Published:Updated:

``அரசு அலுவலகங்களில் புரோக்கர்கள் மிதக்கிறார்கள்!" - புதுச்சேரி அமைச்சர்கள் மீது பாயும் நாராயணசாமி

நாராயணசாமி

``புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி தலைமையில் ஆட்சி வரும் போதெல்லாம் கொலை, கொள்ளை, வழிப்பறி, குண்டு வெடிப்பு, குழந்தை கடத்தல், போலி பத்திரங்கள் மூலம் நில அபகரிப்பு போன்றவை நடக்கிறது." - முன்னாள் முதல்வர் நாராயணசாமி

``அரசு அலுவலகங்களில் புரோக்கர்கள் மிதக்கிறார்கள்!" - புதுச்சேரி அமைச்சர்கள் மீது பாயும் நாராயணசாமி

``புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி தலைமையில் ஆட்சி வரும் போதெல்லாம் கொலை, கொள்ளை, வழிப்பறி, குண்டு வெடிப்பு, குழந்தை கடத்தல், போலி பத்திரங்கள் மூலம் நில அபகரிப்பு போன்றவை நடக்கிறது." - முன்னாள் முதல்வர் நாராயணசாமி

Published:Updated:
நாராயணசாமி

புதுச்சேரி காங்கிரஸ் அலுவலகத்தில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் முதல்வர் நாராயணசாமி, ``காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கே தாட்டூ அணை கட்டுவதற்காக கர்நாடக அரசு பட்ஜெட்டில் முதற்கட்டமாக ரூ.1,000 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது. அதனால் தமிழக அரசு மேக்கே தாட்டூ அணை கட்ட கூடாது என சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. ஆனால், கர்நாடக அரசு சட்டவிதிகளை மீறி ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. மாநில உரிமைகள் மற்றும் உறவுகளை மிகவும் சங்கடப்படுத்தும் வகையில் கர்நாடக அரசு இதை செய்துள்ளது. அதை என்.ஆர் காங்கிரஸ் – பா.ஜ.க கூட்டணி அரசு வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறது. மேக்கே தாட்டூவில் அணை கட்டினால் தமிழ்நாடும், காரைக்காலும் பாதிக்கப்படும்.

பத்திரிகையாளர் சந்திப்பில் நாராயணசாமி
பத்திரிகையாளர் சந்திப்பில் நாராயணசாமி

எனவே, கர்நாடகாவில் மேக்கே தாட்டூ அணை கட்டுவதை நிறுத்த வேண்டும் என்று வருகிற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் புதுவை அரசு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். இல்லையென்றால் மத்திய பா.ஜ.க அரசுக்கும், கர்நாடக பா.ஜ.க அரசுக்கும் புதுச்சேரி மாநில உரிமையை விட்டு கொடுத்து என்.ஆர் காங்கிரஸ் சரணாகதி அடையும் நிலை ஏற்படும். மத்திய அரசு ரஷ்யாவிலிருந்து குறைந்த விலையில் கச்சா எண்ணெயை பெறுகிறது. 5 மாநிலத் தேர்தலுக்காக பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தாமல் இருந்த மத்திய அரசு, தேர்தல் முடிந்தபிறகு இப்போது விலையை உயர்த்தியுள்ளது. இந்த விலை உயர்வு ஏழை மற்றும் நடுத்தர மக்களை மிகப்பெரிய அளவில் பாதிக்கும். எனவே பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வேண்டும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கடந்த ஆட்சியில் கிரண் பேடியால் தடுத்து நிறுத்தப்பட்ட காவலர் பணி தேர்வு தற்போது நடைபெற்று முடிந்துள்ளது. இந்த பணிக்கு ரூ.7 லட்சம் கையூட்டு கேட்கப்படுவதாக ஏற்கெனவே நான் கூறியிருந்தேன். அதன்பிறகு தலைமைச் செயலரும், காவல்துறை தலைவரும் நடவடிக்கை எடுத்து தேர்வு நடத்தியுள்ளார்கள். இதில் எவ்வளவு பணம் கைமாறியது என்று தெரியவில்லை. ஆனால், நியாயமான முறையில் தேர்வு நடைபெற்றதாகக் கூறுகிறார்கள். தகுதியுள்ளவர்களுக்கு வேலை கிடைத்திருக்கும் என்று நினைக்கிறோம். கடந்த காங்கிரஸ் ஆட்சியில் யாருக்கு அதிகாரம் என்று நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தோம். அந்த வழக்கில், அரசின் நிர்வாகத்தில் கவர்னர் தலையிட உரிமை கிடையாது என்று தீர்ப்பு வந்தது.

முதல்வர் ரங்கசாமி!
முதல்வர் ரங்கசாமி!

ஆனால், அவர் அரசின் செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டையாக இருந்து அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வேலைகளை செய்தார். இதனால் அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தோம். அந்த வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் நீதிமன்றம் கூறியுள்ள தீர்ப்புக்கு எதிரான முறையில் செயல்பட்டிருந்தால் நிபந்தனையின்றி மன்னிப்பு கேட்கிறேன் என்று கிரண்பேடி கூறியிருக்கிறார். இதிலிருந்து அவர் நீதிமன்ற தீர்ப்பை அவமதித்தார் என்று ஏற்றுக் கொண்டுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

முதல்வர் ரங்கசாமி தலைமையில் ஆட்சி வரும் போதெல்லாம் கொலை, கொள்ளை, வழிப்பறி, குண்டு வெடிப்பு, குழந்தை கடத்தல், போலி பத்திரங்கள் மூலம் நில அபகரிப்புஆகியவை நடக்கின்றன. இதை செய்வது அரசியல்வாதிகள் தான். முதல்வர் மற்றும் அமைச்சர்கள் அலுவலகங்களில் புரோக்கர்கள் மிதந்து கொண்டிருக்கிறார்கள். பணம் கொடுத்தால்தான் வேலையே நடக்கிறது. ரூ.10 லட்சம் பணம் கொடுத்தால் பள்ளி, கோயில், மருத்துவமனை அருகில் மதுக்கடைகளை திறந்து கொள்ளலாம். மாமூல் வாங்குவது சகஜமாக நடக்கிறது.

மேக்கே தாட்டூ
மேக்கே தாட்டூ

பொதுப்பணித்துறையில் பணிகளுக்கு கமிஷன் பெறப்படுகிறது. முதல்வர் கண்டுகொள்ளாததால் அவருக்கு கீழே இருப்பவர்கள் முறைகேடு செய்கிறார்கள். இந்த அரசு ஊழலில் திளைத்துள்ளது. இதுகுறித்து கேட்டால் நாராயணசாமி சொத்து கணக்கு காட்டுவாரா என கேள்வி எழுப்புகின்றனர். என்னுடைய சொத்து கணக்கை வருமான வரித்துறையில் கொடுத்துள்ளேன். வருமான வரி கட்டியுள்ளேன். அதற்கான பொது ஆதாரம் வருமானத்துறையில் உள்ளது.

யார் வேண்டுமானாலும் சென்று பார்த்துக் கொள்ளட்டும். தேர்தலில் நிற்கும்போது என்னுடைய சொத்து எவ்வளவு என்று கணக்கு கொடுத்துள்ளேன். அதற்கு மேல் சொத்து சேர்த்திருந்தால் நடவடிக்கை எடுக்க சொல்லுங்கள். பல மிரட்டல்களை பார்த்து விட்டுதான் வந்துள்ளேன். இதற்கெல்லாம் அஞ்சமாட்டேன். என்.ஆர்.காங்கிரஸ் – பா.ஜ.க ஆட்சி அமைந்து இன்னும் ஒரு வருடம் ஆகவில்லை. அதனால் ஒருவருடம் முடிந்த பிறகு அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிடுவேன்.

இந்த ஊழல் நிறைந்த ஆட்சி, மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத ஆட்சி, வாக்குறுதிகளை நிறைவேற்றாத ஆட்சி. எங்களது ஆட்சியில் கிரண் பேடி தடுத்து நிறுத்திய திட்டங்களை இந்த ஆட்சியில் செய்துவிட்டு சாதனையாக கூறுகிறார்கள். இவர்களது சாதனை என்ன? மத்தியில் இருந்து அதிக நிதி பெற்றார்களா? மாநில அந்தஸ்து வாங்கினார்களா? கடனை தள்ளுபடி செய்தார்களா? அல்லது நிதி கமிஷனில் சேர்த்தார்களா? எதுவும் கிடையாது. சொகுசு கார்களில் செல்கிறார்களே தவிர இந்த ஆட்சியில் எதுவும் நடக்கவில்லை" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism