Published:Updated:

``ஆளுநர் ரவி மோடி, அமித் ஷாவின் கைப்பாவையாகச் செயல்படுகிறார்!” – நாராயணசாமி

நாராயணசாமி

”அரசியலமைப்பை அவமதிப்பு செய்திருப்பதால், ஆளுநர் ரவி அந்தப் பதவியிலிருந்து விலக வேண்டும். இல்லாவிட்டால் குடியரசுத் தலைவர் தலையிட்டு அவரைப் பதவிநீக்கம் செய்ய வேண்டும்.” – புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி

``ஆளுநர் ரவி மோடி, அமித் ஷாவின் கைப்பாவையாகச் செயல்படுகிறார்!” – நாராயணசாமி

”அரசியலமைப்பை அவமதிப்பு செய்திருப்பதால், ஆளுநர் ரவி அந்தப் பதவியிலிருந்து விலக வேண்டும். இல்லாவிட்டால் குடியரசுத் தலைவர் தலையிட்டு அவரைப் பதவிநீக்கம் செய்ய வேண்டும்.” – புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி

Published:Updated:
நாராயணசாமி

புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி இன்று தனது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ``நேற்றைய தினம் தமிழக சட்டமன்றத்தில் நடந்த நிகழ்வுகள் மக்களைத் தலைகுனியச் செய்திருக்கின்றன. தமிழகத்துக்கு ஆளுநராக வந்ததிலிருந்து மாநில அரசுக்கு எதிர்மறையான கருத்துகளைக் கூறிவருகிறார் ஆர்.என்.ரவி. அதுமட்டுமல்ல மாநில அரசின் திட்டங்களை வெளிப்படையாக பொதுமேடைகளில் விமர்சனம் செய்திருக்கிறார். அதனுடைய வெளிப்பாடுதான் நேற்று சட்டமன்றத்தில் நடந்த நிகழ்வுகள். தமிழக முதலமைச்சர் ஆளுநருக்கு ஆளுநர் உரை கோப்பை அனுப்பி, அதற்கு ஒப்புதல் பெற்றிருக்கிறார். அதன் பிறகு சட்டமன்றத்தில் அந்த உரையை ஆளுநர் வாசிக்கும்போது, அவருடைய செயல்பாடுகள் இந்திய அரசியலமைப்புக்கு முரண்பாடானதாகவும், சட்டமன்ற ஜனநாயகத்தைக் குழிதோண்டி புதைப்பதாகவும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை அவமதிப்பதாகவும், தமிழக மக்கள் மீது மக்களுடைய நம்பிக்கையை இழக்கின்ற வகையிலும் அவர் செயல்பட்டிருக்கிறார்.

ஆளுநர் ரவி
ஆளுநர் ரவி

ஆளுநர், அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்ட உரைக்கு ஒப்புதல் அளித்துவிட்டு, அதற்கு முரண்பாடான முறையில் பல பகுதிகளைப் படிக்கும்போது நீக்கியும், சில பகுதிகளைத் திரித்தும், வேறுசில பகுதிகளை மாற்றியும் அவர் உரையாற்றியிருப்பது கண்டனத்துக்குரியது. இந்திய நாட்டில் எந்த மாநிலத்திலும் இதுபோன்ற ஜனநாயகப் படுகொலை, சட்டமன்ற அவமதிப்பு நடந்ததில்லை. அதிகாரமின்றி ஆளுநர், ஆளுநர் உரையில் அவரது சொந்தக் கருத்தைத் திணிப்பது மிகப்பெரிய ஜனநாயகப் படுகொலை. அவருக்கு அந்த அதிகாரமில்லை. அவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அல்ல. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு இருக்கும் அதிகாரத்தை பறிக்கும் வகையில் அவர் செயல்பட்டிருக்கிறார். அத்துடன் தேசிய கீதம் இசைக்கும் முன் வெளியேறி அவமதிப்பு செய்திருக்கிறார். அரசியலமைப்பை அவமதிப்பு செய்திருப்பதால் ஆளுநர் ரவி அந்தப் பதவியிலிருந்து விலக வேண்டும்.

இல்லாவிட்டால் குடியரசுத் தலைவர் தலையிட்டு அவரை பதவிநீக்கம் செய்ய வேண்டும். ஒரு நிமிடம்கூட கவர்னர் பதவியில் இருக்க ரவி தகுதியற்றவர். ஆளுநர் ரவி மோடி, அமித் ஷாவின் கைப்பாவையாகச் செயல்படுகிறார். விரைவில் மோடி அரசு தூக்கி எறியப்படும். அப்போது மாநில அரசுகள் சுதந்திரமாகச் செயல்படும். இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க மதச்சார்பற்ற அணிகளை ஒருங்கிணைக்கும் பணியை ராகுல் செய்துவருகிறார். அதுபோல் நிதிஷ் குமார், சரத் பவார் உள்ளிட்டோர் செய்துவருகின்றனர். கவர்னர் ரவியின் சட்டப்பேரவை செயல்பாடு தமிழகத்தின் கறுப்பு நாள். புதுவையில் சாராய ஆறு ஓடுகிறது. ரெஸ்டோ பார், நடன நிகழ்வு போன்றவற்றால் கலாசாரம் சீரழிந்து மக்கள் அவதியுறுகின்றனர். தொடர்ந்து போராடுவோம். நீதிமன்றமும் செல்வோம். கஞ்சா உட்பட போதைப்பொருள்கள் சரளமாகக் கிடைக்கின்றன. தடைசெய்யப்பட்ட போதைப்பொருள்கள், பள்ளி, பேருந்து நிலையம், கல்லூரி அருகே கிடைக்கின்றன.

இதில் ஒன்றைச் சாப்பிட்டால் இரண்டு மணி நேரம் போதையாக இருக்கும் சூழலால் சிறார்கள் அடிமையாகின்றனர். போதைப்பொருளை ஒழிப்போம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மாநாடு நடத்துகிறார். புதுவையில் பா.ஜ.க - என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியில் போதைப்பொருள் கலாசாரத்தை அமித் ஷாவால் தடுக்க முடியவில்லை. செயல்படாத ஊழல் அரசாக புதுவை அரசு உள்ளது. பா.ஜ.க-வுக்குச் சென்றவர்கள் நடுரோட்டில் நிற்கின்றனர். அதில் ஓர் உதாரணம் ஏனாம் எம்.எல்.ஏ அசோக். ஆளுங்கட்சிக்கு ஆதரவுதரும் எம்.எல்.ஏ-வுக்கு எதிராகப் போராட்டத்தை என்.ஆர்.காங்கிரஸ் நடத்துகிறது. மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே கூட்டணி இருக்கிறது. முதலமைச்சரை விமர்சித்திருந்தால், காவல்துறையை வைத்திருக்கும் பா.ஜ.க அமைச்சர் மூலம் நடவடிக்கை எடுக்காமல் போலியாக வேஷம் போடுகின்றனர். கோமாளிகள் எல்லாம் ஒன்றாக சேர்ந்து ஆட்சி நடத்துகின்றனர்” என்றார்.