Published:Updated:

``மோடிக்கும் அமித் ஷா-வுக்கும் அந்த வலி அப்போது புரியும்..!" – பாஜக-வைப் போட்டுத்தாக்கும் நாராயணசாமி

நாராயணசாமி

``கட்சிமாறிகளால்தான் இந்திய அரசியல் தூய்மையை இழக்கிறது. கட்சிமாறிகளை ஒருகாலத்திலும் மக்கள் ஏற்றுக்கொள்ளக் கூடாது.” – புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி

``மோடிக்கும் அமித் ஷா-வுக்கும் அந்த வலி அப்போது புரியும்..!" – பாஜக-வைப் போட்டுத்தாக்கும் நாராயணசாமி

``கட்சிமாறிகளால்தான் இந்திய அரசியல் தூய்மையை இழக்கிறது. கட்சிமாறிகளை ஒருகாலத்திலும் மக்கள் ஏற்றுக்கொள்ளக் கூடாது.” – புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி

Published:Updated:
நாராயணசாமி

புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி நேற்று தனது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ``மகாராஷ்டிரா மாநிலத்தில் பா.ஜ.க ஆட்சியைக் கொண்டு வருவதற்காக பிரதமரும், உள்துறை அமைச்சரும் முயற்சி செய்து அதில் ஓரளவு வெற்றிபெற்றிருக்கிறார்கள். 2019-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு பா.ஜ.க கூட்டணியிலிருந்து வெளியேறிய சிவசேனா கட்சி, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணியுடன் ஆட்சி அமைத்தது. அதை பொறுத்துக்கொள்ள முடியாத பா.ஜ.க., மெஜாராட்டி இல்லாத தேவேந்திர பட்னாவிஸுக்கு இரவோடு இரவாக கவர்னர் மாளிகையில் பதவிப் பிரமாணம் செய்துவைத்தது. அந்த விவகாரம் நாடு முழுவதும் சர்ச்சையைக் கிளம்பியது. ஆனால் முதல்வராகப் பதவியேற்ற தேவேந்திர பட்னாவிஸ் மெஜாரிட்டியை நிரூபிக்க முடியாமல் தோல்வியுற்றார்.

மோடி - அமித் ஷா
மோடி - அமித் ஷா

அதன் பிறகு உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைந்தது. அந்த ஆட்சியைக் கவிழ்க்க பா.ஜ.க பல முயற்சிகளை மேற்கொண்டது. இப்போது, சிவசேனா எம்.எல்.ஏ-க்களை உடைத்து ஆட்சி மாற்றம் செய்வதற்கு பிரம்ம பிரயத்தனம் செய்துவருகிறது பா.ஜ.க. சிவசேனா கட்சி எம்.எல்.ஏ-க்கள் மும்பையிலிருந்து அஸ்ஸாம் மாநிலம் கவுஹாத்திக்கு அழைத்துச் செல்லப்பட்டு பிணையக் கைதிகளாகத் தங்கவைக்கப்பட்டிருக்கின்றனர். மாநிலம் முழுவதும் இந்தக் கட்சிமாறிகளை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்திவருகிறார்கள். அணி மாறிய எம்.எல்.ஏ-க்கள், அமைச்சர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் தாக்கப்படுகின்றன. தங்களுக்குப் பாதுகாப்பு வேண்டும் என்று பிரிந்து சென்ற அணியின் தலைவர் ஏக்நாத் ஷிண்டே கோரியிருக்கிறார். சிவசேனா கட்சியினர் வீரமிக்கவர்கள். அதனால் கட்சிமாறிகளை அவர்கள் ஏற்கவில்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மும்பைக்கு வந்தால் பெரிய விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று அந்தக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ராவத் கூறியிருக்கிறார். இதனால் சிவசேனாவிலிருந்து பிரிந்து சென்ற எம்.எல்.ஏ-க்கள் அஸ்ஸாமிலிருந்து மும்பைக்கு வர முடியவில்லை. இந்நிலையில் முதல்வர் உத்தவ் தாக்கரே மெஜாரிட்டியை நிரூபிப்பேன் என்று பகிரங்கமாக அறிவித்திருக்கிறார். பா.ஜ.க-வின் தொழில், தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சி அமைப்பதல்ல. குறைவான எம்.எல்.ஏ-க்களை வைத்துக்கொண்டு, காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்கித்தான் பல மாநிலங்களில் பா.ஜ.க ஆட்சியை கொண்டுவந்திருக்கிறது. அதே வேலையைத்தான் இப்போது மகாராஷ்டிராவிலும் செய்கிறது. அதேசமயம் சிவசேனா தொண்டர்கள் இந்தக் கட்சிமாறிகளை ஓட ஓட விரட்டுவோம் என்று கூறுகிறார்கள். இந்த உணர்வு மற்ற மாநிலங்களில் இல்லை. புதுச்சேரியில் கட்சிமாறிகள் ஓடினார்கள். அவர்களில் சிலர் வெற்றிபெற்று வந்திருக்கிறார்கள்.

புதுவை மக்களுக்கு அந்த உணர்வு இருக்க வேண்டும். கட்சிமாறிகளை ஒரு காலத்திலும் மக்கள் ஏற்றுக்கொள்ளக் கூடாது. இப்படிக் கட்சிமாறிகள் வருவதால்தான் இந்திய நாட்டு அரசியல் தூய்மை இழந்திருக்கிறது. ஏக்நாத் ஷிண்டேவிடம் எம்.எல்.ஏ-க்கள் இருந்தாலும் ஆட்சி அமைக்க முடியாத சூழ்நிலையில் இருக்கிறார். இதை நாம் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். பா.ஜ.க என்ன செய்தாலும் மகாராஷ்டிராவில் ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவர முடியாது. சிவசேனாவில் ஏற்பட்ட பிளவுக்கும் தங்களுக்கும் சம்பந்தமில்லை என்று பா.ஜ.க கூறுகிறது. ஆனால் ஆட்சி அமைப்பது தொடர்பாக பா.ஜ.க ரகசியக் கூட்டம் நடக்கிறது. இதே நிலை இனி வரும் காலங்களில் பா.ஜ.க-வுக்கும் ஏற்படும். பா.ஜ.க-வினர் கட்சி மாறி ஓடும்போது மோடிக்கும், அமித் ஷாவுக்கும் அந்த வலி புரியும். கண்டிப்பாக உத்தவ் தாக்கரே நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிபெறுவார் என்பது உறுதி” என்றார்.