Published:Updated:

`பலகோடி ரூபாய் வீட்டுமனை; போலி பிரமாண பத்திரம்!' - சிக்கலில் புதுச்சேரி காங்கிரஸ் எம்.எல்.ஏ

சொத்து விவரங்களை மறைத்து, தேர்தல் ஆணையத்திடம் பொய்யான உறுதிமொழிப் பத்திரத்தை அளித்த புதுச்சேரி காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ மீது வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டிருக்கிறது.

காங்கிரஸ் எம்.எல்.ஏ ஜான்குமார்
காங்கிரஸ் எம்.எல்.ஏ ஜான்குமார்

புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தலில், காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர், ஜான்குமார். ரியல் எஸ்டேட் அதிபரான இவர், கடந்த 2016 தேர்தலில் நெல்லித்தோப்பு தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.

எம்.எல்.ஏ ஜான்குமாருடன் முதல்வர் நாராயணசாமி, அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் எம்.பி நமச்சிவாயம்
எம்.எல்.ஏ ஜான்குமாருடன் முதல்வர் நாராயணசாமி, அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் எம்.பி நமச்சிவாயம்

அந்தத் தேர்தலில் பெரும்பான்மை இடங்களைப் பிடித்து காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க இருந்த நிலையில், தேர்தலில் போட்டியிடாத நாராயணசாமி முதல்வரானார். தேர்தலை சந்திக்காமல் முதல்வராகும் ஒருவர், 6 மாதத்திற்குள் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற வேண்டும் என்பது விதி.

ஆனால், முதல்வர் நாராயணசாமிக்கு காங்கிரஸ் கட்சிகுள்ளேயே எதிர்ப்பு இருந்ததால், அவருக்காக தொகுதியை விட்டுக்கொடுக்க யாரும் முன்வரவில்லை. அப்போதுதான் நெல்லித்தோப்பு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஜான்குமார், தனது எம்.எல்.ஏ பதவியை ராஜிநாமா செய்து, தொகுதியை நாராயணசாமிக்காக விட்டுக்கொடுத்தார்.

புதுச்சேரி காங்கிரஸ்
புதுச்சேரி காங்கிரஸ்

அங்கு போட்டியிட்டு வெற்றிபெற்றுத்தான் தனது முதல்வர் பதவியைத் தக்க வைத்துக்கொண்டார், நாராயணசாமி. இந்நிலையில்தான், காமராஜர் நகர் தொகுதியின் எம்.எல்.ஏ-வாகவும், சபாநாயகருமாக இருந்த வைத்திலிங்கம், நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று எம்.பி ஆனதால், இடைத்தேர்தலை சந்தித்தது அந்தத் தொகுதி.

அந்தத் தொகுதியில், முதல்வர் நாராயணசாமியின் ஆதரவுடன் போட்டியிட்டார், ஜான்குமார். அப்போது, ஜான்குமார் தேத்தாம்பாக்கம் கிராமம், குமாரபாளையத்தில் ஜே.வி.ஆர் நகரில் போட்ட பல கோடி ரூபாய் மதிப்புள்ள வீட்டுமனைகள் குறித்த தகவலை மறைத்து, உண்மைக்குப் புறம்பான உறுதிமொழிப் பத்திரத்தை (Fake affidavit) தேர்தல் அதிகாரிகளிடம் சமர்ப்பித்திருப்பதாகப் புகார் எழுந்தது. மேலும், மறைக்கப்பட்ட சொத்து ஆதாரங்களுடன் புதுச்சேரி தேர்தல் ஆணையத்துக்கும் இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கும், ஓதியன்சாலை காவல் நிலையத்துக்கும் போராளிகள் என்ற அமைப்பு புகார் அனுப்பியது.

முதல்வர் நாராயணசாமியுடன் எம்.எல்.ஏ ஜான்குமார்
முதல்வர் நாராயணசாமியுடன் எம்.எல்.ஏ ஜான்குமார்

ஆனால், அப்போது ஜான்குமாரின் வேட்புமனு ஏற்கப்பட்டதாகத் தேர்தல் அதிகாரி அறிவித்ததையடுத்து, ஜான்குமார் வெற்றிபெற்று எம்.எல்.ஏ ஆகிவிட்டார். அதையடுத்து, அந்த அமைப்பு புதுச்சேரி முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் இதுதொடர்பாக தனிநபர் வழக்கைத் தொடர்ந்தது. அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், பொய்யான உறுதிமொழி பத்திரத்தை அளித்து வெற்றிபெற்ற எம்.எல்.ஏ ஜான்குமார் மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும், வழக்குப் பதிவு செய்த விவரத்தை வரும் 12-ம் தேதிக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அதிரடியாக உத்தரவிட்டிருந்தது.

ஆனால் கடந்த 9-ம் தேதி, அந்த உத்தரவின்மீது 2-வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஜான்குமார் சீராய்வு மனுவை தாக்கல்செய்தார். அந்த மனு மீதான விசாரணை, கடந்த 16,18 மற்றும் 19 தேதிகளில் நடைபெற்ற நிலையில், நேற்று மீண்டும் நீதிபதி சுபா அன்பரசன் முன்னிலையில் விசாரணை நடைபெற்றது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஜான்குமார் எம்.எல்.ஏவின் சீராய்வு மனுவைத் தள்ளுபடிசெய்து உத்தரவிட்டார். சீராய்வு மனு தள்ளுபட்டி செய்யப்பட்டிருப்பதால், வருகின்ற 4-ம் தேதிக்குள் எம்.எல்.ஏ ஜான்குமார் மீது வழக்குப் பதிவு செய்து, அதன் நகலை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அப்படி இல்லாதபட்சத்தில், சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தின் அதிகாரிகள், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சந்திக்கும் கட்டாயத்திற்கு தள்ளப்படுவார்கள்.

` 7.85 சதவிகித வாக்குகள்தான் வித்தியாசம்!'- காமராஜர் நகர் நிலவரத்தால் பதறும் புதுச்சேரி காங்கிரஸ்

இதுகுறித்து விளக்கம் கேட்க எம்.எல்.ஏ ஜான்குமாரைத் தொடர்புகொண்டோம்.``அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக என்மீது சிலர் போலியான குற்றச்சாட்டுகளை வைத்திருக்கிறார்கள். உரிய ஆவணங்களுடன் அதை சட்டரீதியாக எதிர்கொள்வேன்" என்பதோடு அவர் முடித்துக் கொண்டார்.