பிரீமியம் ஸ்டோரி
புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமிக்கும் ஆளுநர் கிரண் பேடிக்கும் ஏழாம் பொருத்தம். இதனால், கடந்த நான்கு வருடங்களாக புதுச்சேரியில் மக்களுக்கு உருப்படியாக எதுவும் நடக்கவில்லை. இந்தக் கடுப்பில் மத்திய அரசுக்கு ஒத்துழைக்காமல் வறுத்தெடுத்துவந்தார் நாராயணசாமி. இந்த நிலையில், கொரோனா வைரஸ் பரவலுக்குப் பிறகு மத்திய அரசு சொல்வதற்கெல்லாம் தலையாட்டிவருகிறார் நாராயணசாமி. ஏன் இந்த மாற்றம்?

டெல்லி அரசியலில் கடந்த 30 ஆண்டு களுக்கும்மேல் கோலோச்சிய நாராயணசாமி, 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலையடுத்து மாநில அரசியலுக்கு வந்தார். 2016-ம் ஆண்டு புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்ற நிலையில், புதுச்சேரியின் துணைநிலை ஆளுநராக கிரண் பேடி நியமிக்கப்பட்டார். தொடர்ந்து தேர்தலில் போட்டியிடாமலேயே முதல்வர் ஆனார் நாராயணசாமி. ஆனால், மாநில அரசின் அன்றாட நிகழ்வுகளில் கிரண் பேடி தலையிட்டதால் இருவரும் எதிரும் புதிருமாக மோதிக்கொண்டனர்.

நாராயணசாமி
நாராயணசாமி

இதனால் கிரண் பேடியை மட்டுமன்றி, மத்திய அரசையும் பிரதமர் மோடியின் செயல்பாடுகளையும் வறுத்தெடுத்தார் முதல்வர். காரைக்காலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கடுமையாக எதிர்த்ததுடன், அதற்கு எதிராக சட்டப்பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்றி னார். குடியுரிமைச் சட்டத்திருத்தம் மற்றும் குடிமக்கள் பதிவேடு சட்டங்களையும் அமல்படுத்த முடியாது என அதிரடிகாட்டினார்.

ஆனால், ‘நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப் படும் சட்டம் புதுச்சேரிக்கும் பொருந்தும். இந்த விவகாரத்தில் யூனியன் பிரதேசமான புதுச்சேரி கேள்வி எழுப்ப முடியாது’ என எச்சரிக்கும் தொனியில் நாராயண சாமிக்குக் கடிதம் அனுப்பினார் கிரண் பேடி. அதையும் மீறி சட்டப் பேரவையில் தீர்மானத்தை நிறைவேற்றினார் சாமி. அத்துடன் நிற்கவில்லை அவர், ‘எங்கள் ஆட்சியை வேண்டுமானால் டிஸ்மிஸ் செய்துகொள்ளுங்கள்’ என்று பிரதமர் மோடிக்கும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் பகிரங்கமாக சவால்விட்டார்.

இப்படி இருந்த நாராயணசாமிதான், புதுச்சேரியில் ஏற்பட்ட கொரோனா பாதிப்புக்குப் பிறகு தலைகீழாக மாறிவிட்டார். மத்திய அரசு சொல்வதற்கெல்லாம் பவ்யமாக ஒத்துழைத்துவருகிறார். பிரதமர் மோடி, ‘கொரோனா தொற்றுக்கு எதிராகப் போராடி வரும் மருத்துவர்கள், ஊழியர்களுக்காக அனைவரும் கைதட்டுங்கள்’ என்று அழைப்பு விடுத்ததும், அதை அப்படியே ஏற்று தன் வீட்டின் மாடியில் நின்று கைதட்டினார் நாராயணசாமி. அதேபோல், ‘ஏப்ரல் 5-ம் தேதி இரவு 9 மணிக்கு மின்விளக்கை அணைத்து ஒன்பது நிமிடங்கள் விளக்கேற்றுங்கள்’ என்று மக்களுக்கு அறைகூவல் விடுத்தார் மோடி.

தலைகீழாக மாறிய நாராயணசாமி!

அப்போது, ‘மின்விளக்குகளை அணைத்து விட்டு டார்ச்லைட் அடிப்பது கொரோனாவுக்குத் தீர்வாகாது’ என ராகுல் காந்தியே காட்டமாக ட்வீட் செய்தார். ஆனால் நாராயணசாமியோ, “புதுச்சேரி மக்கள் அனைவரும் தங்களது வீடுகளில் 9 மணிக்கு மின்விளக்கை அணைத்து விட்டு தீபம் ஏற்றி ஒன்பது நிமிடங்கள் பிரார்த்தனை செய்ய வேண்டும். அப்படிச் செய்தால் நம் நாடு மட்டுமல்லாமல் உலகம் முழுக்க கொரோனா தொற்றுக்கு விடிவுகாலம் பிறக்கும்” என்று கூறியதுடன், தன் வீட்டு பால்கனியில் சரியாக 9 மணிக்கு மெழுகுவத்தி யுடன் நின்றார். இதைப் பார்த்து பா.ஜ.க-வினரே அசந்துபோனார்கள்.

“முதல்வர் நாராயணசாமியின் இந்த அதிரடி மாற்றங்களுக்கு என்ன காரணம்?” என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் சிலரிடம் பேசினோம்.

“கிரண் பேடி கொடுத்த தொல்லைகளால், புதுச்சேரியில் கடந்த நான்கு வருடங் களாக எந்த மக்கள் நலத் திட்டங்களை யும் செயல்படுத்த முடியவில்லை. தவிர, மாநில அரசிடம் நிதியும் இல்லை. மக்கள் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர்.

இந்தச் சூழலில்தான் கொரோனா தொற்றும் சேர்ந்துகொண்டது. புதுச்சேரியில் 20-க்கும் மேற்பட்ட வர்கள் மருத்துவமனை கண்காணிப்பில் இருக்கிறார்கள். கொரோனாவுக்கான உபகரணங்கள் வாங்குவதற்குக்கூட நிதி இல்லை. இப்படி நெருக்கடியான சூழலிலும் மத்திய அரசுடன் மோதல் போக்கைக் கடைப்பிடித்து, மக்களின் உயிருடன் விளையாட விரும்பவில்லை முதல்வர். அதனால், தனது ஆட்சியின் கடைசி வருடத்திலாவது மக்களுக்கு நல்ல விஷயங்களைச் செயல்படுத்தலாம் என மத்திய அரசு சொல்வதற்கெல்லாம் தலையாட்டி வருகிறார்” என்றார்கள்.

நாராயணசாமி -  கிரண் பேடி
நாராயணசாமி - கிரண் பேடி

முதல்வர் நாராயணசாமியிடம் பேசினோம். “பிரதமர் கேட்டுக்கொண்டதால் தேச ஒற்றுமையை நிலைநாட்ட விளக்கை ஏற்றினேன். இந்த விவகாரத்தில் நான் அரசியல் செய்ய விரும்பவில்லை. அதேசமயம், பிரதமர்மீது விமர்சனங்கள் இல்லாமல் இல்லை. கிராமப்புறத் தொழிலாளர்களும் விவசாயத் தொழிலாளர் களும் பசியால் வாடுகிறார்கள். ஆனால், பொருளாதார சரிவுகுறித்து பொருளாதார வல்லுநர்களிடம் கருத்து கேட்காமல், நடிகர்களிடமும் விளையாட்டு வீரர்களிடமும் கருத்து கேட்கிறார் பிரதமர். என்னைப் பொறுத்தவரை மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும்” என்று முடித்துக்கொண்டார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு