Published:Updated:

“மல்லாக்கப் படுத்துக்கொண்டு எச்சில் துப்பக் கூடாது!”

நாராயணசாமி
பிரீமியம் ஸ்டோரி
நாராயணசாமி

நாராயணசாமி அட்வைஸ்...

“மல்லாக்கப் படுத்துக்கொண்டு எச்சில் துப்பக் கூடாது!”

நாராயணசாமி அட்வைஸ்...

Published:Updated:
நாராயணசாமி
பிரீமியம் ஸ்டோரி
நாராயணசாமி

‘15 நாள் நாராயணசாமி’ என்று அழைக்கப்பட்டவரின் ஆட்சி, புதுச்சேரியில் 10 நாள்களுக்கு முன்பாகவே கவிழ்ந்திருக்கிறது. கூட்டணிக் கட்சியான தி.மு.க-வும் பெரிதாக அலட்டிக்கொள்ளாத நிலையில், மிகவும் நெருக்கமாக இருந்த சொந்தக் கட்சியினரையே கையில் வைத்துக்கொள்ள முடியாமல் தனித்துவிடப்பட்டிருக்கிறார் நாராயணசாமி. ‘நமச்சிவாயத்துக்குக் கொடுத்த வார்த்தை தவறிவிட்டார்...’ ‘அமைச்சர் உடனிருக்கும்போது வாய் மூடிக்கொண்டிருந்துவிட்டு, இப்போது பேசுகிறார்’ என்றெல்லாம் நாராயணசாமி மீது எழுந்திருக்கும் விமர்சனங்கள் ஏராளம். இதைப் பற்றியெல்லாம் அவரிடமே நேரில் சந்தித்துக் கேட்டோம்...

“கடந்த ஐந்து ஆண்டுகளாக துணைநிலை ஆளுநர் கிரண் பேடியைக் குறை சொன்னதை மட்டும்தான் செய்தீர்கள். ஆனால், நீங்களே மத்திய அமைச்சராக இருந்தபோது ஒருமுறை, ‘யூனியன் பிரதேசங்களில் துணைநிலை ஆளுநருக்குத்தான் கூடுதல் அதிகாரம்; மாநில அரசு அவருடன் இணக்கமான போக்கைத்தான் கடைப்பிடிக்க வேண்டும்’ என்று கூறியிருக்கிறீர்களே..?”

“துணைநிலை ஆளுநருக்குச் சில அதிகாரங்கள் இருக்கின்றனதான். தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும் சில அதிகாரங்கள் இருக்கின்றன. அதன்படி நடக்க வேண்டும் என்று கூறினேன். எங்கள் அதிகாரத்தில் நீங்களும், உங்கள் அதிகாரத்தில் நாங்களும் தலையிட மாட்டோம் என்றும் சொன்னேன்.”

“ஆனால், ஆளுநரைச் சந்திப்பதை நீங்கள் முற்றிலும் தவிர்த்துவந்தீர்களே?”

“கிரண் பேடி ஆளுநராகப் பொறுப்பேற்ற ஆறு மாதங்களில் மூன்று முறை சந்தித்தேன். அப்போது, ‘அமைச்சர்களையும் எம்.எல்.ஏ-க்களையும் என்னிடம் விட்டுவிடுங்கள். நாம் இருவரும் இணைந்து செயல்படலாம்’ என்று கூறினார். அவர்களை எப்படி விட்டுக்கொடுக்க முடியும்? அதேபோல, ‘முதல்வரைப் பற்றிக் கண்டுகொள்ளாதீர்கள். நேராக என்னிடம் வாருங்கள்’ என்று அமைச்சர்களிடம் கூறினார். இப்படிப் பிரித்தாளும் உத்தியைச் செய்ததால்தான் அவரைச் சந்திப்பதைத் தவிர்த்தேன்.”

“மல்லாக்கப் படுத்துக்கொண்டு எச்சில் துப்பக் கூடாது!”

“ஆட்சி நிறைவடைய பத்து நாள்களே இருக்கும் நிலையில் ஆட்சியைக் கவிழ்ப்பதற்கான காரணம் என்ன?”

“எந்த மாநிலத்திலும் எதிர்க்கட்சிகள் ஆட்சியில் இருக்கக் கூடாது என்று நினைக்கிறது பா.ஜ.க. அதுதான் காரணம். அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள்மீது ஏதாவது வழக்கு இருந்தால் வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, சி.பி.ஐ மூலம் மிரட்டி அவர்கள் பக்கம் இழுக்கிறார்கள். ஒப்புக்கொள்ளவில்லையென்றால் பொய் வழக்கு போட்டு மிரட்டுகிறார்கள். கோடிக்கணக்கில் பணத்தைக் கொடுத்து எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்குகிறார்கள். இதுதான் புதுச்சேரியிலும் நடந்தது.”

“அப்படியென்றால், காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் விலைபோகும் அளவுக்கு பலவீனமாக இருக்கிறார்கள் என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா?”

“அப்படிக் கிடையாது. ராஜஸ்தானிலும், மகாராஷ்டிராவிலும் ஆட்சியைக் கவிழ்க்க எவ்வளவோ முயன்றார்கள். முடியவில்லை.

புதுச்சேரியில் இப்போது அல்ல... கடந்த நான்கு ஆண்டுகளாகவே ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிகள் நடைபெற்றன. அமித் ஷா கட்சித் தலைவராக இருக்கும்போதே புதுச்சேரிக்கு வந்து தங்கி, ரங்கசாமியுடன் சேர்ந்து ஆட்சியைக் கவிழ்க்க நினைத்தார். தமிழ்நாட்டிலிருந்து பா.ஜ.க தலைவர் வந்து முயன்றார். கர்நாடகா விலிருந்தும் முயன்றார்கள். அனைத்தையும் முறியடித்தேன். கடைசியாக ஆட்சி முடிவடைய பத்து நாள்கள் இருக்கும்போதுதான் அவர்களால் ஆட்சியைக் கவிழ்க்க முடிந்தது.”

“முன்னாள் அமைச்சர் நமச்சிவாயமும், எம்.எல்.ஏ தீப்பாய்ந்தானும் எந்த அடிப்படையில் பா.ஜ.க-வில் இணைந்திருக்கிறார்கள்?”

“நமச்சிவாயம் ரியல் எஸ்டேட் தொழில் செய்துவந்தார். அதில் என்ன தவறு நடந்தது என்று எனக்குத் தெரியவில்லை. ஆட்சி முடியும்வரை முக்கியத் துறைகளை கையில் வைத்திருந்தவர், கட்சியின் தலைவராகவும் இருந்தார். அப்படிப்பட்டவர் பா.ஜ.க-வில் சேர்கிறார் என்றால் எந்த அளவுக்கு மிரட்டப்பட்டிருப்பார் என்று பார்த்துக் கொள்ளுங்கள். தீப்பாய்ந்தானை விலைக்கு வாங்கிவிட்டார்கள்.”

“நமச்சிவாயம் தவறு செய்கிறார் என்று ஏற்கெனவே உங்களுக்குத் தெரியவில்லையா?”

“அமைச்சராக இருக்கும்போது அவர்மீது பல்வேறு புகார்கள் வந்தன. அது குறித்துப் பலமுறை அவரை நேரில் அழைத்துப் பேசியிருக்கிறேன்.”

“ஆனால், நமச்சிவாயமோ, ‘அரசின் நிர்வாகச் சீர்கேடு காரணமாகத்தான் வெளியேறினேன்’ என்று கடுமையாக விமர்சித்திருக்கிறாரே?”

“ஆட்சியில் அவருக்கு அதிருப்தி இருந்திருந்தால், மூன்றாண்டுகளுக்கு முன்பே போயிருக்கலாமே? அமைச்சரவையில் அங்கமாக இருந்தவரே எப்படி நிர்வாகச் சீர்கேடு பற்றிப் பேச முடியும்? மல்லாந்து படுத்துக்கொண்டு எச்சில் துப்பினால் நம்மீதுதான் விழும்.”

“2016-ல் தனக்கு துரோகம் இழைத்துவிட்டதாகவும் நமச்சிவாயம் உங்கள்மீது குற்றம்சாட்டியிருக்கிறாரே?”

“2016 தேர்தலுக்கு முன்பு இதே அறையில்தான் அவர் என்னைச் சந்தித்தார். அப்போது, ‘நீங்கள் முதல்வராக இருங்கள், 2019 நாடாளுமன்றத் தேர்தலில் நீங்கள் நாடாளுமன்றத்துக்குச் செல்லும்போது, நான் முதல்வராவதற்கு எனக்கு உதவி செய்யுங்கள்’ என்றுதான் சொன்னார். அந்த ஒப்பந்தம் குறித்து கட்சித் தலைமையிடமும் கூறினேன். இப்போது அவர் பொய் சொல்கிறார்.”

“மல்லாக்கப் படுத்துக்கொண்டு எச்சில் துப்பக் கூடாது!”

“ஆனால், 2016 தேர்தலின்போது, ‘நமச்சிவாயம் தலைமையில் ஆட்சி அமையும்’ என்று நீங்கள்தானே கூறினீர்கள்?”

“கட்சித் தலைவரின் தலைமையில் தேர்தலைச் சந்திப்பதுதான் காங்கிரஸ் கட்சியின் வழக்கம். அதைத்தான் நானும் சொன்னேன். ஆனால், ‘நமச்சிவாயம் தலைமையில் ஆட்சி அமைப்போம்’ என்று நான் சொல்லவில்லை. தேர்தலின்போது ‘வெற்றிபெறுவோம்’ என்று சொல்வோமே தவிர ‘ஆட்சி அமைப்போம்’ என்று எப்படிச் சொல்ல முடியும்? காங்கிரஸ் கட்சியில் குறிப்பிட்ட நபர் தலைமையில் ஆட்சி அமைப்போம் என்று யாரையும் சொல்ல மாட்டார்கள்.”

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

“உங்களுக்காகத் தொகுதியை விட்டுக்கொடுத்தவர் ஜான்குமார். ‘அப்பா... அப்பா...’ என்றும் சுற்றிவந்தார்... அவரே வெளியேறியது ஏன்?”

“அவர்மீது வருமான வரித்துறை வழக்கு இருக்கிறது. 22 கோடி ரூபாய் வருமானவரி செலுத்த வேண்டும். அவர்மீதுள்ள வழக்கைத் துரிதப்படுத்துவோம் என்று மிரட்டித்தான் ராஜினாமா செய்யவைத்திருக்கிறார்கள். அவர் பணத்துக்கு விலை போகக்கூடியவர் அல்ல.”

“ ‘தேர்தலில் போட்டியிடாமலேயே நீங்கள் முதல்வரானதுதான் இவ்வளவு பிரச்னைகளுக்கும் காரணம்’ என்று உங்கள்மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு குறித்து..?”

“முதல்வர் பதவிக்கான களத்தில் நானும் நமச்சிவாயமும்தான் இருந்தோம். எங்கள் எம்.எல்.ஏ-க்கள் 15 பேரில் 14 பேர், நான்தான் முதல்வராக வேண்டும் என்று வாக்களித்தார்கள். நமச்சிவாயத்துக்கு அவர் மட்டும்தான் ஓட்டுப் போட்டுக்கொண்டார். அதன் பிறகுதான் கட்சித் தலைமை என்னை முதல்வராக அறிவித்தது.”

“கூட்டணியில் இருந்துகொண்டே ‘புதுச்சேரியின் 30 தொகுதிகளிலும் தி.மு.க தலைமையில் ஆட்சி’ என்று பேசினார் ஜெகத்ரட்சகன். கடைசி நேரத்தில் ராஜினாமா செய்த தி.மு.க எம்.எல்.ஏ மீதும் தாமதமாகத்தான் தற்காலிக நடவடிக்கை எடுத்தார் ஸ்டாலின். கூட்டணிப் பங்கீட்டில், தமிழகத்தில் காங்கிரஸுக்குக் குறைவான தொகுதிகளை ஒதுக்குவதற்காக தி.மு.க வைக்கும் ‘செக்’ என்று இதை எடுத்துக்கொள்ளலாமா?”

“அப்படியெல்லாம் இல்லை. தமிழகத்தில் தி.மு.க-வின் பலம் அதிகம். காங்கிரஸின் பலம் கொஞ்சம் குறைவு. புதுச்சேரியில் அந்த நிலை அப்படியே மாறும். இதெல்லாம் நாங்கள் கலந்துபேசி சரிசெய்துகொள்வோம்.”

“பிரதமர் மோடி, ‘கட்சித் தலைவரின் காலணியை எடுக்கத் தெரிந்த நாராயணசாமிக்கு ஆட்சி அமைக்கத் தெரியவில்லை’ என்றும், ‘பாதிக்கப்பட்ட மீனவப் பெண் பேசியதை, ராகுல் காந்தியிடமே மாற்றிப் பொய் சொன்னவர்’ என்றும் உங்களை வறுத்தெடுத்திருக் கிறாரே?”

“பொதுக்கூட்டத்தில் தரம் தாழ்ந்து பேசியிருக்கிறார் பிரதமர் மோடி. எங்கள் தலைவர் மூன்றாண்டுகளுக்கு முன்பு புதுச்சேரியில் வெள்ளச் சேதங்களைப் பார்வையிட வந்தபோது, சாலையில் தேங்கியிருந்த தண்ணீர் ஷூவுக்குள் சென்றதால் அதைக் கழற்றிவிட்டார். வெறும் காலுடன் அவர் நடக்க முடியாது என்பதால் வேறொருவர் செருப்பை மாட்டிக்கொண்டு, எனது செருப்பை அவருக்குக் கொடுத்தேன். இதிலென்ன தவறு இருக்கிறது? மொழிபெயர்ப்பிலும் நான் தவறும் செய்யவில்லை. அந்தப் பெண்மணி பேசும்போது ‘நிவர் புயல்’ என்று சொன்னதாகத்தான் என் காதில் விழுந்தது. ‘யாரும் வரவில்லை’ என்று அவர் சொன்னது என் காதில் விழவில்லை. ஆனால், புயல் அடித்த நான்கு மணி நேரத்தில் அந்தப் பெண்மணி கூறிய அதே இடத்தில் நானும், வருவாய்த்துறை அமைச்சரும், தொகுதியின் அ.தி.மு.க எம்.எல்.ஏ-வும் இருந்தோம். அதற்கான வீடியோவையும் வெளியிட்டிருக்கிறோம்.”

“வரும் தேர்தலில் போட்டியிடுவீர்களா?”

“கட்சித் தலைமை சொன்னால் போட்டியிடுவேன்.”