Published:Updated:

`நான் யார் தெரியுமா?' -மிரட்டும் கரை வேட்டிகள்... திணறும் போலீஸ்; புதுச்சேரி கொரோனா அப்டேட்ஸ்

கொரோனா
கொரோனா

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக புதுச்சேரியில் 144 தடை மற்றும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டும் பொதுமக்களின் ஒத்துழைப்பு இல்லாததால் திணறி வருகின்றனர் போலீஸார்.

கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுச்சேரி அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதனடிப்படையில் மார்ச் 31-ம் தேதி வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால் மக்கள் அதைப் பொருட்படுத்தாமல் எப்போதும்போல தங்களது வழக்கமான பணிகளை மேற்கொண்டதையடுத்து,``புதுச்சேரி மாநிலத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டும், மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது.

சீல் வைக்கப்பட்ட புதுச்சேரி எல்லைகள்
சீல் வைக்கப்பட்ட புதுச்சேரி எல்லைகள்

கொரோனா வைரஸ் விவகாரத்தில் புதுச்சேரி மக்கள் கடும் அலட்சியமாக இருக்கின்றனர். கொரோனாவுக்கு தனிமைப்படுத்துவதை விட வேறு மருந்து கிடையாது. அதனால் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். வருகின்ற 31-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. அதனால் பொதுமக்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும். வீட்டில் இருந்து வெளியே செல்லும் பொதுமக்கள் கண்காணிக்கப்படுவார்கள்” என்று கூறியிருந்தார் முதல்வர் நாராயணசாமி.

அதன்படி நேற்றிரவு முதல் புதுச்சேரியின் எல்லைகள் சீல் வைக்கப்பட்டதால் விழுப்புரம், திண்டிவனம், மரக்காணம், கடலூரில் இருந்து புதுச்சேரிக்குள் வரும் வாகனங்கள் தடுத்து திருப்பி அனுப்பப்படுகின்றன. பேருந்துகள் அனைத்தும் எல்லைப் பகுதிகளேயே திருப்பி அனுப்புவதுடன், அதில் வந்திறங்கும் அனைத்துப் பயணிகளின் பெயர், முகவரி, செல்போன் எண் அனைத்தையும் பெற்றுக்கொண்ட பிறகே நகருக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

எல்லைகளில் தடுத்து நிறுத்தப்படும் வாகனங்கள்
எல்லைகளில் தடுத்து நிறுத்தப்படும் வாகனங்கள்

நகருக்குள் இருசக்கர வாகனங்களில் சென்றவர்களிடம் முக்கியமான காரணங்களின்றி யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்றும் கூறி அனுப்பினர். ஆனால் இன்று நகர்ப் பகுதிகளிலும் நகருக்கு வெளியிலும் எப்போதும் போல மக்கள் கூட்டமாக நின்று பேசிக் கொண்டும், இருசக்கர வாகனங்களிலும் வலம் வந்துகொண்டிருக்கின்றனர்.

அவர்களை தடுத்து நிறுத்தும் போலீஸார் வீட்டை விட்டு வெளியே வந்ததற்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனர். பால், மருந்தகங்கள், அத்தியாவசியப் பொருள்கள் வாங்குபவர்களை மட்டும் அனுமதித்துவிட்டு, மற்றவர்களை திருப்பி அனுப்புகின்றனர். அதனால் பல இடங்களில் போலீஸாருக்கும் பொதுமக்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்படுகின்றது.

போலீஸார் தடுத்து நிறுத்தியதால் மாற்றுப் பாதையில் செல்லும் வாகன ஓட்டிகள்
போலீஸார் தடுத்து நிறுத்தியதால் மாற்றுப் பாதையில் செல்லும் வாகன ஓட்டிகள்
பேருந்தில் வந்த பயணிகளிடம் விசாரணை
பேருந்தில் வந்த பயணிகளிடம் விசாரணை

குறிப்பாக அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களை சமாளிப்பதே போலீஸுக்குக் கூடுதல் வேலையாக இருக்கின்றது. இன்று காலை இந்திராகாந்தி சிலை சந்திப்பில் வந்த வாகனத்தை திருப்பி அனுப்ப முயற்சி செய்த போலீஸாரிடம், ``நான் யார் தெரியுமா ? எனக்கு எம்.எல்.ஏ, மந்திரி எல்லாரையும் தெரியும்” என்று வாக்குவாதம் செய்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அதேபோல பல இடங்களிலும் `கரை வேட்டிகள்’ தங்களின் பலத்தை நிரூபிக்க யார் யாருக்கோ போன் போட்டும் கொடுப்பதால் நொந்துபோய் நிற்கும் போலீஸார், ``கொரோனாவுக்கு எம்.எல்.ஏவை தெரியுமா, எம்.பியை தெரியுமா? இவர்களின் நல்லதுக்காகத்தான் நாங்கள் இங்கே நிற்கிறோம். ஆனால் ஆபத்தை உணராமல் எங்களிடம் வாக்குவாதம் செய்கிறார்கள்’ என்கின்றனர் வேதனையுடன்.

சேதராப்பட்டில் கோட்டக்குப்பம் டி.எஸ்.பி அஜய் தங்கம்
சேதராப்பட்டில் கோட்டக்குப்பம் டி.எஸ்.பி அஜய் தங்கம்

விழுப்புரம் மாவட்டம், வானூர் பகுதி மக்களை தமிழக காவல்துறை கட்டுப்படுத்தாததால், அவர்கள் சேதராப்பட்டு வழியாக புதுச்சேரிக்குச் செல்ல முயற்சி செய்கின்றனர். அதனால், அங்கு போலீஸாருக்கும் பொதுமக்களுக்கும் மோதல் ஏற்பட்டது. அப்போது அங்கு வந்த கோட்டக்குப்பம் டி.எஸ்.பி அஜய் தங்கம், புதுச்சேரி போலீஸாருடன் இணைந்து மக்களைக் கட்டுப்படுத்த இன்று மாலை நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

அதேபோல புதுச்சேரியில் மருந்தகங்கள், `பாண்லே’ பால் நிலையங்கள் திறக்கப்பட்டிருக்கின்றன. பெரிய மார்க்கெட்டில் காய்கறிக் கடைகள் திறந்திருந்தாலும் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் கிடக்கின்றது.

வெறிச்சோடிக் கிடக்கும் பெரிய மார்க்கெட் காய்கறிக் கடைகள்
வெறிச்சோடிக் கிடக்கும் பெரிய மார்க்கெட் காய்கறிக் கடைகள்

புதுச்சேரி சிறிய பகுதி என்பதால் கண்டிப்பாக 4 தெருக்களுக்கு ஒரு எம்.எல்.ஏ இருப்பார்கள். அதனால் முதல்வர் தொடங்கி அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், அரசியல் தலைவர்கள் என அனைவரையும் பொதுமக்களுக்கு நன்கு தெரிந்திருக்கும். ஆனால், ஒரு பேராபத்தை எதிர்கொண்டிருக்கும் இப்படியான தருணத்தில் போலீஸாருக்கு ஒத்துழைக்காமல், அவர்களை மிரட்டும் தங்களது ஆதரவாளர்களை அனைத்துக் கட்சியினரும் கட்டுப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

அடுத்த கட்டுரைக்கு