Published:Updated:

புதுச்சேரி: மேலும் ஒரு அமைச்சருக்கு கொரோனா தொற்று! - அச்சத்தில் மக்கள்

புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன்
புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன்

புதுச்சேரியில் சமூகநலத்துறை அமைச்சரைத் தொடர்ந்து, கல்வித்துறை அமைச்சரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது அம்மாநில மக்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.

புதுச்சேரியில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று தீவிரமடைந்து வருகிறது. புதுச்சேரியில் இன்றைய காலை நிலவரப்படி மொத்தம் 5,624 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அதில் 3,355 பேர் குணமடைந்து வீடு திரும்பிவிட்ட நிலையில் 2,180 பேர் ஜிப்மர் மற்றும் இந்திராகாந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று ஒரே நாளில் மட்டும் 245 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில், 89 பேர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்திருக்கின்றனர்.

புதுச்சேரி சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி
புதுச்சேரி சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி

பிரதான எதிர்க்கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பாலன் கொரோனா தொற்றால் உயிரிழந்தார். அதையடுத்து, புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்ற என்ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ ஜெயபாலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவரும், அவரது குடும்பத்தினரும் ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

அவரையடுத்து கடந்தவாரம் சமூகநலத்துறை அமைச்சர் கந்தசாமியின் தாயார் ராஜம்மாளுக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டது. தொடர்ந்து அவரின் குடும்பத்தினருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், அமைச்சர் கந்தசாமி மற்றும் அவரின் மகன் விக்னேஷுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. தொடர்ந்து அவர்கள் இருவரும் ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். ஆனால், அவர்களுக்கு அறிகுறி இல்லாததால் அமைச்சர் கந்தசாமி, அவரின் மகன் விக்னேஷ் இருவரும் வீட்டில் தனிமையில் சிகிச்சை பெற்று வந்தனர். ஆனால், அமைச்சர் கந்தசாமிக்கு காய்ச்சல் ஏற்பட்டதால் இன்று மீண்டும் அவர் சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

புதுச்சேரி: `70 பேரில் இருந்து 100 ஆக மாறும்!' - அதிகரித்த தொற்று; அச்சத்தில் கிரண் பேடி

காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்தவரான கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன், புதுச்சேரி தீயணைப்பு நிலையம் அருகிலிருக்கும் அரசு இல்லத்தில் தங்கியிருக்கிறார். கடந்த 2 தினங்களாக அவருக்கு காய்ச்சல் மற்றும் சளித் தொந்தரவு ஏற்பட்டது. அதனால், இன்று அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து இன்று மதியம் ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு