Published:Updated:

புதுச்சேரி: `2 கிலோ சர்க்கரை, 10 கிலோ அரிசி’ - தீபாவளிப் பரிசை அறிவித்தார் முதல்வர் ரங்கசாமி!

தற்போது, தொகுப்பூதியமாக மாதம் ரூ.7,000 பெறும் தற்காலிக ஊழியர்களின்  சம்பளம் ரூ.15,000-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 

புதுச்சேரி சட்டப்பேரவையில் தனது அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் ரங்கசாமி, ``பட்ஜெட் கூட்டத்தொடரில், அரசுத் துறைகளில் குறைந்த சம்பளத்தில் பணியாற்றும் தற்காலிக ஊழியர்களின் சம்பளம் குறைந்தபட்சம் மாதம் ரூ.10,000-ஆக உயர்த்தப்படும் என அறிவித்திருந்தேன். அதன்படி `பாண்லே’ நிறுவனத்தில் பல ஆண்டுகளாகக் குறைந்த சம்பளத்தில் பணியாற்றியவர்களுக்குச் சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது தொகுப்பூதியமாக மாதம் ரூ.7,000 பெறும் தற்காலிக ஊழியர்களின் சம்பளம் ரூ.15,000-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஐந்து ஆண்டுகளுக்கும் மேல் பணி செய்து, நாள் ஒன்றுக்கு ரூ.176 சம்பளம் பெறும் தற்காலிக ஊழியர்களின் சம்பளம் ரூ.430-ஆக உயர்த்தப்படும். இதன் மூலம் அவர்களுக்கு மாதச் சம்பளம் ரூ.13 ஆயிரமாகக் கிடைக்கும்.

புதுச்சேரி அரசு
புதுச்சேரி அரசு

ஐந்து ஆண்டுகளுக்கும் குறைவாகப் பணி செய்து, நாள் ஒன்றுக்கு ரூ.176 சம்பளம் பெறும் தற்காலிக ஊழியர்கள் இனி ரூ.330 சம்பளம் பெறுவார்கள். இதன் மூலம் அவர்களின் மாதச் சம்பளம் ரூ.10,000-ஆக உயரும். இந்த உயர்த்தப்பட்ட சம்பளம், அவர்களுக்கு 1.11.2021 முதல் வழங்கப்படும். இதன் மூலம் தொகுப்பூதியம் பெறும் 18 ஊழியர்களும், தினக்கூலி பெறும் 247 ஊழியர்களும் பயன்பெறுவர். இதன் மூலம் `பாண்லே’ நிறுவனத்துக்கு ரூ.25 லட்சம் கூடுதல் செலவு ஏற்படும்” என முதல்வர் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசியவர், ``தினக்கூலி அடிப்படையில் பணியாற்றிய தற்காலிக ஊழியர்களுக்கு நவம்பர் மாதம் முதல் மாதம் ஒரு நாள் ஊதியத்துடன்கூடிய தற்காலிக விடுப்பு வழங்கப்படும். மரணமடைந்த ஊழியர்களின் குடும்பநலனைக் கருத்தில்கொண்டு அவர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் முதற்கட்டமாக ஆறு பேருக்கு பணி வழங்கப்படும். மீதமுள்ளவர்கள் வாரிசு சான்றிதழ் அளித்த பிறகு அவர்களுக்கும் பணி வழங்கப்படும். `பாண்லே’ நிறுவனத்துக்கு 2020-21-ம் ஆண்டில் பால் வழங்கிய 101 கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கங்களுக்கு அவர்கள் வழங்கிய பாலுக்கான மொத்த மதிப்புக்கு, ஒரு ரூபாய்க்கு 5 பைசா வீதம் விலை வித்தியாசத் தொகை தீபாவளிப் பண்டிகைக்கு முன்னர் வழங்கப்படும். இதனால் பாண்லே நிறுவனத்துக்குக் கூடுதலாக ரூ.3.45 கோடி செலவாகும். கிராமப்புறங்களில் உள்ள 7,100 பால் உற்பத்தியாளர்கள் இதன் மூலம் பயன் பெறுவர். `பாண்லே’ முகவர்களுக்கு தீபாவளி பண்டிகை முன்பணமாக ரூ.12 ஆயிரம் வீதம் 100 பேருக்கு வழங்கப்படும். மேலும் 2020-21-ல் விற்பனை செய்த பாலுக்கு சிறப்பு விற்பனைத் தள்ளுபடித் தொகையாக லிட்டருக்கு 2 பைசா வீதம் ரூ.5.4 லட்சம் தீபாவளிக்கு முன்னதாக முகவர்களுக்கு வழங்கப்படும். இதனால் 215 முகவர்கள் பயன்பெறுவர். புதுவையில் நாள் ஒன்றுக்கு 65,000 லிட்டர் பால் உற்பத்தியாகிறது. ஆனால் ஒரு லட்சம் லிட்டர் தேவைப்படுகிறது. மீதமுள்ள 35 ஆயிரம் லிட்டர் பாலை கர்நாடக மாநிலத்திலிருந்துதான் நாம் பெறுகிறோம். பாண்லே பால் மற்றும் பால் உற்பத்திப் பொருள்களை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

அரசில் காலியாக உள்ள 10,000 பணியிடங்கள் நிச்சயம் நிரப்பப்படும். காவல்துறையில் காவலர் பணியிடங்களுக்குத் தேர்வு நடைபெற உள்ளது. 300 ஊர்க்காவல் படை வீரர்களை பணியமர்த்தவிருக்கிறோம். கூடுதலாக இரண்டு பட்டாலியன் ஐ.ஆர்.பி.என் படை அமைக்கவும் அனுமதி கேட்டிருக்கிறோம். தீபாவளிப் பண்டிகைக்கு அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் 2 கிலோ சர்க்கரை, 10 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும். மேலும், ஆதிதிராவிடர்களுக்கு 18 வயதைக் கடந்தவர்களுக்கு ஒரு செட் துணிக்கு தலா ரூ.500 வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு