Published:Updated:

புதுச்சேரி: `பீரங்கியே வந்தாலும் அஞ்ச மாட்டோம்!’ - கிரண் பேடிக்கு எதிராகக் கொதித்த நாராயணசாமி

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி

``உயிர்த் தியாகம் செய்தாவது உரிமைகளைக் காப்போம். அதற்காக நான்கு நாள்கள் அல்ல, எத்தனை நாள்கள் வேண்டுமானாலும் போராடுவதற்குத் தயாராக இருக்கிறேன்” என்று கவர்னர் கிரண் பேடிக்கு எதிரான போராட்டத்தில் பேசியிருக்கிறார் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி.

`புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு நெருக்கடி கொடுப்பதுடன், மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றுவதில் தடையாக இருக்கிறார்' என்று கிரண் பேடி மீது குற்றம் சுமத்தியிருக்கும் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் அவருக்கு எதிரான தொடர் போராட்டத்தை இன்று காலை தொடங்கியிருக்கின்றன. புதுச்சேரி மறைமலை அடிகள் சாலையில், அண்ணா சிலை சந்திப்பு அருகில் நடைபெற்றுவரும் போராட்டத்தில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் நாராயணசாமி, ``மத்திய அரசு புதுச்சேரியைப் புறக்கணிக்கிறது என்றும், கவர்னர் கிரண் பேடி மாநில வளர்ச்சியைத் தடுக்கிறார் என்றும் கடந்த நான்கரை ஆண்டுகளாகப் பல்வேறு போராட்டங்களைத் தொடர்ந்து நடத்திவருகிறோம்.

கிரண் பேடிக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம்
கிரண் பேடிக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம்

மத்திய பா.ஜ.க அரசு தமிழகம் மற்றும் புதுச்சேரி மக்கள் ஏற்காத பல திட்டங்களையும் நம் மீது திணித்துவருகின்றது. மாற்றாந்தாய் மனப்பான்மையோடு செயல்படும் மத்திய அரசு, நாம் வைக்கும் எந்தக் கோரிக்கையையும் செவிகொடுத்து கேட்பதில்லை. புதுச்சேரிக்குத் தர வேண்டிய நிதி மானியங்களைத் தருவதில்லை. தற்போது நமது போராட்டத்தைத் தடுப்பதற்காக ராணுவத்தைக் கொண்டுவந்து மிரட்டுகின்றனர். நம் நாட்டில் கவர்னர், துணைநிலை ஆளுநருக்கு எதிராக முதலமைச்சர்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் போராடியதாக சரித்திரமே கிடையாது. ஆனால், அப்படியான சூழலை உருவாக்கியவர் கிரண் பேடி.

மத்தியப் படை குவிப்பு; சீல் வைக்கப்பட்ட வீதிகள் - மினி காஷ்மீராக மாறிய புதுச்சேரி! - என்ன நடக்கிறது?

2019-ம் ஆண்டு கவர்னர் மாளிகை முன்பு நான் உள்ளிட்ட அமைச்சர்கள் போராட்டம் நடத்தியபோது, மறுநாளே பின்புறம் வழியாக டெல்லிக்கு ஓடியவர்தான் கிரண் பேடி. அதோடு மட்டுமல்லாமல் டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சரைச் சந்தித்து என்னையும், அமைச்சர்களையும் கைது செய்ய வேண்டும் என்றும் போராட்டத்தைத் தடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தவர்தான் கிரண் பேடி. ஆனால், அப்போது மத்திய உள்துறை அமைச்சராக இருந்த ராஜ்நாத் சிங், `ஆட்சியாளர்கள் போராட்டம் நடத்தும்போது உங்களுக்கு டெல்லியில் என்ன வேலை?’ என்று கேட்டு அவரைத் திருப்பி அனுப்பினார்.

முதல்வர் நாராயணசாமி
முதல்வர் நாராயணசாமி

பின்னர் புதுச்சேரிக்கு திரும்பி வந்த கிரண் பேடி எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதுடன், கோரிக்கைகளை ஏற்பதாக உறுதிமொழி அளித்து போராட்டத்தைக் கைவிடச் செய்தார். ஆனால் நான்கு மணி நேரப் பேச்சுவார்த்தையின்போது ஒப்புக்கொண்டதில் ஒன்றைக்கூட கிரண் பேடி நிறைவேற்றவில்லை. மத்திய அரசிடம் போராடிப் பெற்ற நிதி அதிகாரத்தைக்கூட அவர் வழங்கவில்லை. அமைச்சரவையில் முடிவெடுத்து கோப்புகளை அனுப்பினாலும், அவற்றைக் கண்டுகொள்வதில்லை. புதுச்சேரி மக்களின் உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாக்கும் பொறுப்பும் கடமையும் நமக்கு இருக்கிறது.

உயிர்த் தியாகம் செய்தாவது உரிமைகளைக் காப்போம். அதற்காக நான்கு நாள்கள் அல்ல, எத்தனை நாள்கள் வேண்டுமானாலும் போராடுவதற்குத் தயாராக இருக்கிறேன். புதுச்சேரியைப் படிப்படியாக தமிழகத்துடன் இணைப்பதற்காக மோடியும் பேடியும் பல்வேறு சதிகளைச் செய்கின்றனர். கவர்னரின் நடவடிக்கைகளுக்கு பிரதமர் மோடி உறுதுணையாக இருக்கிறார். தற்போது மோடிக்கு ஒரு கோரிக்கை விடுக்கிறேன்.

Vikatan

கவர்னர் கிரண் பேடியை உடனடியாகத் திரும்பப் பெறுங்கள். அவரை உடனடியாகப் புதுச்சேரியைவிட்டு வெளியேற்றுங்கள். புதுவையின் உரிமைகளைப் பாதுகாப்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். அதைத் தடுப்பதற்கு பீரங்கியே வந்தாலும் நாங்கள் அஞ்ச மாட்டோம். புதுவையைக் காப்பாற்றுவதற்காகவும், மீட்பதற்காகவும் எப்படிப்பட்ட தியாகத்தையும் செய்யத் தயாராவோம்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு