Election bannerElection banner
Published:Updated:

புதுச்சேரி: `மூன்று தொகுதிகள்தான்!’ - கறார் காட்டும் பா.ஜ.க; வெளியேறுகிறதா அ.தி.மு.க?

புதுச்சேரி
புதுச்சேரி

புதுச்சேரியில் நீண்ட இழுபறிக்குப் பின் பா.ஜ.கவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்த என்.ஆர்.காங்கிரஸ், 16 தொகுதிகளை கறாராகக் கேட்டுப் பெற்றுக்கொண்டது. மீதமிருக்கும் 14 தொகுதிகளை பங்கிட்டுக் கொள்ளும் விவகாரத்தில் பா.ஜ.கவுடன் மல்லுக்கட்டிக் கொண்டிருக்கிறது அ.தி.மு.க.

நீண்ட இழுபறிக்குப் பிறகு தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்திருக்கிறது என்.ஆர்.காங்கிரஸ். அதனைத் தொடர்ந்து கூட்டணிக் கட்சிகளுடன் நடைபெற்ற தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையில் அ.தி.மு.க புறக்கணிக்கப்பட்டது. மார்ச் 9-ம் தேதி தனியார் நட்சத்திர விடுதியில் செய்தியாளர்களை சந்தித்த தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சியினர், கூட்டணியில் இடம்பெற்றுள்ள என்.ஆர்.காங்கிரஸ் 16 தொகுதிகளிலும், மீதமுள்ள 14 தொகுதிகளில் பா.ஜகவும், அ.தி.மு.கவும் போட்டியிடும் என்று அறிவித்து ரங்கசாமியும், பா.ஜ.க. மேலிடப் பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானாவும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

அ.தி.மு.க எம்.எல்.ஏக்களுடன் தமிழக அமைச்சர் எம்.சி.சம்பத்
அ.தி.மு.க எம்.எல்.ஏக்களுடன் தமிழக அமைச்சர் எம்.சி.சம்பத்

தொடர்ந்து அ.தி.மு.க மாநில செயலாளர் அன்பழகனை கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திடச் சொன்னார் நிர்மல்குமார் சுரானா. ஆனால் அ.தி.மு.க.வுக்கு எத்தனை தொகுதிகள் என உறுதியாகாதவரை கையெழுத்திட முடியாது என்று கண்டிப்புடன் தெரிவித்துவிட்டார் எம்.எல்.ஏ அன்பழகன். அதையடுத்து மார்ச் 10-ம் தேதி பா.ஜ.க நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய சுரானா, ‘என்.ஆர்.காங்கிரஸ் 16 இடங்களிலும், பா.ஜ.க 10 இடங்களிலும் போட்டியிடும் என்று தெரிவிக்க, ”கடந்த தேர்தலில் எந்த தொகுதியிலும் வெற்றிபெறாத, ஒரே தொகுதியில் மட்டும்தான் டெபாசிட் வாங்கிய பா.ஜ.க-வுக்கு 10 தொகுதிகள், 4 தொகுதிகளில் வெற்றிபெற்ற எங்களுக்கு இந்த முறை 4 தொகுதிகள்தானா ?” என்று கொதித்து எழுந்திருக்கிறது அ.தி.முக.

அதையடுத்து, “சாரி, தப்பா சொல்லிட்டோம். மூன்று தொகுதிகள்தான் உங்களுக்கு. பா.ம.கவுக்கு ஒரு தொகுதியை கொடுக்க வேண்டும்” என்று சொல்ல ஏகத்துக்கும் உஷ்ணமான அ.தி.மு.க நிர்வாகிகள், ”கடந்த தேர்தலில் 7 இடங்களில் தனித்து போட்டியிட்டு 4 இடங்களில் வெற்றிபெற்றோம். ஆனால் அதேபோல தனித்துப் போட்டியிட்ட பா.ஜ.க ஒரு இடத்தில்கூட வெற்றிபெறவில்லை.

பா.ஜ.க-என்.ஆர்.காங்கிரஸ்-அ.தி.மு.க கூட்டணி
பா.ஜ.க-என்.ஆர்.காங்கிரஸ்-அ.தி.மு.க கூட்டணி

எங்கள் வாக்கு வங்கி 16.8%. ஆனால் வெறும் வெறும் 2.4% வாக்கு வங்கியை வைத்திருக்கும் பா.ஜ.கவுக்கு 10 தொகுதிகள் என்பது எப்படி சரியாகும் ?” என்கின்றனர் புதுச்சேரி அதிமுகவினர். அதேபோல இந்தக் கூட்டணியில் பா.ம.கவுக்கு இதுவரை ஒரு தொகுதியைக் கூட ஒதுக்காததால், கூட்டணியை விட்டு வெளியேறுவதாக அறிவித்த அந்தக் கட்சியின் புதுச்சேரி மாநில அமைப்பாளர் தன்ராஜ் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்திருக்கிறார். அதையடுத்து பா.ம.கவை சமாதானப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

“காங்கிரஸ் கட்சியில் இருந்து முன்னாள் அமைச்சரையும், எம்.எல்.ஏக்களையும் பா.ஜ.கவுக்கு இழுத்து வந்திருக்கிறோம். அவர்கள் அனைவருக்கும் சீட் கொடுத்தே ஆக வேண்டும் என்பதால்தான் 10 தொகுதிகளை நாங்கள் கேட்கிறோம். எங்கள் மாநிலத் தலைவர் சாமிநாதன் இந்த முறை தேர்தலை சந்திக்காமல் விட்டுக் கொடுத்திருக்கிறார்” என்கின்றனர் பா.ஜ.கவினர். ஆனால், “சாமிநாதன் தேர்தலில் நின்றால் மட்டும் வெற்றிபெற்றுவிடுவாரா? 2016 சட்டமன்றத் தேர்தலில் லாஸ்பேட்டை தொகுதியில் அவர் வாங்கியது வெறும் 1,509 வாக்குகள். நாங்கள் கேட்கும் தொகுதியை கொடுக்கவில்லை என்றால் தனித்துக் களமிறங்குவோம்” என்று கொதிக்கின்றனர்.

கொந்தளிக்கும் பி.ஜே.பி… போர்க்கொடி தூக்கும் அ.தி.மு.க… புதுச்சேரி இடைத்தேர்தல் லைவ் ரிப்போர்ட்!

இந்நிலையில் நேற்று மாலை தொகுதி பங்கீடு தொடர்பாக புதுச்சேரி அ.தி.மு.க தேர்தல் பொறுப்பாளரான தமிழக அமைச்சர் எம்.சி.சம்பத், பா.ஜ.க பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்பிறகும் உடன்பாடு எட்டவில்லை என்று தகவல் வெளியாகியிருக்கிறது. இது தொடர்பாக பேச அமைச்சர் எம்.சி.சம்பத்தை தொடர்புகொண்டபோது, “கூட்டணியில் நாங்கள் கேட்கும் தொகுதிகள் கிடைக்கவில்லை. அது தொடர்பாக எங்கள் கட்சித் தலைமையிடம் தெரிவித்திருக்கிறோம். இன்று அல்லது நாளைக்குள் எங்களின் நிலைப்பாட்டை தெரிவிப்போம்” என்றார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு