Published:Updated:

முதல்வர் பெயரில் கொலை மிரட்டல்; அமைதிகாக்கும் காவல்துறை! - அதிர்ச்சியில் புதுச்சேரி மக்கள்

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி
News
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

``முதல்வரின் பேச்சை சமூக ஊடகங்களில் பரப்பியவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று எஸ்.எஸ்.பி லோகேஸ்வரனைச் சந்தித்து மனு அளித்த என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள், அவர் பெயரைக் கெடுக்கும்விதமாக கொலை மிரட்டல் விடுத்தவர் குறித்து வாய் திறக்காதது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது.

தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் மிகச்சிறிய மாநிலம் புதுச்சேரி. அதன் காரணமாகவே முதல்வர் தொடங்கி அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் என மக்கள் பிரதிநிதிகளும், அனைத்து அரசியல் தலைவர்களும் மக்களுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பார்கள். அன்றாடம் தொகுதி மக்களைச் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டு நிவர்த்தி செய்வார்கள். ஒவ்வொரு தொகுதியும் மிகக் குறைந்த ஓட்டு எண்ணிக்கைகொண்டது என்பதால் தொகுதியிலுள்ள அனைத்துக் குடும்பங்களையும் மக்கள் பிரதிநிதிகள் அறிந்துவைத்திருப்பார்கள். முதலமைச்சர், அமைச்சர்களை பொதுமக்கள் எளிதாக சட்டசபையில் சந்திக்க முடியும்.

புதுச்சேரி அரசு
புதுச்சேரி அரசு

அந்த வகையில் முதலமைச்சர் ரங்கசாமியும் மிகவும் எளிமையான முதல்வர் என்று பெயர் வாங்கியவர். அவரின் வீடு, சட்டமன்ற அலுவலகம், நண்பரின் கடிகாரக் கடை என அவர் செல்லும் இடங்களிலெல்லாம் மக்கள் சந்திப்பார்கள். சில நேரங்களில் தொகுதியைச் சேர்ந்தவர்கள் கோரிக்கைகளுக்காக ரங்கசாமியிடம் வாக்குவாதத்தில்கூட ஈடுபடுவதுண்டு. அப்படியான நேரங்களில் அவர்களிடம் எந்தவிக்த கோபமும் கொள்ளாமல் சமாதானப்படுத்தி அனுப்பிவைப்பார். பல நேரங்களில் தன்னிடம் கோபித்துக்கொண்டு சென்றவர்களைக்கூட தாமாகவே அழைத்து பேசுவார். கூடுமானவரை தனது செல்போனுக்கு வரும் அழைப்புகளை எடுத்து பதிலளிப்பது அவர் வழக்கம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

கடந்த 12 ஆண்டுகளாக அமைச்சராகவும், முதலமைச்சராகவும் இருந்தவர் என்பதால் மாநிலத்தின் அனைத்துத் தொகுதிகளைச் சேர்ந்தவர்களும் அவரை வந்து சந்தித்து, தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்துகொண்டவர்களாகவே இருப்பார்கள். கடந்த சில தினங்களுக்கு முன்பு முதல்வர் ரங்கசாமியை செல்போனில் நேரடியாகத் தொடர்புகொண்ட ஒருவர், தான் காரைக்காலைச் சேர்ந்தவன் என்று அறிமுகப்படுத்திக்கொண்டு அவரை நலம் விசாரித்தார். தொடர்ந்து `மழை நிவாணமாக அறிவித்த ரூ.5,000/- எப்போது ஐயா கிடைக்கும்?’ என்று கேட்டார். அதற்கு ரங்கசாமி, `எனக்கு மேலேயும் கீழேயும் மந்திரிகள் இருப்பதாகவும், நான் மட்டும் ராஜா இல்லை’ என்றும் பதிலளித்தார்.

ரங்கசாமி
ரங்கசாமி
எம். விஜயகுமார்

அந்த உரையாடலில் முதல்வர் ரங்கசாமி கோபமாகப் பேசவில்லை. அதேபோல அவரிடம் பேசிய நபரும், முதல்வரை `ஐயா’ என்றும், பதில் கூறியபோது `சரிங்க ஐயா’ என்றும் மிகவும் பணிவாகவே பேசினார். அந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அதைத் தொடர்ந்து, ``எனது உரையாடலில் மக்களுக்குத் தெரியாது ஒன்றுமில்லை. தற்போதிருக்கும் நிர்வாக அமைப்பு காரணமாக திட்டங்களும், திட்டங்களில் முடிவெடுப்பதும், செயல்படுத்துவதும் தாமதமாகிறது” என்று ஊடகங்களுக்கும் விளக்களித்திருக்கிறார் முதல்வர் ரங்கசாமி.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்நிலையில்தான் ரங்கசாமியிடம் பேசிய அந்த நபருக்கு சங்கர் என்பவர் கொலை மிரட்டல் விடுக்கும் ஆடியோ வைரலாகிவருகிறது. அந்த ஆடியோவில், தான் முதலமைச்சர் வீட்டிலிருந்து பேசுவதாகவும், சங்கர் என்றும் கூறுகிறார் அவர். ரங்கசாமியிடம் பேசிய நபர், தான் அந்த ஆடியோவைப் பரப்பவில்லை என்றும், தனக்கும் அதற்கும் சம்பந்தமில்லை எனவும் பணிந்து பேசியும், சங்கர் கடுமையான, தகாத வார்த்தைகளால் பேசுகிறார். ஒரு கட்டத்தில் `நீ என்ன எதிர்கட்சிக்காரனா?’ எனக் கேட்கிறார்.

செல்போன் ஆடியோ
செல்போன் ஆடியோ

அவர் ரங்கசாமியின் அனுதாபி என்று கூறுகிறார். இருப்பினும் சங்கர், `நீ இல்லாவிட்டால், போனில் பேசியதைப் பரப்பியவர்கள் யாராக இருந்தாலும் அவர்களிடம் சொல்லு, கிழித்துப் போட்டுவிடுவேன். தொலைத்துக் கட்டிவிடுவோம், செத்துடுவீங்க’ என மிரட்டுகிறார். இந்த ஆடியோ புதுவை மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சரிடம் மழை நிவாரணம் கேட்டதற்கு, கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பது புதுச்சேரிக்கு புதிது என்பதால் பீதியில் உறைந்திருக்கின்றனர் மக்கள்.

``முதல்வரின் பேச்சை சமூக ஊடகங்களில் பரப்பியவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று சீனியர் எஸ்.பி லோகேஸ்வரனைச் சந்தித்து மனு அளித்த என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள், முதல்வர் பெயரைக் கெடுக்கும்விதமாக கொலை மிரட்டல் விடுத்தவர் குறித்து வாய் திறக்காதது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது.

அதேசமயம், ``முதல்வர் வீட்டிலிருந்து பேசுகிறேன் என்று பகிரங்கமாகக் கொலை மிரட்டல் விடுத்த அந்த சங்கர் என்பவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது?” என்று கேள்வி எழுப்பும் எதிர்க்கட்சியினர், கொலை மிரட்டல் விடுத்த அந்த சங்கர் யார், முதல்வரின் செல்போனில் பேசிய காரைக்கால் நபரின் செல்போன் எண் சங்கருக்கு எப்படிக் கிடைத்தது, அவரை இப்படிப் பேச அனுமதித்தது யார் என்றும் கேள்விகளை எழுப்புகின்றன எதிர்க்கட்சிகள்.