அலசல்
Published:Updated:

கிரண் பேடி விஷம் கொடுத்துக் கொன்றார்; தமிழிசை வெல்லம் கொடுத்துக் கொல்கிறார்!

நாராயணசாமி
பிரீமியம் ஸ்டோரி
News
நாராயணசாமி

- தடதடக்கும் நாராயணசாமி

தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி நடைபெற்றுவரும் புதுச்சேரியில், என்.ஆர்.காங்கிரஸுக்கும், பா.ஜ.க-வுக்குமான இடைவெளி அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. இந்த நிலையில், அரசுக்கும் ஆளுநருக்கும் எதிராக அன்றாடம் சாட்டையைச் சுழற்றிவரும் புதுச்சேரியின் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமியை அவரது இல்லத்தில் சந்தித்தோம்.

‘‘என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க-வின் ஒன்றே முக்கால் வருடக் கூட்டணி ஆட்சியில் எப்படி இருக்கிறது புதுச்சேரி?’’

‘‘மக்களுக்குக் கொடுத்த தேர்தல் வாக்குறுதியில் ஒன்றைக்கூட அவர்கள் செயல்படுத்தவில்லை. ஆனால் ஸ்மார்ட் சிட்டி திட்டம், கலால்துறை, நகராட்சி என அனைத்திலும் ஊழல் கொடிகட்டிப் பறக்கிறது. விதிமுறைகளை மீறி ஆறு மதுபான ஆலைகளுக்கு அனுமதி வழங்கப்பட்ட விவகாரத்தில் ரூ.90 கோடி லஞ்சம் கைமாறியிருக்கிறது. இதை நான் மட்டும் சொல்லவில்லை, காலாப்பட்டு தொகுதியின் பா.ஜ.க எம்.எல்.ஏ-வே சட்டப்பேரவையில் கூறியிருக்கிறார். இவர்களின் மோசமான ஆட்சிக்கு இதெல்லாம்தான் சாட்சி.’’

கிரண் பேடி விஷம் கொடுத்துக் கொன்றார்; தமிழிசை வெல்லம் கொடுத்துக் கொல்கிறார்!

‘‘மாநில அந்தஸ்து இல்லாததால் மன உளைச்சலில் இருப்பதாகவும், அரசு அதிகாரிகள் ஒத்துழைப்பதில்லை என்றும் முதலமைச்சர் வெளிப்படையாகப் பேசியிருக்கிறாரே?’’

‘‘கிரண் பேடி எனக்குக் கொடுத்த தொல்லைகளையும், அதனால் நான் அனுபவித்த வேதனைகளையும் வெளியில் சொல்லவில்லை... ரங்கசாமி வெளியில் சொல்கிறார்... அதுதான் வித்தியாசம். கோப்புகள் தேங்குவதாகவும், மக்களுக்கு எந்த நன்மையும் செய்ய முடியவில்லை என்றும் முதலமைச்சர் புலம்புவதற்குக் காரணம், ஆளுநர் அனைத்துக் கோப்புகளையும் நிறுத்திவைப்பதால்தான். சரியாகச் சொல்ல வேண்டுமென்றால், கிரண் பேடி எங்களுக்கு விஷம் கொடுத்துக் கொன்றார். தமிழிசை தற்போது வெல்லம் கொடுத்துக் கொல்கிறார்.’’

‘‘ஆனால், மாநில வளர்ச்சிக்காக முதலமைச்சருடன் இணக்கமாக இருப்பதாக தமிழிசை கூறுகிறாரே...?’’

‘‘தமிழிசை தாங்கள் சொல்வதைக் கேட்பதில்லை என்றும், அவர் முதலமைச்சருடன் இணக்கமாகச் செயல்படுகிறார் என்றும் பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள் டெல்லிக்குச் சென்று புகாரளித்திருக்கிறார்கள். அங்கிருந்து என்ன உத்தரவு வந்ததோ தெரியவில்லை. அதன் பிறகுதான் ஆளுநர் மாளிகையில் கோப்புகள் நிறுத்தப்படுகின்றன. இதுதான் உண்மை.’’

‘‘ `புதுச்சேரியில், தி.மு.க ஆட்சி மலரும்’ என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் பேசியது குறித்து..?’’

‘‘தி.மு.க தொண்டர்களை ஊக்குவிப்பதற்காக அப்படித் தெரிவித்திருக்கிறார். அதற்காக நாங்கள் ஏன் வருத்தப்பட வேண்டும்... அனைத்துக் கட்சித் தலைவர்களுமே, ‘நாங்கள் ஆட்சிக்கு வருவோம்’ என்றுதான் கூறுவார்கள். தோற்றுவிடுவோம் என்று கூற மாட்டார்கள். எனவே, அவர் பேசியதில் தவறேதும் இல்லை.’’

‘‘வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க-வுடன் கூட்டணி தொடருமா?’’

‘‘என்னால் ஜோசியம் சொல்ல முடியாது.’’