Published:Updated:

விஸ்வரூபம் எடுக்கும் சூதாட்ட விடுதி விவகாரம்! - முட்டிக்கொள்ளும் கிரண் பேடி, நாராயணசாமி

கிரண்பேடி, நாராயணசாமி
கிரண்பேடி, நாராயணசாமி

``பா.ஜ.க ஆட்சி நடக்கும் கோவாவில், சூதாட்ட விடுதிகளை கிரண் பேடி மூடச் சொல்வாரா? புதுச்சேரியில் சூதாட்ட விடுதிகளைத் திறக்கக்கூடாது என்று கூறுவதற்கு அவர் யார்?” என்று கேள்வி எழுப்பியிருக்கிறார், முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரியில் சூதாட்ட விடுதிகளைக் கொண்டுவரும் விவகாரத்தில், கவர்னர் கிரண்பேடிக்கும் முதல்வர் நாராயணசாமிக்குமிடையே கடும் மோதல் நிகழ்ந்துவருகிறது. இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் நாராயணசாமி, ``அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள துறைகளை ஆய்வுசெய்து ஓர் அறிக்கை வெளியிட்டிருக்கிறது மத்திய அரசின் நிர்வாக சீர்திருத்தத்துறை. அதில் சிறந்த நிர்வாகம் செய்யும் யூனியன் பிரதேசங்களின் வரிசையில், புதுச்சேரி முதலிடம் பெற்றிருக்கிறது.

Representational Image
Representational Image

அதுமட்டுமல்லாமல் மருத்துவம், மனிதவள மேம்பாடு, சட்டம் ஒழுங்கு மற்றும் நீதி நிர்வாகம் உள்ளிட்ட துறைகளிலும் முதலிடத்தைப் பிடித்துள்ளது. விவசாயத்தில் 2-வது இடத்தைப் பிடித்திருக்கிறது. புதுச்சேரியில் மூன்றரை ஆண்கால காங்கிரஸ் ஆட்சியில், மத்திய பா.ஜ.க அரசிடமிருந்து எந்த நிதியுதவியும் கிடைக்கவில்லை. அதனால் மாநிலத்தின் வருவாயைக் கொண்டே வளர்ச்சியைத் தேடவேண்டியிருக்கிறது.

மத்திய அரசின் உதவி இல்லாததுடன், அன்றாடம் அவர்கள் கொடுக்கும் தொல்லைகளையும் தாண்டி புதுச்சேரி 5 விருதுகளைப் பெற்றிருப்பது இமாலய சாதனை. இந்தியாவில் உள்ள எந்த மாநிலமும் இப்படியான வளர்ச்சியைப் பெறவில்லை. அதிகாரம் இல்லாதபோது அரசைக் குறைகூறுவதும், மாநிலத்தின் வளர்ச்சியையும் நலத்திட்டங்களையும் தடுத்துநிறுத்துவதுடன், அதிகாரிகளை கவர்னர் மாளிகைக்கு அழைத்து மிரட்டுவதைத் தவிர வேறு எதையும் கவர்னர் செய்யவில்லை . புதுச்சேரியின் வளர்ச்சியை மத்திய அரசு பாராட்டும்போது, கவர்னரும் பாராட்ட வேண்டும். ஆனால், காழ்ப்புணர்ச்சி காரணமாக தலைமைச் செயலரின் நிர்வாகத்தால்தான் இந்த விருதுகள் கிடைத்திருப்பதாக ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார், கிரண் பேடி.

முதல்வர் நாராயணசாமி
முதல்வர் நாராயணசாமி

மாநில அரசின் முன்னேற்றத்தைத் தாங்கிக்கொள்ள முடியாதவராகவும், மனசாட்சி இல்லாதவராகவும் இருக்கிறார் கவர்னர் கிரண் பேடி. யார் நன்மை செய்வார்கள் என்பது புதுச்சேரி மக்களுக்கு நன்றாகத் தெரியும். நலத்திட்ட கோப்புகளை கவர்னர் கிரண் பேடி எந்த வகையில் நிறுத்தினாலும், மக்களுக்கு எப்படி நன்மை செய்ய வேண்டுமென்று எங்களுக்குத் தெரியும்” என்று கூறியவரிடம், கேசினோ அனுமதிக்கான கோப்புகளை கவர்னருக்கு அனுப்பியிருக்கிறீர்களா? சூதாட்ட விடுதிகளைத் திறப்பதுதான் மாநிலத்தின் வளர்ச்சியா என்று அவர் கேள்வி எழுப்பியிருப்பதோடு, அதை மக்கள் விரும்பவில்லை என்றும் கருத்து தெரிவித்திருக்கிறாரே? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

`சூதாட்டக் கூடாரங்களை திறப்பதுதான் வளர்ச்சியா?'- நாராயணசாமி புகாருக்கு கிரண் பேடி கேள்வி!

அதற்குப் பதிலளித்த நாராயணசாமி, ``பா.ஜ.க ஆட்சி நடக்கும் கோவாவில், சூதாட்ட விடுதிகளை கவர்னர் மூடச் சொல்வாரா? புதுச்சேரியில் சூதாட்ட விடுதிகளைத் திறக்கக்கூடாது என்று கூறுவதற்கு அவர் யார்? அதுகுறித்து சட்டமன்றம் முடிவுசெய்யும். புதுச்சேரி, சுற்றுலா மாநிலம். சுற்றுலாவைப் பெருக்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும், சுற்றுலாப் பயணிகளின் தேவைகளையும் அரசு செய்துதரும். புதுச்சேரி மாநிலத்தின் வருவாயைப் பெருக்க இதுவரை அவர் என்ன செய்திருக்கிறார் ? புதுச்சேரியின் வளர்ச்சியைத் தடுத்த பெருமை மட்டுமே கவர்னர் கிரண் பேடிக்கு இருக்கிறது. இப்படிப்பட்ட கவர்னர் புதுச்சேரிக்குத் தேவையா ?” என்றார்.

கிரண்பேடி
கிரண்பேடி

அவருக்கு பதிலடியாக, ``மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். வளர்ச்சி என்ற பெயரில் சூதாட்டம் கொண்டுவருவதை மக்கள் விரும்பவில்லை. கடினமாக உழைத்துச் சம்பாதித்த பணத்தை அதன் மூலம் மக்கள் இழந்துவிடுவர். தங்கள் பிள்ளைகள் கெட்டுப்போவதை ஒருபோதும் பெற்றோர் விரும்ப மாட்டார்கள். சூதாட்ட விடுதிகளுக்கு அனுமதி கொடுத்தால், அடுத்த சில ஆண்டுகளிலேயே புதுச்சேரியின் சமூகம் மற்றும் ஆன்மிக எண்ணங்கள் மாறிவிடும். சூதாட்ட விடுதி என்பது சிலரின் சுய நலனுக்கு மட்டுமே பயனளிக்கும்.

அதேபோல, மதுபானக் கூடங்களைத் திறந்துவிடுவது என்ற அமைச்சரவையின் முடிவு எப்படி இருக்கும் என்பதை நீங்களே கற்பனை செய்துகொள்ளுங்கள். படிக்கும் மாணவர்களும் தாய்மார்களின் கணவர்களும், இளைஞர்களும் மது குடித்தும் சூதாட்டம் ஆடியும் சீரழிந்துவிடுவார்கள். இதுபோன்ற சமூகக் கேடு விளைவிக்கும் ஓநாய்களை புதுச்சேரியை விட்டு விலக்கி வைத்திருக்கிறோம். எந்த நேரத்திலும் வளர்ச்சி என்ற பெயரில் அந்த ஓநாய்கள் உள்ளே நுழையப்பார்க்கும்” என்று வாட்ஸ்-அப்பில் கொந்தளித்திருக்கிறார் கவர்னர் கிரண் பேடி.

அடுத்த கட்டுரைக்கு