Published:Updated:

`55 சதவிகித மக்களைப் பற்றி பா.ஜ.க கவலைப்படவில்லை!' - கொதிக்கும் நாராயணசாமி #CAA

`45 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்ற மத்திய பா.ஜ.க அரசு, 55 சதவிகித மக்களை மதிக்காமலேயே அந்தச் சட்டத்தை நிறைவேற்றியிருப்பதால் நாடே பற்றி எரிகிறது.'

நாராயணசாமி
நாராயணசாமி

குடியுரிமை சட்டத்துக்கு எதிராக புதுச்சேரியில் இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக முதல்வர் நாராயணசாமி கலந்துகொண்டார். பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், ``மோடி ஆட்சியில் சிறுபான்மையின மக்கள் தாக்கப்படுகிறார்கள், படுகொலை செய்யப்படுகிறார்கள். அவர்களுக்குப் பாதுகாப்பு இல்லை. அச்சத்தோடு வாழ்கிறார்கள். வியாபாரிகள் கடுமையாகப் பாதிக்கப்படுகிறார்கள்.

எங்கள் உயிரே போனாலும், ஆட்சியே கவிழ்ந்தாலும் இச்சட்டத்தை புதுச்சேரியில் நிறைவேற்ற மாட்டோம். புதுச்சேரியில் மதச்சார்பற்ற ஆட்சி நடைபெற்று வருகிறது. சிறுபான்மை சமுதாய மக்களுக்கு இடையூறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை எதிர்க்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.
நாராயணசாமி

கடந்த 5 ஆண்டுகளாக இந்த வேதனையை அனுபவித்து வருகிறோம். தற்போது அவசர அவசரமாக இரவு 12 மணிக்கு சுதந்திரத்தைப் பறிக்கிற அளவில் மோடியும் அமித் ஷாவும் குடியுரிமை சட்டத்தை நிறைவேற்றியிருக்கின்றனர். பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவில் தஞ்சமடைந்திருக்கும் இந்துக்கள், கிறிஸ்துவர்கள், பார்சீக்கள், ஜைன மதத்தவர், சீக்கியர்களுக்கு மட்டும் குடியுரிமை கொடுக்கும் வகையில் அமைந்திருக்கிறது அந்தச் சட்டம்.

குடியுரிமை சட்டத்திருத்தம்; வலுக்கும் போராட்டங்கள்.. வெவ்வேறு காரணங்கள்! என்ன நடக்கிறது? #CAAProtest

நாட்டின் 45 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்ற மத்திய பா.ஜ.க அரசு, 55 சதவிகித மக்களை மதிக்காமலேயே அந்தச் சட்டத்தை நிறைவேற்றியிருப்பதால் நாடே பற்றி எரிகிறது. அஸ்ஸாமில் ஆரம்பித்த கலவரம், மேகாலயா, திரிபுரா எனத் தொடர்கிறது. வாகனங்கள் எரிக்கப்படுகின்றன. மாணவர்களும் பொதுமக்களும் தொடர் போராட்டங்களை முன்னெடுக்கின்றனர். வடகிழக்கு மாநிலங்களில் அமைதியாக வாழ்ந்த மக்கள் இப்போது வாழ முடியவில்லை. மோடி-அமித்ஷா அரசு இந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தத் துடிக்கிறார்கள்.

அமித்ஷா - மோடி
அமித்ஷா - மோடி

இஸ்லாமிய மக்களைத் திட்டமிட்டு பழிவாங்க வேண்டும் என்ற நோக்கில் இந்தச் சட்டத்தை நிறைவேற்றியுள்ளனர். எங்கள் உயிரே போனாலும், ஆட்சியே கவிழ்ந்தாலும் இச்சட்டத்தை புதுச்சேரியில் நிறைவேற்ற மாட்டோம். புதுச்சேரியில் மதச்சார்பற்ற ஆட்சி நடைபெற்று வருகிறது. சிறுபான்மை சமுதாய மக்களுக்கு இடையூறு செய்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்களை எதிர்க்க நாங்கள் தயாராக இருக்கிறோம். எங்களுக்கு ஆட்சி முக்கியமல்ல, அதிகாரம் முக்கியமல்ல. மோடியும் அமித்ஷாவும் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெறும்வரை எங்களது போராட்டம் தொடரும். இந்த நாட்டை சீர்குலைக்க வேண்டும், துண்டாட வேண்டும் என்பதில் மத்திய பா.ஜ.க அரசு உறுதியாக இருக்கிறது. நாட்டின் சுதந்திரதுக்கு ரத்தம் சிந்தியவர்கள் இஸ்லாமியர்கள். நாட்டின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்துக்கும் பாடுபட்டவர்கள் இஸ்லாமிய சமுதாயத்தினர். அவர்களை பழிவாங்க நினைக்கும் பா.ஜ.க ஆட்சியின் எந்த நடவடிக்கையையும் நாங்கள் முழுமையாக எதிர்ப்போம்” என்றார்.