Published:Updated:

புதுச்சேரி: ஆபரேஷன் தாமரை... நெருக்கும் பாஜக... தவிக்கும் ரங்கசாமி!

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

முதல்வர் ரங்கசாமியைக் கடுமையாக விமர்சித்து வீடியோ வெளியிட்டு, தங்கள் கூட்டணிச் சண்டையை அடுத்தகட்டத்துக்கு நகர்த்தியிருக்கிறது புதுவை பா.ஜ.க.

புதுச்சேரி: ஆபரேஷன் தாமரை... நெருக்கும் பாஜக... தவிக்கும் ரங்கசாமி!

முதல்வர் ரங்கசாமியைக் கடுமையாக விமர்சித்து வீடியோ வெளியிட்டு, தங்கள் கூட்டணிச் சண்டையை அடுத்தகட்டத்துக்கு நகர்த்தியிருக்கிறது புதுவை பா.ஜ.க.

Published:Updated:
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ் – பா.ஜ.க கூட்டணிக்குள் நீறுபூத்த நெருப்பாக நிலவிவந்த அதிருப்தி மீது, பெட்ரோலை ஊற்றி அணையா பெரு நெருப்பாக மாற்றியிருக்கிறது பா.ஜ.க. செப்டம்பர் 19-ம் தேதி பா.ஜ.க-வின் சட்டமன்றக் கட்சித் தலைவரும், உள்துறை அமைச்சருமான நமச்சிவாயம் தலைமையில் நடைபெற்ற அந்தக் கட்சி எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில், முதல்வர் ரங்கசாமி மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. அங்கு பேசப்பட்ட விஷயங்கள் குறித்து, ‘புதுச்சேரியில் முடிவுக்கு வருகிறதா தேசிய ஜனநாயகக் கூட்டணி?’ என்ற தலைப்பில் 28.09.2022 தேதியிட்ட ஜூ.வி இதழில் விரிவாக எழுதியிருந்தோம்.

முதல்வரைச் சந்தித்த என்.ஆர்.காங்கிரஸ் எம்க.எல்.ஏ-க்கள்
முதல்வரைச் சந்தித்த என்.ஆர்.காங்கிரஸ் எம்க.எல்.ஏ-க்கள்

அதையடுத்து, “முதல்வர் ரங்கசாமியை மாற்ற வேண்டும்” என்ற முழக்கத்துடன் சட்டப்பேரவை வாசலில் உண்ணாவிரதப் போராட்டத்தில் அமர்ந்த பா.ஜ.க ஆதரவு சுயேச்சை எம்.எல்.ஏ அங்காளன், “முதலமைச்சர் ரங்கசாமி பதவி விலக வேண்டும், புதுவையில் பா.ஜ.க ஆட்சி அமைய வேண்டும். இ-டெண்டர் முறை இருக்கும்போது, வெளிப்படைத்தன்மை இல்லாமல் மதுபான ஆலைகளுக்கு உரிமம் வழங்கியுள்ளனர். மதுபான ஆலைகளுக்கு அனுமதி வழங்கியதில் ஊழல் நடந்திருக்கிறது. இது குறித்து சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும். இது குறித்துப் பேச பா.ஜ.க கட்சித் தலைவர்கள் மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்திக்க அனுமதி கோரியிருக்கிறோம்.

அவரைச் சந்திக்கும்போது ஆட்சியை மாற்ற வேண்டும் என்பதுதான் முதல் கோரிக்கையாக இருக்கும். என்.ஆர்.காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ-க்களே பா.ஜ.க-தான் ஆட்சிக்கு வர வேண்டும் என்று விரும்புகிறார்கள்” என்று ஒரு போடு போட்டார்.

அவருக்கு ஆதரவாகக் குதித்த பா.ஜ.க எம்.எல்.ஏ கல்யாணசுந்தரம், “முதல்வர் எங்கள் தொகுதிகளைப் புறக்கணித்து நம்பிக்கை துரோகம் செய்துவிட்டார்” என்று கூறி, பரபரப்பைக் கூட்டினார். அதையடுத்து என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள், “பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா செய்துவிட்டுத் தேர்தலைச் சந்திக்கட்டும். யாரால் அவர்கள் வெற்றிபெற்றார்கள் என்று அப்போது தெரியும்” என்று கூறியதுடன், அதை வீடியோவாகவும் வெளியிட்டனர்.

உண்ணாவிரதப் போராட்டத்தில் பா.ஜ.க எம்.எல்.ஏ
உண்ணாவிரதப் போராட்டத்தில் பா.ஜ.க எம்.எல்.ஏ

இது பா.ஜ.க தரப்பைக் கொந்தளிக்கவைத்தது. தொடர்ந்து சபாநாயகர் செல்வம் தலைமையில் நடைபெற்ற சமாதானக் கூட்டத்தில் பா.ஜ.க அமைச்சர் நமச்சிவாயம், “கூட்டணிக் கட்சிக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டத்தில் அமர்ந்தது தவறுதான். இனி அப்படி நடக்காது. அவர்களுக்கு சம்மன் கொடுப்போம்” என்று தெரிவித்திருந்தார். ஆனால், சட்டப்பேரவையின் கீழ்த்தளத்தில் சமாதானக் கூட்டம் நடந்துகொண்டிருக்கும்போதே, மேல் தளத்திலிருந்து பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள் ஒரு வீடியோவை வெளியிட்டு அதிரடி ட்விஸ்ட் கொடுத்தார்கள்.

என்.ஆர்.காங்கிரஸார் வெளியிட்ட வீடியோவுக்குப் போட்டியாக வெளியிடப்பட்ட அந்த வீடியோவில், “மறுதேர்தல் வைத்து என்.ஆர்.காங்கிரஸார் தங்களைச் சுயபரிசோதனை செய்துகொள்ளட்டும். யார் காலில், யார் விழுந்து வெற்றிபெற்றார்கள் என்று அப்போது தெரியும். பா.ஜ.க போட்டியிடும் தொகுதிகளில் முதல்வர் ரங்கசாமிதான் போட்டி வேட்பாளர்களை நிறுத்தினார். எம்.எல்.ஏ-க்களின் அன்றாட வேலைகளில் அவர் தலையிடுகிறார். நமக்குக் குறைந்தபட்ச மரியாதைகூட கொடுப்பதில்லை” என்று முதல்வர் ரங்கசாமியைக் காய்ச்சி எடுத்திருந்தனர். இது குறித்து நம்மிடம் பேசிய என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களில் ஒருவரும், அரசு கொறாடாவுமான ஏ.கே.டி.ஆறுமுகம், “சமாதானப் பேச்சு நடந்துகொண்டிருக்கும்போதே அவர்கள் அந்த வீடியோவை வெளியிட்டிருக்கிறார்கள். முதல்வர்தான் அது குறித்துப் பேச முடியும்” என்று முடித்துக்கொண்டார்.

இது ஒருபுறமிருக்க, மின்துறை தனியார்மயமாக்கலுக்கு எதிரான அந்த ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம், வேண்டுமென்றே தங்களுக்கு எதிராகத் தூண்டிவிடப்பட்டிருப்பதாகப் புலம்பிவருகிறது பா.ஜ.க. மேலும், இந்த விவகாரத்தில் அரசும், என்.ஆர்.காங்கிரஸும் தங்களை மட்டும் பலிகடாவாக முன்னிறுத்திவிட்டன என்று நினைக்கிறது பா.ஜ.க.  

“மேலிடத்தின் சிக்னல் இல்லாமல் பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள் இப்படிப் பேசிவிட முடியாது. நடப்பதையெல்லாம் வைத்துப் பார்த்தால் முதலமைச்சர் நாற்காலியைப் பறிக்கும் ‘ஆபரேஷன் தாமரைக்கு’ அவர்கள் நாள் குறித்துவிட்டதாகவே தெரிகிறது” என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.