டியவர்களின் பிறந்தநாள், அரசியல் நிகழ்வுகள், சினிமா பட விளம்பரங்களை அனுமதித்த பிறகு, ’திறந்தவெளி விளம்பரங்கள் தடைசெய்யப்பட்டிருக்கின்றன' என்றும், `மீறி வைப்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றும் அதிகாரிகளால் வெளியிடப்படும் எச்சரிக்கை அறிக்கை தமாஷாகப் பார்க்கப்படுகிறது.

சட்டத்தை அமல்படுத்தவேண்டிய துறைகளின் அதிகாரிகள், வேடிக்கை பார்ப்பதும், சட்டப்படிப் குற்றம். தற்போது நகர்ப்பகுதி முழுவதும் திறந்தவெளி விளம்பரங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. இந்த விவகாரத்தில் எந்தவித பாரபட்சமும் இன்றி உரிய நடவடிக்கையை உடனடியாக அரசு எடுக்க வேண்டும். இந்தச் சட்டத்தின்படி ஏற்கெனவே யார் யார் மீதெல்லாம் வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறதோ அந்த வழக்குகளை திரும்பப் பெறுவது என்பது ஆரோக்கியமான ஒன்று. இந்தச் சட்டத்தை அதிகாரிகளால் அமல்படுத்த முடியவில்லை என்றால், திரும்பப் பெறுவது நன்றாக இருக்கும்” என்றார்.