புதுச்சேரி பெருமாள் கோவில் வீதியைச் சேர்ந்த இளம்பெண் ராஜராஜேஸ்வரி, பெங்களூருவில் தகவல் தொழில்நுட்ப வல்லுநராகப் பணியாற்றிவந்தார். 2015-ம் ஆண்டு வயிற்று வலிக்கு சிகிச்சை பெற புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்குச் சென்றார். அங்கு அவருக்கு கர்ப்பப்பையில் நீர்க்கட்டி இருப்பதை கண்டறிந்து அறுவை சிகிச்சை மூலம் அகற்றலாம் என மருத்துவர்கள் ஆலோசனை வழங்கினர். அதையடுத்து 28.12.2015-ம் தேதி மகப்பேறு மருத்துவப் பேராசிரியர் தலைமையிலான மருத்துவர்கள் குழுவால் லேப்ராஸ்கோபிக் சிஸ்டெக்டமி என்னும் அறுவை சிகிச்சை மூலம் நீர்க்கட்டிகளை அகற்றி மறுநாள் டிஸ்சார்ஜ் செய்தனர். ஆனால், அதன் பிறகும் இளம்பெண்ணுக்கு வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, வாந்தி அதிகரித்தது.

அதனால் ராஜராஜேஸ்வரி 30.12.2015, 31.12.2015 ஆகிய தினங்கள் மருத்துவமனைக்குச் சென்றார். அவருக்கு ஏற்பட்ட வலி, அறுவை சிகிச்சையால் ஏற்பட்ட வலி என்றும், அதில் கவலைப்பட ஒன்றுமில்லை என்றும் மருத்துவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். அதையடுத்து வலி குறையாததாலும், வயிற்றுப்போக்கு, வாந்தி அதிகரித்து வந்ததாலும் மீண்டும் ஜிப்மர் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை மேற்கொண்டார். அதையடுத்து வீட்டுக்கு வந்த அவருக்கு, அறுவை சிகிச்சை செய்யப்பட்ட காயத்திலிருந்து மலம் வெளியேறியதால் உடனடியாக அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு லேபரடோமி அவசர அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, பிரச்னைக்கான காரணத்தைக் கண்டறிய வயிறு திறக்கப்பட்டது.
அப்போது பெருங்குடலில் ஒரு பகுதியில் ஒரு செ.மீ அளவு ஒரு துவாரம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் மலம் வயிற்றில் கசிந்து செப்டிசீமியா ஏற்பட்டிருக்கிறது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டார், ஆனால், செப்டிசீமியாவால் பல உறுப்புகள் செயலிழப்பு காரணமாக அவர் 22.01.16 அன்று இறந்தார். லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சையில் அலட்சியமாக இருந்ததால், ஒரே மகள் உயிரிழந்துவிட்டதாக, மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் பெற்றோர் புகாரளித்தனர். இது தொடர்பாக மாநில ஆணையத்தின் நீதிபதிகள் பொங்கியப்பன், டாக்டர் எஸ்.சுந்தரவடிவேலு, உமாசங்கரி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணை நடைபெற்று வந்தது.
விசாரணை முடிவில் அந்த அமர்வு கருப்பையிலுள்ள நீர்க்கட்டிகளை அகற்றும் லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சை உரிய கவனத்துடனும், திறனுடனும் மேற்கொள்ளப்படவில்லை என்று முடிவுசெய்தது. தவறான முறையில் அறுவை சிகிச்சை செய்து நோயாளி உயிரிழந்திருப்பதால், அறுவை சிகிச்சை செய்த மகளிர் மருத்துவ நிபுணரும், ஜிப்மர் மருத்துவமனையும் உயிரிழந்த ராஜராஜேஸ்வரியின் பெற்றோருக்கு மாநில ஆணையத்தில் புகாரளித்த நாளான 17.2.17-லிருந்து 9% வட்டியுடன் ரூ.22,94,986 இழப்பீடாக வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறது.