Published:Updated:

`தொற்றுநோய் தடுப்புச் சட்டம்; ஓராண்டு சிறைத்தண்டனை!'-கொரோனா விவகாரத்தில் கொதித்த முதல்வர் நாராயணசாமி

நாராயணசாமி
நாராயணசாமி

”கொரோனா நோய் தடுப்பு விவகாரத்தில் அரசின் உத்தரவுகளை மீறுபவர்கள் கைது செய்யப்படுவார்கள்” என்று அதிரடியாகக் கூறியிருக்கிறார் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி.

கொரோனா நோய் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாக புதுச்சேரியில் மார்ச் 31-ம் தேதி வரை 144 தடை மற்றும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், பொதுமக்கள் எப்போதும்போல தங்களது அன்றாட பணிகளை மேற்கொண்டும், கூட்டமாக நின்று பேசிக்கொண்டும், இருசக்கர வாகனங்களில் வலம் வந்துகொண்டும் இருக்கின்றனர். இந்நிலையில் இன்று கொரோனா நோய் தடுப்புப் பணிகள் குறித்து முதல்வர் நாராயணசாமி தலைமையில் எம்.பி-க்கள், எம்.எல்.ஏ-க்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

செய்தியாளர்கள் சந்திப்பில் முதல்வர் நாராயணசாமி
செய்தியாளர்கள் சந்திப்பில் முதல்வர் நாராயணசாமி

கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் நாராயணசாமி, ``கொரோனா நோய் தடுப்பதற்கான அரசின் நடவடிக்கைகளுக்கு எம்,எல்.ஏ-க்களும் அமைச்சர்களும் முழு ஆதரவைக் கொடுத்திருக்கின்றனர்.

கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகையும் உலுக்கும் நோயாக இருக்கிறது. இத்தாலியில் நேற்று முன்தினம் 900 பேரும், நேற்று 700 பேரும் உயிரிழந்திருக்கின்றனர். ராணுவத்தை வைத்து வீட்டிற்குள் இருந்து மக்களை வெளியே வராமல் தடுத்து நிறுத்தியதால்தான் சீனா கொரோனா நோயின் தாக்கத்தில் இருந்து தப்பித்தது.

நாராயணசாமி
நாராயணசாமி

தற்போது இத்ததாலி, பிரான்ஸ், இங்கிலாந்து, தென்கொரியா, அபுதாபி, துபாய் சவுதி அரேபியா, சிங்கப்பூர் மலேசியா உள்ளிட்ட நாடுகள் கொரோனாவால் பெரியளவில் பாதிக்கப்பட்டிருக்கின்றன. இந்த நாடுகளுக்கும் இந்தியாவிற்கும் தொடர்பிருக்கிறது. எனவே கொரோனா குறித்த விழிப்பு உணர்வு புதுச்சேரிக்கு தேவை.

மார்ச் 31-ம் தேதி வரை வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம் என்ற அறிவுறுத்தலை பொருட்படுத்தாமல் மக்கள் வெளியே வந்து கொண்டுள்ளனர். புதுச்சேரி மக்கள் உயிரைப்பற்றி கவலைப்படவில்லை. புதுச்சேரி சுற்றுலாப் பயணிகள் அதிகம் வரும் பகுதி.

இருசக்கர வாகன ஓட்டிகள்
இருசக்கர வாகன ஓட்டிகள்

இதைப் பற்றி புரிந்துகொள்ளாமல் மக்கள் நகரத்திற்குள் வருவதுடன், அவர்களைத் தடுக்கும் காவல்துறையினரோடு சண்டை போடுவதுமாக உள்ளனர். முக்கியமான காரணத்தைத் தவிர யாரும் வெளியே வரக் கூடாது. தனிமைப்படுத்திக் கொள்வதைத் தவிர கொரோனாவுக்கு வேறு மருந்து இல்லை.

அத்தியாவசிய பொருட்களையும் 5 பேருக்கு மேல் வாங்கக் கூடாது. வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் புதுச்சேரியின் எல்லைப் பகுதிகளான கன்னியகோவில், மதகடிப்பட்டு, வில்லியனூர் பகுதி வழியாக புதுச்சேரிக்குள் வருகின்றனர். தடுக்கும் போலீஸாருடன் சண்டை போடுகின்றனர். தடுப்பதற்கான காரணத்தை கூறியும் அவர்கள் ஏற்பதாக இல்லை. புதுச்சேரியில் பேரிடர் சட்டத்தையும், தொற்று நோய் சட்டத்தையும் அமல்படுத்தியிருக்கிறோம். வீட்டைவிட்டு வெளியேறி அந்தச் சட்டங்களை மீறுபவர்களைக் கைது செய்வோம். அத்துடன் அவர்களுக்கு ஒரு வருட தண்டனை கிடைக்கும் என்று சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, மக்கள் வீட்டைவிட்டு வெளியே வராமல் வரும் 31-ம் தேதி வரை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.

சீல் வைக்கப்பட்ட புதுச்சேரி எல்லைகள்
சீல் வைக்கப்பட்ட புதுச்சேரி எல்லைகள்

புதுச்சேரி மக்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கை எப்படிக் கடைப்பிடித்து, அமைதி காத்தார்களோ அதேபோல் வீட்டைவிட்டு வெளியே வராமல் வரும் 31-ம் தேதி வரை இருக்க வேண்டும். தேவைப்பட்டால் வெளிமாநிலத்தில் இருந்து துணை ராணுவத்தை கொண்டுவந்து மக்கள் வெளியே வருவதைத் தடுத்து நிறுத்துவோம். அரசின் உத்தரவை மீறுபவர்களுக்கு ஓராண்டு தண்டனை. அத்தியாவசியமான மருத்துவம், காவல்துறை, உள்ளாட்சித்துறை, மின்சாரம், பொதுப்பணித்துறை, தீ அணைப்புத்துறை தவிர பிற துறைகள் அனைத்தும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கான முடிவுகளைத் துறைத்தலைவரே எடுப்பார். 4 நாள்களுக்கு தேவையான மளிகை உள்ளிட்ட பொருள்களை இன்றே முழுமையாக வாங்கி வைத்து கொள்ள வேண்டும். நாளை 25-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை அனைத்துக் கடைகளும் மூடப்பட்டு இருக்கும். மீறி வெளியே வருபவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள்.

அடுத்த கட்டுரைக்கு